Sunday, May 25, 2014

கவுண்டமணிக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய விவேக்!



தமிழ் திரையுலகில் சிறந்த நகைச்சுவை நடிகர் என பெயர் பெற்றவர் நடிகர் கவுண்டமணி. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்த இவர் 26-ம் வயது முதலே திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். தொடக்க காலங்களில் தனியாகவே நகைச்சுவை கதாபாத்திரத்தை ஏற்று நடித்த கவுண்டமணி, பின்னர் செந்திலுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. இவர்கள் இரண்டு தலைமுறை ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள். 

கவுண்டமணி இதுவரை சுமார் 750 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் சுமார் 10 திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். மேலும் வில்லன், குணச்சித்திர நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். இவர் இன்று தன்னுடைய 75-வது பிறந்தாளை கொண்டாடுகிறார். அவருடைய பிறந்தநாளுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். பிறந்தநாளையொட்டி காமெடி நடிகர் விவேக் கவுண்டமணியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். 

கவுண்டமணி தற்போது நீண்ட இடைவெளிக்குப்பிறகு ‘வாய்மை’, ‘49 ஓ’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment