Sunday, August 11, 2013

கோடநாடு லண்டனில் உள்ளதா ?



“கோடநாடு பகுதியில் சில காலம் தங்கியிருப்பது அப்படி என்ன மாபாதக செயலா ? கோடநாடு என்ன லண்டனிலா இருக்கிறது ? இல்லை கர்நாடக மாநிலத்தில் இருக்கிறதா ?” என்று கேள்வி எழுப்பியுள்ள முதல்வர் ஜெயலலிதா, “கருணாநிதி மானாட, மயிலாட நிகழ்ச்சியை கண்டு களிப்பது போன்ற பணிகளுக்கே பெரும்பான்மை நேரத்தை ஒதுக்கியதால், அரசு நிர்வாகமே முடங்கிக் கிடந்தது” என்று கூறியுள்ளார்.

அதாவது கொயம்புத்தூருக்கு அருகே (குளிரான இடம்) தான் கொடநாடு. அங்கே தான் செல்வி ஜெயலலிதா தற்போது எல்லாம் தங்கி வருகிறார். சென்னை வெயில் அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லைப் போலும். ஆனால் அதனை தான் அடிக்கடி கலைஞர் கருணாநிதி அவர்களும் கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளார். பொறுக்க முடியாமல் அம்மா பொங்கி எழுந்துள்ளார். அது தான் மேட்டார் !

முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேலியே பயிரை மேய்ந்தால் விளைவதெப்படி ? என்ற பழமொழிக்கேற்ப, ஐந்தாண்டு கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கையே சீர்குலைத்து அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை அமளிக் காடாக மாற்றியவர் கருணாநிதி. அவர், ‘ஒரு மாதத்திற்கு மேலாக முதலமைச்சர் தலைநகர் சென்னையிலே இல்லையே’ என்ற கேள்வியை தனக்குத் தானே கேட்டு கொண்டு, சில கொலை, கொள்ளைச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நான், தலைநகரில் இல்லாமல் இருப்பது சரியல்ல என்ற ரீதியில் பதில் அளித்து, எந்தப் பத்திரிகையாவது இதைப்பற்றி ஒரு வார்த்தை எழுதியதுண்டா என்றும் அங்கலாய்த்துள்ளார்.

கடந்த ஒரு மாத காலத்தில் தமிழகத்தின் நன்மைக்காக பல முக்கியப் பிரச்னைகளில் நான் எடுத்துள்ள நடவடிக்கைகளை தமிழக மக்களும், பத்திரிகையாளர்களும் நன்கு அறிவர். பிரச்னைகளுக்கு உடனுக்குடன் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என்பதைத்தான் மக்களும், ஊடகங்களும் கூர்ந்து நோக்குவார்கள். அதை விடுத்து, முதலமைச்சர் அதிகாரிகளின் கூட்டத்தை நடத்தி முடிவெடுத்தாரா? அந்தக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டதா? முதலமைச்சரின் இல்லத்தில் நடத்தப்பட்டதா? முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நடத்தப்பட்டதா? முதலமைச்சர் யார் யாருடன் விவாதம் நடத்தினார்? என்பதையெல்லாம் ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள். அவ்வாறு கருத வேண்டிய அவசியமும் இல்லை. எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அதன் மீது தீர்க்கமான, தன்னலமில்லாத, நியாயமான, பாரபட்சமற்ற முடிவை முதலமைச்சர் எடுக்கிறாரா அல்லது தன்னலத்தையும், தனது குடும்ப நலத்தையும் கருதி முடிவுகளை எடுக்கிறாரா என்பது தான் முக்கியமே தவிர, அந்த முடிவு எந்த இடத்திலிருந்து எடுக்கப்படுகிறது என்பது முக்கியமல்ல.

