Friday, June 27, 2014

வெளியே சொல்லாத அமெரிக்க, இஸ்ரேலிய நடவடிக்கை !


ஈராக்கில் நடக்கும் யுத்தத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் வெற்றி மேல் வெற்றி பெறுவதுடன், அங்கிருந்து ஜோர்தான் மற்றும் சவுதி அரேபியா மீது கண் (அல்லது gun) வைத்துள்ள நிலையில், அமெரிக்கா என்ன செய்கிறது? வெளியே சொல்லப்படாத சில காரியங்களை செய்வதாக உளவு வட்டாரங்களில் தகவல் உண்டு. அமெரிக்கா மட்டுமின்றி, இஸ்ரேலும் ரகசியமாக சில காரியங்களை செய்ய தொடங்கியுள்ளது என்பது அங்கிருந்து கிடைக்கும் ராணுவ தகவல்கள், மற்றும் உளவு வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
ஈராக்கிய எல்லைக்கும், ஜோர்தானிய தலைநகர் அமான் நகர எல்லைக்கும் இடையேயுள்ள 500 கி.மீ. அகலமான பாலைவனப் பகுதி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் கவனமாக கண்காணிக்கப்படுகிறது. வானில் உள்ள மிலிட்டரி சாட்டலைட் ஒன்றின் கிரகிக்கும் பகுதி, இந்த ஏரியாவை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) முதல் அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.வால் இயக்கப்படும் உளவு விமானங்கள் இந்தப் பகுதியில் பறக்க தொடங்கியுள்ளன. விமானியற்ற தாக்குதல் விமானங்கள் இன்னமும் அங்கிருந்து பறக்க தொடங்கவில்லை.
ஆனால், ஜோர்தானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் ஒன்றில் விமானியற்ற தாக்குதல் விமானங்கள் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட நிலையில் தயாராக உள்ளன என தெரியவருகிறது. நேற்று பிற்பகல், இஸ்ரேலிய கண்காணிப்பு விமானங்கள் (reconnaissance planes) இந்தப் பகுதியில் சில தடவைகள் பறந்ததாக தகவல் உள்ளது. இஸ்ரேலியர்களும் இதுபற்றி வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அமெரிக்காவும் தமது ராணுவ ஆலோசகர்கள் 300 பேர் ஈராக்கில் உள்ளார்கள் என்பதற்கு மேல் எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்த 500 கி.மீ. அகல பாலைவனப் பகுதியை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் கடப்பது கடினம் என்ற நிலையில்தான் தற்போது உள்ளது.
ஆனால் அதே நேரத்தில், ஜோர்தானிய நகரங்கள் சிலவற்றில் அல்-காய்தா செல்கள் உள்ளன. இவர்களின் உதவியை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் பெற்றுக்கொள்ள சான்ஸ் உள்ளது. அவர்களால், ஜோர்தானிய எல்லைப்புற நகரங்களில் பதட்ட நிலையை பலவிதங்களில் ஏற்படுத்த முடியும். நடக்கும் யுத்த நகர்வுகளை பார்த்தால், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் முட்டாள்தனமாக செயல்படவில்லை, நன்றாக திட்டமிட்டே காரியங்களை செய்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இதனால், அவர்கள் ஈராக் – ஜோர்தானிய எல்லை வரை வந்திருப்பதால், ஜோர்தான் மீது தாக்குதல் நடத்த வேறு ஒரு திட்டத்தை கையில் வைத்திருப்பதுகூட காரணமாக இருக்கலாம்!

No comments:

Post a Comment