Wednesday, April 30, 2014

மலேசிய விமானம் மாயமாகும் முன் பதிவான கடைசி உரையாடல்\




மாயமான மலேசிய விமானம், தரைக்கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசியபோது கடைசியாக பதிவு செய்யப்பட்ட உரையாடல் முதன்முறையாக சீன பயணிகளின் உறவினர்களுக்கு ஒலிபரப்பப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி மாயமாகி இந்திய பெருங்கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்ட மலேசிய விமானம் எம்.எச். 370ல் பயணித்தவர்களில் 154 பேர் சீனர்கள்.
விமானம் கடலுக்குள் விழுந்ததை நம்ப சீன பயணிகளின் உறவினர்களில் பலர் மறுக்கின்றனர்.
இந்நிலையில் விமானம் தரைக்கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டபோது பதிவு செய்யப்பட்ட உரையாடல் பெய்ஜிங்கில் நடந்த கூட்டத்தில் சீன பயணிகளின் உறவினர்களுக்கு முதன்முறையாக ஒலிபரப்பப்பட்டது.
“மலேசியா 370 ஹோ சி மின்ஹ் 120.9ஐ தொடர்பு கொள்கிறது”, “குட்நைட்” என்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ரேடார் கன்ட்ரோலரின் குரல் கேட்கிறது.
பதிலுக்கு “குட்நைட் மலேசியன் 370” என்ற ஆண் குரல் கேட்கிறது. அந்த குரல் விமான சிப்பந்திகளில் ஒருவருடையதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
விமானம் மாயமான 50 நாட்கள் கழித்து இந்த ஒலிப்பதிவை மலேசிய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
மார்ச் 8ம் திகதி இரவு 2.03 மணிக்கு மலேசிய ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் டிஸ்பாட்ச் மையம் வியட்நாமில் உள்ள தரைக்கட்டுபாட்டு அறையை தொடர்பு கொள்ளுமாறு எம்.ஹெச். 370 விமானத்தின் விமானிக்கு தகவல் அனுப்பியது. ஆனால் விமானத்தில் இருந்து பதில் வரவில்லை.
இதையடுத்து 20 நிமிடங்கள் கழித்து இரவு 2.22 மணிக்கு ரோயல் மலேசிய விமானப்படையின் ரேடாரில் விமானம் கடைசியாக தெரிந்துள்ளது.
விமானத்தின் எரிபொருள் 7 மணிநேரம் 31 நிமிடங்களில் தீர்ந்து போயிருக்கும் என்று மலேசிய அதிகாரிகள் சீன பயணிகளின் உறவினர்களிடம் தெரிவித்தனர்.
இதேவேளை, மலேசிய விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment