Saturday, March 29, 2014

2013 – ஓர் பார்வை!


டிசம்பர் 21, 2012 உலகம் அழிந்து விடும் என்ற மூட நம்பிக்கையை தகர்த்து எறிந்து, வெற்றிகரமாக 2013ம் ஆண்டையும் நிறைவு செய்து விட்டோம்.
இந்த ஆண்டில் ஏராளமான வளர்ச்சிகளை சந்தித்திருந்தாலும், உலகையே உலுக்கும் வண்ணம் நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருந்தன. தொழில்நுட்ப வளர்ச்சியில் மனிதர்கள் அதி உச்சத்தை அடைந்து கொண்டிருந்தனர் என்றே சொல்லலாம்.
புத்தாண்டில் நிகழ்ந்த சோகம்
ஜனவரி 01: புத்தாண்டு என்றாலே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான். உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் வானவேடிக்கைகளுடனும், இசை நிகழ்ச்சிகளுடனும் புத்தாண்டை வரவேற்கின்றனர். இவ்வாறு ஐவரி கோஸ்டில் நடந்த நிகழ்வு ஒன்று, சந்தோஷத்தை சோகமாக மாற்றியது.
மைதானத்தில் கூடியிருந்த மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு முண்டியடித்துக் கொண்டு செல்கையில், 60 பேர் பலியானதுடன், 200 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
பரபரப்பை ஏற்படுத்திய மர்ம உருண்டைகள்
பிப்ரவரி 05: அரிசோனா பாலைவனப் பகுதி மட்டுமல்லாது, உலகத்தையே அதிர வைத்தது மர்ம உருண்டைகள். பார்ப்பதற்கு ஊதா நிறத்தில் பளிங்கு உருண்டைகள் போல காட்சியளித்தன.
இவற்றை பிழியும் போது நீர்போன்ற திரவம் அதனுள்ளிருந்து வெளியானதாக இதனை கண்டறிந்த ஜெரடைன்  என்ற பெண் தெரிவித்திருந்தார்.
புதிய போப்
120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக இருந்த போப் 16-ம் பெனடிக்ட், முதுமை காரணமாக பிப்ரவரி மாதம் 28ம் திகதி தனது பதவியை துறந்தார். இதனை தொடர்ந்து புதிய போப் ஆண்டவராக அர்ஜென்டினாவின் பியுனோஸ் ஏரெஸ் நகர் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தெரிவு செய்யப்பட்டார்.
இவர் முதலாம் பிரான்சிஸ் என்ற பெயரை தெரிவு செய்ததையடுத்து, போப் முதலாம் பிரான்சிஸ் என அழைக்கப்படுகிறார். பதவியேற்றவுடன், அங்கிருந்த மக்களுக்கு நன்றிகூறி, அன்பும் சகோரத்துவமும் வளர உலகம் வழிகாண வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அமெரிக்காவை உலுக்கிய பொஸ்டன் குண்டுவெடிப்பு
ஏப்ரல் 15: மக்கள் மிக உற்சாகமாகவும், ஆர்வமாகவும் கலந்து கொள்ளும் பழமையான மரதன் போட்டி தான் பொஸ்டன் மரதன். வருடந்தோறும் ஏப்ரல் மாதம் மூன்றாம் திங்களன்று நடைபெறும் இப்போட்டியில், இந்தாண்டும் 27,000 மக்கள் கலந்து கொண்டனர்.
ஆனால் எதிர்பாராத நிகழ்வு அனைவரையும் உலுக்கியது, ஆம் குண்டுவெடிப்பு. இதில் மொத்தம் 5 பேர் பலியானதுடன், 280 பேர் படுகாயம் அடைந்தனர். ஆசை, கனவுகள் அனைத்தும் சுக்குநூறாக சிதறி இரத்தக்காடாக காட்சியளித்தது.
வங்கதேசத்தை மிரள வைத்த கட்டிட விபத்து
ஏப்ரல் 24: வழக்கம் போல் 8 மாடியில் மிக பிரம்மாண்டமாய் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது ராணா பிளாசா. அன்றைய தினத்தை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள், திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.
என்ன நடந்தது என சுதாரிப்பதற்குள்ளாகவே, நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து கிடந்தனர். உடனடியாக விரைந்து வந்த மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டாலும், 1129 பேர் பரிதாபமாக பலியாகினர்.

மரணத்தை எதிர்த்து போராடிய வீரப் பெண்மணி
ஜீலை 12: பாகிஸ்தானில் பெண் குழந்தைகளின் கல்விக்காக போராடி, தலிபான்களின் துப்பாக்கி சூட்டுக்கு ஆளாகி, மீண்டும் உயிர் பெற்று கம்பீரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் மலாலா. என்னதான் மிரட்டல்கள் வந்தாலும், கல்விக்காக போராடும் மலாலாவை தேடி விருதுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
இவரது பிறந்தநாளான ஜீலை 12ம் திகதியை மலாலா தினமாக அறிவித்து ஐ.நா கௌரவப்படுத்தியது. சுருக்கமாக, மரணத்தின் வாசலுக்கே சென்று திரும்பி வந்தவர் என்று தான் சொல்ல வேண்டும்
சொர்க்கத்தில் அவதரித்த குட்டி இளவரசர்
ஜீலை 22: பிரிட்டன் இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் கர்ப்பமாக இருந்ததில் இருந்தே, என்ன குழந்தை பிறக்கும் என்றெல்லாம் சூதாட்டம் களைகட்டியது.
ராஜகுடும்பம் மட்டுமின்றி, மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்க, ஜீலை மாதம் 22ம் திகதி அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
பிரித்தானியாவை வருங்காலத்தில் ஆளப்போகும் குட்டி இளவரசருக்கு ஜார்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ் என பெயர் சூட்டி மகிழ்ந்தனர், உலகம் முழுவதிலும் இளவரசருக்கு பரிசுகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன.
ஜார்ஜ் என்ற பெயரை கொண்டு அழகான பொம்மைகள் கடைகளை அலங்கரித்தன, கணனி வைரசே உலா வர ஆரம்பித்து விட்டது என்றால் பாருங்களேன்.
இவர்கள் செய்த பாவம் தான் என்ன
ஆகஸ்ட் 21: கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பமான போராட்டம் இன்றும் முடியாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதில் லட்சக்கணக்கான மக்கள் பலியாகி இருப்பதுடன், மில்லியன் கணக்கானவர்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
குறிப்பாக ஆகஸ்ட் மாதம் 21ம் திகதி இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதில், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உறங்கி கொண்டிருக்கும் போதே பலியாயினர்.
இதற்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்தன, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் போர் தொடுக்க தயாராக இருந்தன.
இதற்கிடையே இரசாயன ஆயுதங்களை அழிக்க சிரியா சம்மதம் தெரிவித்ததால், மாபெரும் போர் தவிர்க்கப்பட்டது. இதற்கு ரஷ்யா தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
கென்யா வெஸ்டர்மால் தாக்குதல்
செப்டம்பர் 21: கென்யாவின் நைரோபியில் உள்ள வெஸ்ட் கேட் என்ற மாலுக்குள் புகுந்த தீவிரவாதிகள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தில் 72 பேர் பலியானதுடன், கென்யா மட்டுமல்லாது உலக நாடுகளையும் நிலைகுலையச் செய்தது.
தகவல் அறிந்த சென்ற இராணுவப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. இதனை நடத்தியது முஜாஹிதின் என்ற தீவிரவாத அமைப்பே.
சோமாலியாவில் கென்ய படையினர் நடத்திய தாக்குதலுக்கு பழிக்குப்பழியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.
பாகிஸ்தானை நிலைகுலைய செய்த நிலநடுக்கம்
செப்டம்பர் 24: பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தையே நிலைகுலையச் செய்தது மிக மோசமான நிலநடுக்கம். 7.7 என்ற ரிக்டர் அளவில் பதிவாகி மிக சக்திவாய்ந்த அளவில் ஏற்பட்டதால், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.
இதில் 825 பேர் பலியானார்கள், 700 பேர் படுகாயம் அடைந்தனர். சரியான பாதை இல்லாமல் மீட்புப் பணிகள் தாமதமாகின, லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.
