Thursday, July 31, 2014

இஸ்ரேலின் வெறியாட்டம் - 1321 பேர் பலி!

காஸா பள்ளத்தாக்கு மீது இஸ்ரேல் நடத்தி வரும் மும்முனைத் தாக்குதல்களில் நேற்று மட்டும் 90 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 260க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்தனர்.
கான் யூனிஸ் நகரின் பிரபல வர்த்தகப் பகுதி மீது இஸ்ரேல் படைகள் நடத்திய உக்கிர தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததுடன், 150-க்கு அதிகமானோர் காயமடைந்தனர்.
வடக்கு காஸாவின் ஜபாலியா பகுதியில் ஐ.நா.சபை நடத்தி வரும் பெண்கள் ஆரம்ப பாடசாலையில் சுமார் மூவாயிரம் பாலஸ்தீனியர்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்
இந்த பாடசாலை மீது இஸ்ரேல் ராணுவத்தின் பீரங்கி தாங்கிய வாகனங்கள் நடத்திய ஈவிரக்கமற்ற தாக்குதலில் குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்ததுடன், 90-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் சேர்த்து கடந்த 24 நாட்களாக காஸா பகுதி மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 1,321 ஆக உயர்ந்துள்ளது.
பலியானவர்கள் மற்றும் காயமடைந்த சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களில் அப்பாவி குழந்தைகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகம் என மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை முன்னறிவிப்பு இன்றி பாடசாலை மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வடக்கு காஸாவில் உள்ள ஐ.நா. நடத்தி வரும் ஜபாலியா பெண்கள் ஆரம்ப பாடசாலையில் அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர் என்பதை இஸ்ரேல் ராணுவத்துக்கு நாங்கள் இது வரை 17 முறை தெரியபடுத்தி விட்டோம். குறிப்பாக, இந்த தாக்குதல் நடத்தப்படுவதற்கு முந்தைய இரவு கூட இது தொடர்பாக இஸ்ரேலுக்கு அறிவித்துள்ளோம்.
தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்துவதை விட மிகவும் வெட்கக் கேடான விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது. மிகவும் வெட்கக் கேடானதும், நியாயப்படுத்த முடியாததுமான இந்த கொடூர தாக்குதலை நான் மிக வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த தாக்குதலை நடத்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். உடனடியாக, தாக்குதல்களை கைவிட்டு நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு  இரு தரப்பினரும் உடன்பட வேண்டும்.
இந்த மோதலுக்கான அடிப்படை காரணம் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள நிலையில், பேச்சு வார்த்தை மூலம் அவற்றுக்கு தீர்வு காண இரு தரப்பினரும் முன்வர வேண்டும் என பான் கி மூன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment