Monday, April 21, 2014

ஏமன் நாட்டில் அல்-காய்தா மீது இதுவரை நடைபெற்ற தாக்குதல்களில் மிகப் பெரிய தாக்குதல் !



ஏமன் நாட்டில் அல்-காய்தா மீது இதுவரை நடைபெற்ற தாக்குதல்களில் மிகப் பெரிய தாக்குதல் நேற்று நடந்ததாக, தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு அல்-காய்தாவினர் கொல்லப்பட்டதாகவும், ஒரு கிராமத்தில் இருந்த அல்-காய்தா தளங்கள் முற்றாக அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஏமன் நாட்டு பாதுகாப்புதுறை அதிகாரிகள், “இது அமெரிக்க – ஏமான் கூட்டு ராணுவ நடவடிக்கை” என்கிறார்கள். ஆனால், மேற்கொண்டு எந்த தகவலையும் வெளியிட மறுத்துள்ளனர். அதாவது, இந்த தாக்குதலில் அமெரிக்காவின் பங்கு என்ன என்பதை மர்மமாக வைத்துள்ளனர்.

அங்குள்ள சூழ்நிலையை அறிந்தவர்கள், அமெரிக்காவின் பங்களிப்பு என்ன என்பது பற்றி ஊகிக்க முடியும். அமெரிக்கா தமது உளவு விமானங்களை அனுப்பி ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கும் என்பதே, அந்த ஊகம்.
ஏமன் அரசு நியூஸ் ஏஜென்சியான ‘சபா’ இன்று (திங்கட்கிழமை) வெளியிட்ட செய்தியில், “தலைநகர் சானாவில் இருந்து 450 கி.மீ. தொலைவில் உள்ள வாடி அல்-கிலா என்ற கிராமத்தில் இருந்த அல்-காய்தா தளங்கள் மீது ஒரே நேரத்தில் மிகப்பெரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அந்த தளங்களில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர். தளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டன. கொல்லப்பட்டவர்களில் வெளிநாட்டு அல்-காய்தா நபர்களும் அடங்குவர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், “அல்-காய்தாவின் ‘உயர்மட்ட இலக்குகள்’ இந்த தாக்குதலில் அழிக்கப்பட்டிருக்கலாம் என ஏமன் சுப்ரீம் செக்யூரிட்டி கமிட்டி கருதுகிறது” என்ற வாக்கியமும், அரசு நியூஸ் ஏஜென்சி செய்தியில் உண்டு.இவர்கள் குறிப்பிடும் வாடி அல்-கிலா என்ற கிராமம், முழுமையாக அல்-காய்தா கட்டுப்பாட்டில் இருந்த கிராமம். இது ஒரு மலை சார்ந்த பகுதி. தரைப் படைகள், மலையேறி வந்தே தாக்குதல் நடத்த வேண்டும். அதனால், இங்கு தரை வழியாக தாக்குதல் நடத்துவது சுலபமல்ல. ஒருவேளை ஏமன் ராணுவத்தின் தரைப் படைகள் இந்த கிராமத்தை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி அல்-காய்தா தளங்களை அழித்தது என ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும், அங்கு கொல்லப்பட்ட அல்-காய்தாவினரை விட அதிக எண்ணிக்கையில் ஏமன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பார்கள்.

ஏமன் ராணுவம், தமது தரப்பில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் வெளியிடவில்லை. இதிலிருந்து என்ன ஊகிக்கலாம் என்றால், ஒரே நேரத்தில் பல உளவு விமானங்கள் மூலம் இந்த தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். அந்த தாக்குதல்கள் முடிந்தபின் ஏமன் ராணுவம், யாராவது உயிர் தப்பியிருந்தால் கொல்வதற்கு அங்கு சென்றிருக்க வேண்டும். ஏமன் நாட்டில் இதுவரை உளவு விமான ஏவுகணை தாக்குதல் நடத்தியவர்கள், அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. மட்டுமே. அந்த தாக்குதல்களை அவர்கள்தான் செய்தார்கள் என இதுவரை ஏமன் அரசு வெளிப்படையாக கூறியதில்லை. அமெரிக்காவும் ஒப்புக் கொண்டதில்லை. ஆனால், அனைவருக்கும் தெரிந்த ரகசியம் அது.

இந்த தாக்குதல் நடத்தப்பட்ட வாடி அல்-கிலா கிராமம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என ஏற்கனவே ஒரு ஊகம் இருந்தது. காரணம், நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இந்த கிராமத்தில்தான் அல்-காய்தாவினரின் ரகசிய கூட்டம் ஒன்று நடந்ததாக உளவு வட்டார தகவல்கள் வந்திருந்தன. அந்த ரகசிய கூட்டத்தில் என்ன விசேஷம் என்றால், அல்-காய்தாவின் ஏமன் பிரிவு தலைவர் நசீர் அல்-வுஹாயிஷி நேரில் கலந்து கொண்டார். அந்த ரகசிய கூட்டம் நடந்து 24 மணி நேரத்தில், அங்குள்ள அனைத்து அல்-காய்தா தளங்களும் அழிக்கப்பட்டுள்ளன. “அல்-காய்தாவின் ‘உயர்மட்ட இலக்குகள்’ இந்த தாக்குதலில் அழிக்கப்பட்டிருக்கலாம் என ஏமன் சுப்ரீம் செக்யூரிட்டி கமிட்டி கருதுகிறது” என்ற வாக்கியத்தின் அர்த்தம், நசீர் அல்-வுஹாயிஷி அல்லது, அவரது முக்கிய தளபதிகளில் யாராவது அங்கே இருந்திருக்கலாம் என்பதாக இருக்கலாம்.

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6715

No comments:

Post a Comment