Thursday, May 29, 2014

சர்வதேச அங்கீகாரத்தோடு தொடரும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை உடைத்தெறிவோம்!


புகலிடம் கேட்டு அகதிகளாக வாழ்ந்துவரும் தமிழர்களைக்கூட மலேசியா தொடர்ச்சியாக சிங்களக் கொலையாளிகளிடம் ஒப்படைத்துவருவது மிக மோசமான தமிழ் இனத்துக்கு எதிரான நடவடிக்கையாகும்.
கடந்த 65 வருடங்களாகத் தொடரும் சிறிலங்கா அரச பயங்கரவாதம் 2009 முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்குப் பின்னரும் தமிழர்களை அழித்தொழிக்கும் வேலையைத் தொடர்ந்தவண்ணமே உள்ளது. தாயகத்தில் எமது உறவுகள் என்றுமில்லாதவாறு சிங்கள இராணுவத்தின் திறந்தவெளிச் சிறைக்குள் அடக்கியொடுக்கப்பட்டு அடிமைகளாக வாழ்ந்துவருகிறார்கள். தமிழர்களை வேட்டையாடுவதற்கு மீண்டும் புலிகள் உருவாகின்றனர் என்னும் சதிப் பரப்புரைகளைச் செய்துகொண்டு அப்பாவித் தமிழ் மக்கள் வதைமுகாங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்.
2009 இற்குப் பின்னர் எல்லைகடந்த சிறிலங்கா அரச பயங்கரவாதம் புலம்பெயர் நாடுகளிலும் காலூன்றி எமது மனிதநேயச் செயற்பாட்டாளர்களைச் சிறையில் அடைக்கச் செய்தது. அதன் தொடர்ச்சியாகவே இன்றும் முள்ளிவாய்க்கால் இன அழிப்பிலிருந்து தப்பிப்பிழைத்துத் தமது உயிர்களை மட்டும் காவிச் சென்று ஆசிய நாடுகளில் புகலிடம் கோரியுள்ள தமிழ் மக்களை விடுதலைப் புலிகளின் தலைவர்கள் எனச் சித்தரித்து, அவர்கள் நாடுகடத்தப்பட்டுத் தொடர்ந்து வேட்டையாடப்பட்ட வண்ணமே உள்ளனர். இந்த அப்பாவித் தமிழர்களை வேட்டையாடும் செயலுக்கு சம்பந்தபட்ட சில நாடுகளும் உடந்தையாக இருந்துவருகின்றன. இனவழிப்பிலிந்து தப்பி வெளித்தேசங்களில் புகலிடம் கேட்டு, தமக்கான புதிய வாழ்க்கையைத் தொடர்ந்தவர்களை 'புலிகளின் தலைவர்கள்' எனப் போலிக் காரணங்களைக் கூறி இனவழிப்பைச் செய்துவரும் சிறிலங்காவிடம் நாடுகடத்தியிருப்பதானது மிக அப்பட்டமான மனிதவுரிமை மீறலுடன், கடும் கண்டனத்துக்குரிய செயலாகும். இந்தச் செயலுக்கு சர்வதேச நாடுகளும், மனிதவுரிமை அமைப்புகளும் மௌனம் காத்துவருவது மேலும் உலகத் தமிழ் மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
அகதிகளுக்கான ஐ.நா. முகவர் நிறுவனத்தில் (UNHCR) புகலிடத்துக்காகப் பதிவுசெய்யப்பட்டு, அதற்கான உரிமத்தோடு அங்கு வசித்துவந்தவர்களை சர்வதேசச் சட்ட விதிகளை மீறி இனவழிப்புச் சிங்கள அரசிடம் மலேசியா அரசாங்கம் ஒப்படைத்திருப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கதாகும். இதை ஐக்கிய நாடுகள் சபை அறிந்திருந்தும் கண்டிக்காது மௌனம் சாதித்துவருவது சிறிலங்கா அரச பயங்கரவாதத்துக்கு துணைபோவதாகவே அமைகிறது.
எமது மக்களைப் பாதுகாப்பதற்காக உலகத்தமிழர்களாகிய நாமே போராடவேண்டி உள்ளது என்பதை இச் சம்பவம் மீண்டும் தெளிவு படுத்தி நிற்கிறது. ஐ.நா. பேரவையில் எத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் ஈழத்தமிழர்கள் மீது தொடரும் இன அழிப்பை இன்னும் தடுத்துநிறுத்த முடியாமை மிகவும் பாரதூரமான விடயமாகும்.
;
எனவே, சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பாக அப்பாவித் தமிழர்களை நாடுகடத்தி, சித்திரவதைக்கும் கடூழியச் சிறைக்கும் இனவழிப்புக்கும் துணைபோகும் தமிழர் விரோதப் போக்குடைய நாடுகளுக்கு எதிராக நியாயக் குரல்களை எழுப்பி, உலகத் தமிழர்கள் போராடவேண்டியது மிகவும் அவசியமாகும்.

No comments:

Post a Comment