Tuesday, June 24, 2014

எமிரேட்ஸ் ஏர்வேஸ் விமானத்தை லாகூருக்கு கடத்தியது பாகிஸ்தான் அரசுதான் !


“நான் பயணம் செய்த எமிரேட்ஸ் ஏர்வேஸ் விமானத்தை பாகிஸ்தான் அரசு ஹைஜாக் செய்தது” என்று கூறியுள்ளார், பாகிஸ்தானிய மதகுரு பிளஸ் அரசியல்வாதி ஒருவர்.“பாகிஸ்தான் அரசே விமானத்தை கடத்தியது” என்ற இந்த அதிரடி ஸ்டேட்மென்டின் பின்னணியில் திக்திக் சம்பவம் ஒன்று இஸ்லாமபாத்திலும், லாகூரிலும் நடந்துள்ளது.துபாயில் இருந்து இஸ்லாமபாத் நோக்கி வந்த எமிரேட் ஏர்வேஸ் விமானம் ஒன்று இஸ்லாமபாத்தில் இறங்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் விமானம் வானில் ஒரு மணி நேரம் சுற்றிக்கொண்டு இருந்தது. விமானத்தில் எரிபொருள் அளவு சரியாக குறைந்து போகவே, இறுதியில் விமானத்தை திசைதிருப்பி, லாகூர் விமான நிலையத்துக்கு செல்லுமாறு இஸ்லாமபாத் ஏர்-ட்ராஃபிக் கன்ட்ரோல் டவர் கூறியது.
இந்த விமானம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட லாகூர் விமான நிலையத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்த பரபரப்பு சம்பவத்துக்கு காரணமே, அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் ஒருவர், கனடாவில் வசிக்கும் பாகிஸ்தானிய மதகுரு பிளஸ் அரசியல்வாதி என்பதுதான்!கனடாவில் வசிக்கும் தாஹிர்-உல்-கத்ரி, பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான அரசியல் இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார். அத்துடன் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீத் கட்சியினரால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் வெளிப்படையாக இவர் குற்றம்சாட்டியிருந்தார். லாகூர் நகரில் அக்கட்சியினர் தம்மை கொல்ல சதித் திட்டம் தீட்டியுள்ளனர் எனவும் கூறியிருந்தார்.இந்த நிலையில்தான் இவர் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் இஸ்லாமபாத் நோக்கி வந்துகொண்டிருந்தார். அந்த விமானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
விமானம் இஸ்லாமபாத்தை நெருங்கி லேன்டிங் செய்ய அனுமதி கோரியபோது, அனுமதி மறுக்கப்பட்டது. அதற்கான காரணம் என்னவென்று வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இதையடுத்து விமானம் வானில் சுற்றத் தொடங்கியது.தாஹிர்-உல்-கத்ரியின் வருகைக்காக இஸ்லாமபாத் ஏர்போர்ட்டில் காத்திருந்த அவரது ஆதரவாளர்கள், விமானம் தரையிறங்க அனுமதிக்கப்படாமல் வானில் சுற்றுவதை பார்த்துவிட்டு, ஆர்ப்பாட்டம் செய்ய தொடங்கினர். விமானத்தில் இருந்த எரிபொருள் அளவு குறைந்து போய் விமானம் கீழே விழுந்துவிடும் நிலை ஏற்படலாம் என விமானி எச்சரித்த பின்னர், விமானத்தை லாகூர் நோக்கி செல்லுமாறு தரையில் இருந்து உத்தரவு வந்தது.இஸ்லாமபாத்தில் இருந்து லாகூர் 150 மைல்கள் தென்கிழக்கே உள்ளது.
நல்லவேளையாக விமானத்தில் இருந்த எரிபொருள் அங்குவரை செல்வதற்கு போதுமானதாக இருந்தது.விமானம் லாகூருக்கு திருப்பி விடப்பட்டவுடன், லாகூர் விமான நிலையத்துக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டன. விமானங்களில் ஏற்றப்படும் கன்டெயினர்களை கொண்டுவந்து வீதிகளின் குறுக்கே நிறுத்தினார்கள், விமான நிலைய பாதுகாப்பு படையினர்.விமானம் ஒருவழியாக தரையிறங்கியது. ஆனால், தாஹிர்-உல்-கத்ரி விமானத்தில் இருந்து இறங்க மறுத்துவிட்டார்.தமது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள லாகூர் நகருக்கே விமானம் திசை திருப்பப்பட்டுள்ளதால், ஏர்போர்ட்டில் இருந்து வெளியேறும்போது தாம் கொல்லப்படலாம் என கூறி, தமது பிசினெஸ் கிளாஸ் சீட்டை விட்டு அசைய முடியாது என்று கூறிவிட்டார் அவர்.
இதற்கிடையே இவர் வந்த விமானம் திசைதிருப்பி லாகூரில் இறக்கப்பட்டுள்ள விஷயம் அறிந்த இவரது ஆதரவாளர்கள், வெவ்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்ய தொடங்கினர்.தாஹிர்-உல்-கத்ரி விமானத்தில் இருந்து இறங்கி செல்லும்போது அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாப்பு கொடுப்பதற்கு ராணுவத்தை அனுப்பி வைக்கிறோம் என அரசு கூறியதையும் அவர், ஏற்றுக்கொள்ளவில்லை.இறுதியில் பாகிஸ்தான், பஞ்சாப் மாநில கவர்னர் மொஹாமெட் சார்வார் தாமே விமானத்தில் ஏறி, தாஹிர்-உல்-கத்ரியின் உயிருக்கு தாம் உத்தரவாதம் கொடுப்பதாக கூறினார்.“நீங்கள் எனது உயிருக்கு உத்தரவாதம் கொடுப்பதென்றால், நீங்களும் என்னுடன் வாருங்கள் பார்க்கலாம். இருவரும் ஒன்றாகவே செல்லலாம். நான் செல்லும் வாகனம்மீது ராக்கெட் தாக்குதலோ, கண்ணிவெடி தாக்குதலோ நடத்தப்பட்டால், நீங்களும் உயிரிழக்க நேரிடும். இதற்கு சம்மதம் என்றால், நான் விமானத்தில் இருந்து இறங்க தயார்” என்றார், தாஹிர்-உல்-கத்ரி.
வேறு வழியில்லாமல், கவர்னர் மொஹாமெட் சார்வார் இதற்கு ஒத்துக்கொள்ள, இருவருமாக விமானத்தில் இருந்து இறங்கி, ஒரே வாகனத்தில் சென்றனர்.

No comments:

Post a Comment