Tuesday, August 6, 2013

திருமணம் செய்து கொண்டதால் நர்சிங் படிப்பினை இழந்த மாணவியின் பரிதாப நிலை !

தமிழ்நாட்டில் அரசு செவிலிய மாணவி ஒருவர் காதல் திருமணம் செய்து கொண்டதால் படிப்பினை மேற்கொண்டு தொடர்வதற்கு பயிற்சிப் பள்ளியானது தடைவிதித்துள்ளது.
சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசு செவிலியர் பயிற்சிப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மூன்றரை ஆண்டு பட்டப் படிப்பான இதில் 420 மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்திய செவிலிய கவுன்சில் விதிப்படி, திருமணம் ஆன பெண்ணாக இருந்தாலும் பயிற்சி முடியும் வரை கல்லூரி விடுதியிலேயே தங்கி இருக்க வேண்டும்.
அதே சமயம் பயிற்சிக்கு இடைப்பட்ட காலத்தில் எந்த பெண்ணும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற விதி தொடர்ந்து அமலில் உள்ளது.
இந்நிலையில் சேலம் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மதுரையை சேர்ந்த கிறிஸ்டினா(19) என்பவர் 20 நாட்களுக்கு முன்பு அவரது பெற்றோர் எதிர்ப்பை மீறி திடீரென்று திருமணம் செய்து கொண்டார்.
இதனால் செவிலிய கவுன்சில் விதிகளுக்கு எதிராக நடந்து கொண்டதாகக் கூறி கிறிஸ்டினா மேற்கொண்டு படிப்பினை தொடர்வதற்கு நிர்வாகம் அனுமதி தரவில்லை.
இந்நிலையில் மகளின் எதிர்காலம் பாதிக்கும் என்பதால் அவரை தொடர்ந்து படிப்பதற்கு அனுமதிக்கும்படி பெற்றோர் அரசு மருத்துவமனை முதல்வர், செவிலியர் பயிற்சிப்பள்ளி முதல்வரிடம் நேரில் கோரிக்கை விடுத்தனர். ஆனால் கிறிஸ்டினாவுக்கு தொடர்ந்து படிப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இது குறித்து அரசு செவிலியர் பயிற்சிப்பள்ளி நிர்வாகம் கூறுகையில், கிறிஸ்டினாவின் படிப்பு குறித்து மருத்துவக்கல்வி இயக்குநரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இயக்குனரின் உத்தரவுப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதுவரை மாணவி இங்கு படிக்க முடியாது எனவும் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment