Friday, April 25, 2014

ஐ.நா.வின் சித்திரப் போட்டியில் இலங்கைச் சிறுமி சாதனை (படம் இணைப்பு)!!

ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தினால் நடத்தப்பட்ட சிறுவர்களுக்கான சித்திரப் போட்டியில் ஆசிய பசுபிக் வலய வெற்றியாளராக இலங்கையைச் சேர்ந்த எட்டு வயது மாணவியொருவர் தெரிவாகியுள்ளார்.

ஐ.நா சுற்றுச்சூழல் திட்டத்தினால் வருடாந்தம் நடத்தப்படும் இந்த போட்டியில் இம்முறை 63,700 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையிலேயே இலங்கையைச் சேர்ந்த கந்தகே கியாரா செனுலி பெரேரா (வயது 08) வரைந்த ஓவியம் ஆசிய பசுபிக் வலய போட்டியில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

'உணவைப் பாதுகாப்பீர், பூமியைப் பாதுகாப்பீர், உணவை விரயம் செய்வது பூமியை விரயம் செய்வதாகும்' என்ற இவ்வாண்டின் தொனிப்பொருளின் கீழ் 'உணவும் பூமியின் பாதுகாப்பும்' என்ற தலைப்பில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.

இவற்றில் கியாராவின் ஓவியம் நடுவர்களின் மனதைக் கவர்ந்த நிலையில் அவருக்கு இந்த முதல் பரிசு வழங்கப்பட்டதாக ஐ.நா சுற்றுச்சூழல் திட்டம் அறிவித்துள்ளது.

யூஎன்ஈபி டுன்ஸா சர்வதேச சித்திரப் போட்டியானது, ஒவ்வொரு வருடமும் ஐ.நா சுற்றுச்சூழல் திட்டம் (யூஎன்ஈபி), ஜப்பானைத் தளமாகக் கொண்ட உலக சமாதானமும் சுற்றுச்சூழலும் (எப்ஜீபிஈ) மற்றும் நிகொன் கூட்டுத்தானம் ஆகியன இணைந்து நடத்துகின்றன.

23ஆவது தடவையாக இவ்வாண்டில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் வெற்றிபெற்ற கியாராவுக்கு 1,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதுடன் கென்யாவின் தலைநகர் நைரோபியில் நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவில் தனது பெற்றோர் மற்றும் ஆசிரியருடன் கலந்துகொள்வதற்கான விமானச் சீட்டுக்கள் உள்ளிட்ட பயணச் செலவுகளும் வழங்கப்படவுள்ளன.

இந்த பரிசளிப்பு விழா, எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
25 Apr 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1398413260&archive=&start_from=&ucat=1&

No comments:

Post a Comment