இதனை தொடர்ந்து குவாடர் துறைமுகத்துக்கு அப்பால் கரையோரப்பகுதியில் சிறிய தீவு ஒன்றும் உருவானது.
அதிர்ந்து போன பிலிப்பைன்ஸ்
நவம்பர் 09, அக்டோபர் 15: பிலிப்பைன்சை இந்த ஆண்டு இரண்டு இயற்கைச் சீற்றங்கள் ஆட்டம் காண வைத்தன. முதலில் நிலநடுக்கம் அதிலிருந்து மீண்டு வருவதற்குள் புயல்.
பிலிப்பைன்சின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் போஹோல் தீவில், அக்டோபர் 15ம் திகதி கார்மன் நகரில் நிலநடுக்கம் வந்தபோது காலை 8:12 மணி.
ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாகப் பதிவான இந்நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் நொறுங்கின, சாலைகள் சேதம் அடைந்தன, பாலங்கள் இடிந்து விழுந்தன.
பெரும் உயிர்ச்சேதம் தடுக்கப்பட்டாலும், 222 பேர் பலியானார்கள், 976 பேர் காயமடைந்தார்கள். இதிலிருந்து மீண்டு வருவதற்குள், நவம்பர் 09ம் திகதி ஹையான் புயலை நாட்டையே புரட்டி போட்டது.
6,009 மக்களின் உயிரை காவு வாங்கிச் சென்றது, எங்கு பார்த்தாலும் பிணக்குவியலும், அழுகுரலுமாக  இருந்தன.
காலத்தால் அழியாத கறுப்பு மலர்
டிசம்பர் 05: தென் ஆப்ரிக்கா மட்டுமல்லாது உலக நாடுகளில் உள்ள மக்கள் அனைவராலும் விரும்பப்படும் மகத்தான தலைவர் நெல்சன் மண்டேலா. இவர் டிசம்பர் மாதம் 5ம் திகதி உள்ளூர் நேரப்படி இரவு 8.50 மணிக்கு காலமானார்.
உலக மக்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது இவரது மரணம், அன்னாரது உடல் சொந்த கிராமமான குனு என்ற கிராமத்தில், ராணுவ குண்டுகள் முழங்க, குடும்பத்தினரின் பாரம்பரிய சடங்குகளுடன் 15ம் திகதி அடக்கம் செய்யப்பட்டது
“ஒரு உயிர் எப்போது விடுதலை பெறுகிறதோ அப்போதுதான் அது மனிதனாகிறது. விடுதலையை யாராலும் கொடுக்க முடியாது, போராடித்தான் பெற்றாக வேண்டும்” என்ற வைர வரிகள் அவரது மறைவுக்குப் பின்னும் ஓங்கி ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றது.
ரகசியமாக உளவு பார்க்கும் அமெரிக்க
உலக நாடுகள் பலவற்றையும் குறிப்பாக நட்பு நாடுகளையும் கூட அமெரிக்கா உளவு பார்த்தது அம்பலமானது. இத்தகவல்களை அமெரிக்க உளவுத்துறையில் பணியாற்றிய எட்வர்டு ஸ்னோடென் என்பவர் வெளியிட்டார்.
எனவே இவரை கைது செய்யும் அபாயம் எழுந்ததால், தற்போது ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார். குறிப்பாக ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலின் தொலைபேசி அழைப்புகளை 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டுக் கேட்டது தெரியவந்தது.
ஏன் இவ்வாறு செய்தது என்பதற்கு பல்வேறு விளக்கங்கள் கொடுத்தாலும், நாடுகளுடனான நட்புறவில் விரிசல் விழும் நிலை அமெரிக்காவுக்கு ஏற்பட்டது.
செவ்வாயில் குடியேற விருப்பமா?
உலக நாடுகள் பலவும் போட்டிக் போட்டுக் கொண்டு செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வருகின்றன. நாசாவால் அனுப்பப்பட்ட கியூரியாசிட்டி என்ற விண்கலம், செவ்வாயில் மலர்கள், நீளமான ஆறு மற்றும் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் இருப்பதை படம் பிடித்து அனுப்பியது. இதற்கிடையே சில நிறுவனங்கள் செவ்வாயில் மக்கள் குடியேறுவதற்கான கவுண்ட் டௌனயும் ஆரம்பித்து விட்டன.
இதற்கு மத்தியிலும் பல்வேறு அதிசயமான நிகழ்வுகளும் உலகில் நடந்தேறிய வண்ணம் இருந்தன. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்ற பழமொழிக்கு ஏற்றவாறு புத்தாண்டை இனிதே வரவேற்போம்!!!

No comments:

Post a Comment