Tuesday, May 27, 2014

மோடி பதவியேற்பு விழாவில் ரஜினி பங்கேற்காதது ஏன்? பரபரப்புத் தகவல்!

நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தின் உணர்வுகளை மனதில் கொண்டே பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னையில் பிரசாரத்திற்கு வந்த மோடி, ரஜினியை அவரது வீட்டில் சந்தித்துப்பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, ரஜினி தனது நண்பர் என்று கூற, ரஜினியும், மோடி தனது நலனில் அக்கறை உள்ளவர் என்றும் மற்றபடி இந்த சந்திப்பு அரசியல் ரீதியிலானது அல்ல என்றும் கூறியிருந்தார்.
ஆனால், மோடி - ரஜினி சந்திப்பு பாஜகவினருக்கு அரசியல் ரீதியாக உற்சாகத்தை கொடுத்தது.
அதேப்போன்று நடிகர் விஜயையும் கோவையில் உள்ள ஹொட்டல் ஒன்றில் சந்தித்துப் பேசினார் மோடி.
இந்நிலையில் தேர்தலில் பாஜக அபாரமாக வெற்றிபெற, அதற்கு ரஜினி தனது டுவிட்டர் தளத்தில், உங்களது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிக்கு எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள் என வாழ்த்தி இருந்தார்.
இதனையடுத்து மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி மற்றும் விஜய் ஆகியோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால் மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்த, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சில தமிழ் அமைப்புகளும், ரசிகர் மன்றங்களை சேர்ந்தவர்களும் மோடி பதவியேற்பு விழாவில் ரஜினி பங்கேற்கக் கூடாது என குரல் கொடுத்த நிலையில், அவரது இல்லத்திற்கு அருகே தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.
மேலும் தமிழ் திரையுலக தரப்பிலும் ராஜபக்சே அழைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இயக்குனர் பாரதிராஜா, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டவர்கள் வெளிப்படையாக தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
மேலும், தமிழக முதல்வர் ஜெயலலிதா இவ்விழாவில் பங்கேற்கப்போவதில்லை என்பது உறுதியான நிலையிலேயே, ரஜினியும் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதில்லை என முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment