Tuesday, June 24, 2014

யாழ் வாழைத் தோட்டத்தில் கசிப்புக் காய்ச்சிய பாடசாலை மாணவர்கள் !


பேக்கரி ஒன்றி வேலை செய்யும் நண்பன் ஒருவருடன் வாழைத் தோட்டம் ஒன்றினுள் கசிப்புக் காச்சிக் கொண்டிருந்த மாணவர்கள் அந்தத் தோட்ட உரிமையாளரால் பிடிக்கப்பட்டனர்.இவர்கள் வாழைத் தோட்டத்தில் வைத்து தகர வாளி ஒன்றினுள் அழுகிய வாழைப்பழங்கள் மற்றும் பாணுக்கு போடும் ஈஸ்ட் ஆகியவற்றை வைத்து கசிப்புத் தயாரித்துக் கொண்டு இருந்ததாகவும். வாளியை முடி அதனூடா ரப்பர் குழாயை வைத்த இன்னொரு பாத்திரத்தில் ஆவியை சேகரித்ததாகவும் தெரியவருகின்றது.
இவர்கள் கசிப்புத்தான் காய்ச்சுகின்றார்கள் என்பதை அறியாத அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அவர்களை என்ன செய்கின்றீர்கள் எனக் கேட்ட போது பாடசாலையில் நடந்த விஞ்ஞான பாடத்தின் செயல்முறையைப் பார்த்துக் கொண்டு இருப்பதாகவும் இரும்புப் பாத்திரங்களில் காய்கறிகளை அவிப்பதால் உடலுக்கு ஏற்படும் தீங்குகளைப் பற்றி ஆய்வு செய்து கொண்டு இருப்பதாகவும் அந்த விவசாயிக்கு தெரிவித்துள்ளனர்.
இருந்தும் இவர்களது நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட அந்த விவசாயி குறித்த தோட்ட உரிமையாளரிடம் சொல்லி அவரை வரவழைத்து அவர்களிடம் கூட்டிச் சென்ற போது அந்த மாணவர்கள் கசிப்புக் காய்சியது தெரியவந்துள்ளது. காய்ச்சிய மாணவர்கள் இருவர் ஓடிவிட மற்றைய மூவரும் பேக்கரியில் வேலை செய்த 18 வயது இளைஞனும் தோட்ட உரிமையாளரிடம் பிடிபட்டுள்ளனர்.
இதன் பின்னர் அங்கு கூடிய அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களால் பிடிபட்ட மாணவர்களும் பேக்கரி இளைஞனும் நையப்புடைக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னர் சைக்கிளை விட்டு ஓடிய ஏனைய இரு மாணவர்களது பெற்றோரும் அடிவாங்கிய மாணவர்களது பெற்றோரும் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் மாணவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களில் இருவர் 15 வயதானவர்கள் எனவும் மற்றைய மூவரும் 16 வயதானவர்கள் எனவும் தெரியவருகின்றது. மாணவர்களில் ஒரு மாணவனின் தந்தை அரசாங்க உத்தியோகத்தர் எனத் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment