Thursday, April 24, 2014

மாணவர்களிடம் துண்டுப்பிரசுரம் கேட்டு பின்னர் மன்னிப்பு கோரிய படையினர் !


தனியார் கல்வி நிறுவனமொன்றில் வகுப்பு முடிந்து மானிப்பாய் வீதியினூடாக வீடுகளை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த மாணவர்கள் சிலரை வழிமறித்துள்ள இராணுவத்தினர், அம்மாணவர்பகளிடம் துண்டுப் பிரசுரங்கள் வைத்துள்ளீர்களா என்று விசாரணை நடத்திய சம்பவமொன்று நேற்று புதன்கிழமை (23) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினரே இவ்வாறு மாணவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள மாணவர்கள், எம்மிடம் பாடக்கொப்பிகள் தான் இருக்கின்றன பாருங்கள் என்று கூறியதை அடுத்து, அம்மாணவர்களைப் பார்த்து 'சொறி' என மன்னிப்பு கேட்டுவிட்டுச் சென்றுள்ளனர். 

யாழ். இந்துக் கல்லூரிக்கு அருகில் கடந்த வியாழக்கிழமை (17) இரவு 'தமிழீழம் மலரும்' என்ற தலைப்பிலான துண்டுப்பிரசுரம் ஒட்டிய குற்றச்சாட்டில் யாழ்.கொக்குவில் பகுதியினைச் சேர்ந்த ஜெயதாஸன் கஜானன் (வயது 24), இணுவில் பகுதியினைச் சேர்ந்த மன்மதராசா வேணுகாந்தன் (வயது 24) ஆகிய இருவரும் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.தொடர்ந்து இவர்கள் இருவரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கபபட்டதன் பின்னர் அந்த இளைஞர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. பின்னர் இவர்களில் ஒருவர் விடுதலையாகியுள்ளார். 

இதனைத்தொடர்ந்து, 'கணினி வலைப்பின்னல்' என்னும் நிலையத்தை நடத்திய விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியும் யுத்தத்தில் கால் ஒன்றினை இழந்தவருமான கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இராஜரட்ணம் சுதர்சன் (வயது 30) என்பவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். இவ்விரு சம்பவங்களை அடுத்து, பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துக் காணப்படுகின்றன.

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6729

No comments:

Post a Comment