நீலகிரி மாவட்டம், கோடநாட்டில் ஒரு சில நாட்கள் தங்கியிருந்து, அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை நான் மேற்கொள்வேன் என்ற செய்தி தமிழக அரசின் செய்திக் குறிப்பு மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. கோடநாடு என்பது தமிழ்நாட்டின் ஒரு பகுதி. அந்தப் பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும், பழங்குடியின மக்களும் வசித்து வருகிறார்கள். அந்தப் பகுதியில் சில காலம் தங்கியிருப்பது அப்படி என்ன மாபாதக செயலா? கோடநாடு என்ன லண்டனிலா இருக்கிறது? இல்லை கர்நாடக மாநிலத்தில் இருக்கிறதா ? நான் சில நாட்கள் கோடநாட்டில் தங்கி இருந்தாலும், அன்றாட அரசுப் பணிகளை செவ்வனே மேற்கொண்டு வருகிறேன் என்பதை நியாய உணர்வுடைய அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். கோடநாட்டில் தங்கியிருந்த ஒவ்வொரு நாளும், நாள் தவறாமல் பல முறை தொலைபேசியில் தமிழக அரசின் தலைமைச் செயலாளருடனும், காவல்துறை தலைமை இயக்குநருடனும், பிற அரசு அதிகாரிகளுடனும் அவ்வப்போது பேசிக் கொண்டு இருந்தேன். அதனால் தான் பல பிரச்சினைகளில் உடனுக்குடன் விவாதித்து துரித முடிவுகள் எடுத்து செயல்படுத்த முடிந்தது.

இதைப் பற்றி எல்லாம் சரியாக புரிந்து கொள்ளாமல், மனம் போன போக்கில் இந்த அரசின் மீது குறை சொல்லி இருக்கிறார் கருணாநிதி.கருணாநிதி தனது கேள்வி – பதில் அறிக்கையில் ஒரு சில கொலைச் சம்பவங்களை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு நிலைமை குறித்து விமர்சித்துள்ளார்.கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது சட்டம் ஒழுங்கு எவ்வாறு சீரழிந்த நிலையில் இருந்தது என்பது பற்றியும், தற்போது சட்டம் ஒழுங்கு நிலைமை எவ்வாறு சிறப்பாக உள்ளது என்பது பற்றியும் நான் சட்ட மன்றத்திலேயே பல முறை பேசியுள்ளேன். எனவே, இது குறித்து மீண்டும் விரிவாக தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.கருணாநிதி முதலமைச்சராக இருந்து தமிழக முன்னேற்றத்திற்காக என்ன நடவடிக்கை எடுத்தார்?கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது தனக்குத் தானே பாராட்டு விழாக்களை நடத்திக் கொள்வது, திரைப்படங்களை பார்த்து ரசிப்பது, புகழ் பாடுபவர்கள் மத்தியில் உலா வருவது, சினிமா கலைஞர்களை வைத்து தனக்குப் பாராட்டு விழா நடத்திக் கொள்வது, திரைப்படங்களுக்கு கதை எழுதுகிறேன் என்று சொல்லி பணம் சம்பாதிப்பது, தன் குடும்ப உறுப்பினர்களுக்கு பதவிகளைப் பெற்றுத் தருவது, மானாட, மயிலாட நிகழ்ச்சியை கண்டு களிப்பது போன்ற பணிகளுக்கே பெரும்பான்மை நேரத்தை ஒதுக்கினார். அரசு நிர்வாகமே முடங்கிக் கிடந்தது. இது நாடறிந்த உண்மை.

தலைநகரிலேயே எப்பொழுதும் முதலமைச்சர் இருக்கிறாரா, இல்லையா என்பது முக்கியமல்ல. தலைநகரில் இருந்தாலும், தமிழ்நாட்டின் இதர பகுதிகளில் இருந்தாலும், மக்கள் நலனுக்கான துரித நடவடிக்கைகளை எடுக்கிறாரா என்பது தான் முக்கியம்.தற்போது மின்னணு அஞ்சல், நிகரி, கைபேசி போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் பெருகிவிட்ட நிலையில், காணொலிக் காட்சி மூலமாகவே உரையாடுகின்ற வசதி இருக்கின்ற சூழ்நிலையில், கற்கால மனிதரைப் போல் கருணாநிதி அறிக்கை விடுவது அறியாமையின் வெளிப்பாடு” என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment