Tuesday, August 13, 2013

எகிப்தை உளவுபார்த்த மொசாத் !!


எகிப்தில் தற்போது நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தில், எகிப்திய ராணுவத்துக்கு இஸ்ரேல் மறைமுகமாக உதவிகள் செய்வது பற்றி எழுதியிருந்தோம். இவர்கள், ‘முன்னாள் எதிரிகள்’ என்றும் குறிப்பிட்டிருந்தோம். இந்த இரு தரப்பும் முன்பு மோதிக்கொண்ட சம்பவங்கள் பற்றியும் எழுதும்படி சில வாசகர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

அவை பழைய சம்பவங்கள். ஆனால், சுவாரசியமானவை.

ஒரு சம்பவத்தை தருகிறோம். கட்டுரையின் நீளம் கருதி, இரு பிரிவுகளாக வெளியிடுகிறோம். ஒரு பாகம் இன்றும், மற்றையது நாளையும் இடம்பெறும். இந்த ரக பிளாஷ்பேக் கட்டுரைகளுக்கு அதிக வாசகர்கள் ஆதரவு தந்தால், அவ்வப்போது இப்படியான பிளாஷ்பேக்குகளை தரலாம். படித்துப் பாருங்கள். ஒரு காலத்தில் இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தின் உளவாளிகள் மிக அதிக அளவில் ஊடுருவ அனுப்பப்பட்ட நாடு எகிப்துதான். 1967-ம் ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கிய இந்த ஆபரேஷன், அப்போதைய மொசாத் தலைவர் அமீட் மெய்ரின் ஐடியா. எகிப்துக்கு அனுப்பப்பட்ட உளவாளிகளை, அவர்கள் இஸ்ரேலில் இருந்து கிளம்பும் முன்னர் நேரில் அழைத்து, ஒவ்வொருவராக தனித்தனியாக சந்தித்தார் அமீட்.

“எகிப்தின் பாதுகாப்பு படைகளில் நாம் தற்போது கண்வைக்க வேண்டியது, விமானப்படையை மட்டும்தான். எந்தவொரு சிறிய விஷயத்தையும் தவற விடாதீர்கள். விமானப்படையினர் தொடர்பாக நடைபெறும் எந்தவொரு சிறிய விஷயமும் எங்களுக்குத் தேவை” என்றவர், சிறிய சம்பவங்கள் என்றால் என்ன என்பதற்கு சில உதாரணங்களை கூறினார்.“எகிப்து விமானப்படை விமானி ஒருவர் தனது பரக்ஸிலிருந்து உணவு உண்ணும் மெஸ்ஸூக்கு நடந்து செல்ல எவ்வளவு நேரம் எடுக்கும்?” “எகிப்து விமானப்படை அதிகாரி ஒருவர் தனது வீட்டிலிருந்து விமானப்படை முகாமுக்கு செல்லும்போது கய்ரோ நகரின் நெரிசலான ட்ராபிக்கில் சராசரியாக எத்தனை நிமிடங்கள் சிக்கிக் கொள்கிறார்?”

“முக்கியமான விமானப்படை அதிகாரிகளில் யார் யாருக்கெல்லாம், மனைவிக்கு தெரியாமல் பெண் சினேகிதிகள் இருக்கிறார்கள்?”இப்படியான சிறிய சிறிய தகவல்களை எல்லாம் சேகரித்து அனுப்பும்படி ஏராளமான உளவாளிகளை எகிப்து நாட்டுக்குள் அனுப்பிய அமீட், அடுத்த கட்டமாக மொசாத்தில் ஒரு புதிய இலாகா ஒன்றை உருவாக்கினார். (உலக உளவுத்துறைகளின் சரித்திரத்திலேயே இந்த இலாகா ஒரு முன்னோடி. இன்று பல நாடுகளின் உளவுத்துறைகள் இப்படியான இலாகா ஒன்றை வைத்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் முன்னோடி மொசாத்தான். அதை உருவாக்கியவர் அமீட்.)அந்த இலாகாவின் பெயர் LAP. ஹிப்ரூ மொழியில் விரிவாக்கம், Loh Amma Psichologit. தமிழில் சொன்னால், மனோதத்துவ போர் இலாகா.இந்த புதிய இலாகாவில் பணிபுரிய சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் உளவாளிகள் அல்ல. மனோதத்துவ நிபுணர்கள்.

எகிப்திலிருந்து உளவாளிகள் சேகரித்து அனுப்பிய சிறு சிறு தகவல்களை எல்லாம் மொசாத்தின் LAP இலாகாவுக்கு வந்து சேர்ந்தன. அவை ஒவ்வொன்றாக, ஆராயப்பட்டன. ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். எகிப்திய விமானப்படை அதிகாரிகளில், பாதிக்குப் பாதி பேர் ரகசியமாக ஏதாவது செய்துகொண்டு இருந்தார்கள்!இவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு அதிகாரியின் ரகசிய நடவடிக்கைகளை ஆராய, தனித்தனி மனோதத்துவ நிபுணர் நியமிக்கப்பட்டார். அவரின் பணி, சம்மந்தப்பட்ட ஒற்றை அதிகாரியின் பைலை ஆராய்ந்து, அவரை எப்படி மனோதத்துவ ரிதியில் பாதிக்கலாம் என்று திட்டமிடுவது.

