Tuesday, June 24, 2014

சாதாரண மக்களால் பார்க்கப்பட முடியாமல், பெரிய ராணுவ தளம் ஒன்றுக்குள் இந்த ரகசிய சிறைச்சாலை அமைந்துள்ள விஷயம் லீக் ஆனது !




எகிப்தில் நடக்கும் உள்நாட்டு யுத்தம் காரணமாக எகிப்திய அரசுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், சர்வதேச அளவில் மற்றொரு மெகா பிரச்னையை சந்திக்கும் நேரம், இப்போது வந்துள்ளது. வெளியுலகுக்கு தெரியாமல் அங்கு இயங்கும் சிறைச்சாலை பற்றிய ரகசியம் லீக் ஆகியுள்ளது! சாதாரண மக்களால் பார்க்கப்பட முடியாமல், பெரிய ராணுவ தளம் ஒன்றுக்குள் இந்த ரகசிய சிறைச்சாலை அமைந்துள்ள விஷயத்தை பிரிட்டிஷ் மீடியா வெளியிட்டு, எகிப்திய அரசை அதிர வைத்துள்ளது.
இதுவரை எகிப்திய மக்களுக்கே தெரியாமல் இயங்கிவந்த இந்த ரகசிய சிறைச்சாலை, எங்கோ ஒதுக்குப் புறத்தில் இல்லை, தலைநகர் கய்ரோவில் இருந்து வெறும் 90 கி.மீ. தொலைவில்தான் உள்ளது. சரி. யாருக்கும் தெரியாமல் இந்த சிறைச்சாலையை எப்படி ராணுவ தளத்துக்குள் மறைத்து வைத்திருந்தார்கள் ? அசோலி என்ற இடத்தில் அமைந்துள்ளது இந்த ராணுவத்தளம். எகிப்திய ராணுவத்தின் இரண்டாவது தலைமையகமான இஸ்மாயிலியா தளத்தின் நிர்வாகத்தின் கீழ்தான் அசோலியில் உள்ள ராணுவ பில்டிங்குகள் வருகின்றன. இதன் பில்டிங்குகளில் ஒன்றின் 3-வது மாடியும், அதற்கு மேலுள்ள மாடி ஃபுளார்களும், ராணுவ தளத்தில் பணிபுரியும் ஆட்கள்கூட செல்ல முடியாதபடி, கடும் கட்டுக் காவலுடன் உள்ளது.
இந்த ஃபுளோர்களில்தான், ரகசிய சிறைச்சாலை இயங்குகிறது. எகிப்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் அவ்வப்போது காணாமல் போவது வழக்கம். இவர்களுக்கு என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியவருவதில்லை. ராணுவ உளவுத்துறையின் ஒரு ‘குழுவினால்’ கடத்திச் செல்லப்படும் இவர்கள், இந்த சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அசோலி சிறை, எகிப்திய நீதித்துறை சிஸ்டத்தில் இல்லை. இப்படியொரு சிறை இருப்பதற்கான பதிவுகள், எகிப்திலுள்ள எந்த நீதிமன்றத்திலும் இல்லை. இதனால், இங்கு கைதிகளாக உள்ளவர்கள் தொடர்பான ரிக்கார்ட்டுகளும் அதிகாரபூர்வமாக யாரிடமும் இல்லை.
இந்த சிறையில் இருந்து எப்படியோ வெளியே வந்துவிட்ட சிலர் பிரிட்டிஷ் மீடியாவுக்கு கொடுத்த தகவல்களின் அடிப்படையில் அந்த மீடியா சில புலனாய்வு நடவடிக்கைகளை செய்ததில், இங்கு சுமார் 400 பேர் வரை அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. எகிப்தில் ஏற்கனவே சுமார் 16,000 அரசியல் கைதிகள் பல்வேறு சிறைகளில் உள்ளனர். அவர்கள் அனைவர் குறித்தும் பதிவுகள் உள்ளன. ஒரு நாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் அவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வழக்கு நடக்கிறது. ஆனால. இந்த 400 பேரின் பெயர்களில் வழக்குகள்கூட கிடையாது. தற்போது இந்த விவகாரம் லீக் ஆனதையடுத்து, ஐ.நா. முதல், மனித உரிமை அமைப்புகள் வரை, எகிப்திய அரசின்மீது பாயப் போகின்றன!

No comments:

Post a Comment