Monday, July 28, 2014

தந்தை செய்யாத தவறுக்கு மகளை துரத்தும் உலகம்!!!




உக்ரைனில் மலேசிய விமானம் வீழ்த்தப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக நெதர்லாந்தில் வசித்து வரும் ரஷ்ய அதிபர் புதினின் மகளுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவர் வெளியேற வேண்டும் என்ற அரசியல் தலைவர் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.
உக்ரைனில் கடந்த 17ம் தேதி ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் பகுதியின் மேலே பறந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. இதில் 298 பயணிகளுடன் நடுவானில் விமானம் வெடித்து சிதறியது. இந்த தாக்குதலுக்கு கிளர்ச்சியாளர்கள்தான் காரணம் என உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் ரஷ்ய ஆதரவுடன் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனால் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்க ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜி 7 நாடுகளை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையில் ரஷ்ய அதிபர் புதினின் மூத்த மகளான மரியா புதினா நெதர்லாந்தில் தனது பாய்பிரண்டான நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஜோரிட் பாசனுடன் வசித்து வருகிறார். ஜோரிட் பாசன் ரஷ்யாவுக்கு சொந்தமான காஸ் பைப் கட்டுமான நிறுவனத்தில் உயர் பதவியில் வேலை செய்து வருகிறார்.
மலேசிய விமான தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் நெதர்லாந்து நாட்டினர் என்பதால் அங்கு ரஷ்யாவுக்கும் புதினுக்கும் எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து சமூக வலைதளங்களில் புதின் எதிர்ப்பாளர்கள் மரியா புதினா வசிக்கும் பென்ட்ஹவுஸ் அபார்ட்மென்ட் பகுதிக்கு சென்று உங்களுடைய எதிர்ப்பை தெரிவியுங்கள் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதற்கிடையில் அந்த அபார்ட்மென்ட் அமைந்துள்ள ஹில்வர்சம் நகர மேயர் பீட்டர் புரோயர்ட் ஜெய் வானொலி பேச்சின் போது மலேசிய விமானத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் துக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. இதற்கு காரணமான ரஷ்ய அதிபரின் மகளான மரியா புதினை நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
பின்னர் அவரது பேச்சிற்கு எதிர்ப்பு கிளம்பவே தனது டுவிட்டர் தளத்தில் நான் வானொலியில் உணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டேன். மிகவும் துயரமான நேரத்தில் அவ்வாறு விரக்தியாக பேச நேர்ந்தது என்று வருத்தம் தெரிவித்திருந்தார். இருந்த போதிலும் மரியாவுக்கு எதிராக அங்கு போராட்டங்கள் நடக்க வாய்ப்புள்ளதால் அவரது வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
 

No comments:

Post a Comment