LAP இலாகா ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாத காலத்திலே, திட்டத்தில் முதல் கட்டம் எகிப்தில் செயல்பட தொடங்கியது. எகிப்து விமானப்படை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு, யார் அனுப்பியது என்று தெரியாத வகையில் கடிதங்கள் வரத் தொடங்கின. அந்த கடிதங்கள் அனைத்துமே எகிப்திலேயே போஸ்ட் செய்யப்பட்டிருந்தன. கடிதங்களில் அந்த வீட்டுக்கார அதிகாரியின் வெளியுலகத் தொடர்புகள் பற்றி விலாவாரியாக எழுதப் பட்டிருந்தன. சில கடிதங்களுடன் போட்டோக்களும் இணைக்கப்பட்டிருந்தன. விமானப்படை அதிகாரிகளின் மனைவிகள், தங்கள் கணவன் வெறொரு பெண்ணுடன் ஷாப்பிங் செல்லும் போட்டோக்களையும், ரெஸ்ட்டாரென்ட்டில் உணவு உண்ணும் போட்டோக்களையும் பார்க்க நேர்ந்தது.

கடிதங்களைத் தவிர வேறு சில நடவடிக்கைகளும் நடக்கத் தொடங்கின. சில அதிகாரிகளுக்கு மர்மத் தொலைபேசி அழைப்புக்கள் வந்தன. அந்த அதிகாரிகளுக்கு, அவர்களது சக அதிகாரிகளின் பலவீனங்கள் பற்றி சொல்லப்பட்டன.
வேறு ஒரு அதிகாரியின் பிள்ளைகள் படிக்கும் பாடசாலைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று சென்றது. பாடசாலை அதிபரிடம் பேசிய பெண் குரலொன்று, குறிப்பிட்ட ஒரு பிள்ளை வகுப்பில் திறமையாகப் படிக்காமல் இருப்பதன் காரணம் அந்தப் பிள்ளையின் தந்தையின் தவறான நடத்தை என்று ஆதாரங்களுடன் கூறியது.இவை அனைத்துமே கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு குறைவான நாட்களில் நூற்றுக்கணக்கில் நடந்தன. மிக வேகமாகச் செய்யப்பட்ட மனோதத்துவ யுத்தம் அது. இலக்கு வைக்கப்பட்ட ஒவ்வொரு அதிகரியும், அவர் பிரச்னையை சமாளிக்கும் முன்னர், அடுத்த அட்டாக். அதற்கு அடுத்த அட்டாக் என்று திரும்பிய இடமெல்லாம் சிக்கல்மேல் சிக்கல்.

இந்த மனோதத்துவத் தாக்குதல்கள் தொடங்கப்பட்டு இரண்டு மூன்று தினங்களுக்குள் எகிப்து விமானப்படை முகாம்களில் அதிகாரிகள் சிக்-லீவில் அடிக்கடி போகத் தொடங்கினார்கள். சில நாட்களில் 50 வீதத்துக்கும் குறைவான அதிகாரிகளே பணிக்கு வந்தார்கள். அப்படி வருபவர்களில் சிலர் வேலை நேரத்திலேயே குடிக்கவும் தொடங்கினார்கள். இவர்களது உயரதிகாரிகளும் தட்டிக் கேட்பதில்லை. காரணம் உயரதிகாரிகளுக்கும் அதே பிரச்சனை.
இந்தச் சமயத்தில்தான், எகிப்தின் தலைவர் காமல் அப்தெல் நசீர், இஸ்ரேலுக்கு எதிரான யுத்தம் ஒன்றுக்குத் தயாராகி கொண்டிருந்தார். அந்த விஷயம் மொசாத்துக்கும் தெரிந்திருந்தது. அவர் யுத்தத்தில் இறங்கி இஸ்ரேலை தாக்குவதற்கு முன் இஸ்ரேல் முந்திக்கொண்டு எகிப்துக்கு பெரிய அடி ஒன்றை கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேலிய அரசு விரும்பியது.அதற்கான திட்டமிடல் பொறுப்பு, மொசாத் தலைவர் அமீட் மெய்ரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அமீட் அடுத்த கட்டத்துக்குத் தயாரானார். எகிப்துக்கு கொடுக்கப்பட வேண்டிய முதலாவது அடியை, எகிப்திய விமானப்படைக்கு கொடுப்பது என தீர்மானித்தார்!தமிழில் அதிகம் வெளிவராத இதுபோன்ற கட்டுரைகள் அதிகம் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறீர்களா? வாசகர்களின் ஆதரவு இருந்தால் தொடர்ந்து தரமுடியும். நாம் முன்பே குறிப்பிட்டபடி, இதே கட்டுரையை ஆங்கிலத்திலும் வெளியிடவில்லை. ஆனால், மற்றொரு கட்டுரையின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment