Tuesday, August 20, 2013

ஆதலால் காதல் செய்வீர் படத்தின் கதை இதுதான் !




ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நிறைந்த கல்லூரி காதல் கதைகள் நிறைய பார்த்தாகிவிட்டது. முதன் முறையாக யதார்த்தத்தை பளிச்சென்று சொல்லியிருக்கும் படம். 
சந்தோஷும், மனிஷாவும் காதலிக்கிறார்கள். பார்க், பீச் என சுற்றும் காதல், மகாபலிபுரம் லாட்ஜில் எல்லாவற்றையும் முடித்துக் கொள்கிறது. விளைவாக மனீஷா கர்ப்பமாகிறார். கருவை கலைக்க முயல, ஒரு கட்டத்தில் பெற்றவர்களுக்கு தெரிய வருகிறது. இருகுடும்பமும் பிரச்னையை பேசித் தீர்க்க முயற்சிக்கிறது. பேச்சு மோதலாக மாற, சந்தோஷும் மனீஷாவும் அவரவர் குடும்பத்து பக்கம் நிற்கிறார்கள். இருவருமே காதல் பக்கம் நிற்காமல் போக, கர்ப்பத்துடன் பிரிகிறது காதல்.

மனீஷாவுக்கு வேறொருவனுடன் திருமணம். சந்தோஷுக்கு இன்னொரு பெண்ணுடன் காதல். இருவருக்கும் பிறந்த குழந்தை? என்ற பெரிய கேள்வியை முன்வைத்து கனத்த இதயத்துடன் அனுப்பி வைக்கிறார்கள். ‘போங்கடா நீங்களும் உங்க காதலும்’ என்று தியேட்டரை விட்டு வெளியே வரும் ஒவ்வொரு உதடும் உச்சரிப்பதுதான் படத்துக்கான அங்கீகாரம்.

புதுமுகம் சந்தோஷ், இந்த கதைக்கும், கேரக்டருக்கும் பொருத்தமான தேர்வு. உருகி உருகி காதலிக்கும்போதும், ‘தப்பு பண்ற வயசுல, தப்பை தப்பபில்லாமல் பண்றது தப்பில்லை’ என்று மனீஷாவை வீழ்த்தும்போதும், பிரச்னை பெரிதான பின் தன் சுயமுகம் காட்டும்போதும், சந்தோஷின் எக்ஸ்பிரசன்கள் கச்சிதம். மனீஷாவின் அழகு, வழக்கு எண்ணுக்குப் பிறகு கூடியிருக்கிறது. காதலில் காட்டும் ரொமான்சை விட கர்ப்பமாகி அதை வீட்டுக்குத் தெரியாமல் மறைக்க படும் அவஸ்தையும், கலைக்க அலையும்போது கலங்குவதிலும் அற்புதமாக நடித்திருக்கிறார்.

ஜெயப்பிரகாஷும், துளசியும், நடுத்தர வர்க்க பெற்றோரின் பதட்டத்தையும், பரிதவிப்பையும் அப்படியே பிரதிபலித்திருக்கிறார்கள். மனீஷாவுடன் தலைவிரி கோலமாக ஹீரோவின் வீட்டு வாசலில் துளசி நியாயம் கேட்கும் காட்சியும், ‘என் மகன்கூட படுத்ததுக்கு எவ்வளவு வேணும்னு வாங்கிக்க சொல்லுங்க’ என்பது போன்ற வார்த்தைகளைக் கேட்டு அழும் காட்சியும் யாரையும் கரைய வைத்துவிடும். மகனை அடித்து வளர்த்தாலும் அவனுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராகும் தந்தை ராம்நாத் ஷெட்டி, மகள், மகன் பிரச்னை ஒரே நேரத்தில் ஆட்டிப்படைக்க, அல்லாடும் பூர்ணிமா, நண்பர்களுக்கு குறையையும், நிறையும் சரியாகச் சொல்லிக்கொடுக்கும் குண்டு நண்பன், தொடர் காதல் தோல்விகளால் காதலையும் காதலிப்பவர்களையும் வெறுக்கும் தோழி, பெண் குரலில் பேசும் நண்பன் என ஒவ்வொரு கேரக்டரும் தங்களின் சிறப்பால் படத்தை சுவாரஸ்யப்படுத்திச் செல்கிறார்கள். யுவனின் பின்னணி இசையில் அப்பா இளையராஜாவின் சாயல். சூர்யாவின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு பிரேமும் அத்தனை அழகு.

காட்சியில் மட்டுமல்லாது வசனத்திலும் படத்தை கவிதையாகத் தந்திருக்கிறார் சுசீந்திரன். ஆயிரம் படங்களில் சொன்ன காதல்தான். அதை யதார்த்தமாகச் சொன்ன விதத்திலும் கிளைமாக்சில் கேட்கப்படும் கேள்வியிலும் தனித்து தெரிகிறார். ஆதலால் காதல் செய்வீர் என்று படத்துக்கு தலைப்பு இருந்தாலும் அதற்கு மாறான விஷயத்தை பேசியிருக்கிறது படம்.









http://cinema.athirvu.com/fullview.php?id=183

No comments:

Post a Comment