Saturday, July 27, 2013

விக்கிலீக்ஸ்: சி.ஐ.ஏ. உளவு விமானங்கள்..

ஏமன் நாட்டில் ‘அடையாளம் காணப்படாத’ உளவு விமானங்கள் குண்டுவீசி, அல்-காய்தா தளபதிகளை கொல்கிறது என்ற செய்திகள் அவ்வப்போது வெளியாவதுண்டு. “அதற்கும் நமக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அந்த உளவு விமானங்கள் யாருடையவை என்று தெரியவில்லை” என்று ஏமன் அரசு ‘அப்பாவித்தனமாக’ கூறுவதும், அவ்வப்போது நடப்பதுண்டு. ‘அடையாளம் காணப்படாத’ உளவு விமானம் என்றால், அது அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.வின் விமானங்கள் என்பது, மீடியாக்களின் ஊகம். விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள கேபிள்கள் சிலவற்றில், ஏமன் அரசின் ‘அப்பாவித்தனம்’ எந்தளவுக்கு உண்மை என்று தெரியவந்துள்ளது. தமது நாட்டில் உள்ள அல்-காய்தாவினரை உளவு விமானங்கள் மூலம் தாக்கி கொல்லுமாறு அமெரிக்காவை கேட்டுக்கொண்டதே, ஏமன் அரசுதான் என்ற ரகசியம் வெளியாகியுள்ளது!

ஏமன் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் வாஷிங்டனுக்கு அனுப்பியுள்ள ரகசிய கேபிள்களில், சி.ஐ.ஏ.வுக்கு ரகசியமாக தமது நாட்டின் ‘கதவுகளை திறந்துவிட்டதே’ ஏமன் ஜனாதிபதிதான் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அலி அப்துல்லா சாலே, அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலேசகர் ஜான் ப்ரென்னனிடம், “எனது நாட்டில் உள்ள தீவிரவாத அலக்குகள் மீது தாக்குதல் நடத்த உங்களுக்கு எமது நாட்டின் எல்லைகளை திறந்து விடுகிறேன். இனி, தாக்குதல் நடத்த வேண்டியது உங்களது பொறுப்பு” என்று கூறியதாக, செப்டெம்பர் 2009-ம் ஆண்டு அனுப்பப்பட்ட தூதரக கேபிள் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அலி அப்துல்லா சாலே, 1990-ல் இருந்து 2012-ம் ஆண்டுவரை ஏமன் நாட்டு ஜனாதிபதியாக இருந்தவர்.

சி.ஐ.ஏ.வுக்கு ஓபின் பர்மிஷன் கொடுத்த ஏமன் ஜனாதிபதி, “ஆனால், உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காகவும், சில அரபு நாடுகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பலாம் என்பதற்காகவும், உளவு விமான தாக்குதல்களுக்கு நான் வெளிப்படையாக பொறுப்பேற்க மாட்டேன். தாக்குவது யாருடைய விமானம் என்று எமக்கு தெரியாது என்றே சொல்வேன்” என்றும் கூறியுள்ளார். அதே நேரத்தில் ஏமன் நாட்டு வான் பகுதியில் அமெரிக்க உளவு விமானங்கள் பறப்பதை ஏமன் படைகள் கண்டுகொள்ளாது என்ற உத்தரவாதமும் அவரால் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சி.ஐ.ஏ.வின் முதலாவது உளவு விமான தாக்குதல் ஏமனில் 2009-ம் ஆண்டு டிசம்பரில் நடந்தது. அல்-காய்தா தளபதி ஒருவர் கொல்லப்பட்டார் என்று முதலில் செய்தி வெளியான அந்த தாக்குதலில், சுமார் ஒரு டஜன் பொதுமக்களும் கொல்லப்பட்டனர் என்று பின்னர் தெரியவந்தது.

ஏமன் அரசு, “தாக்குதலை நடத்தியது யார் என்று எமக்கு தெரியவில்லையே” என்று கைவிரித்து விட்டது. இந்த முதலாவது தாக்குதல் நடந்தவுடன், ஏமன் நாட்டில் இருந்த அமெரிக்க தூதர் ஸ்டீஃபன் செச்சியை சந்தித்த ஜனாதிபதி அலி அப்துல்லா சாலே, “ஒரு தாக்குதலோடு நிறுத்தாமல், தொடர்ந்து தாக்குங்கள்” என்று கூறினார் என்கிறது மற்றொரு தூதரக கேபிள். இதையடுத்து இரண்டாவது உளவு விமான தாக்குதல் 2009-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி நடத்தப்பட்டது. இரண்டாவது உளவு விமான தாக்குதல் நடந்தவுடன், ஏமன் அரசுக்கு தெரியாமல் இது நடந்திருக்க முடியாது என்ற கருத்து ஏற்பட்டது. சவுதி அரேபியா உட்பட சில அரபு நாடுகளும், இதில் ஏமன் அரசுக்கு தொடர்பு உள்ளது என சந்தேகம் தெரிவித்தன.

இந்த இரண்டாவது தாக்குதல் நடந்து சில தினங்களில், ஜனவரி 2-ம் தேதி ஏமன் ஜனாதிபதியை நேரில் வந்து சந்தித்த அமெரிக்க ராணுவத்தின் சென்ட்ரல் கமாண்ட் தளபதி ஜெனரல் டேவிட் பெட்ராயஸ், “அடையாளம் தெரியாத விமானங்கள் அடிக்கடி வந்து தாக்குகின்றன என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். தாக்குதல் நடத்த நீங்கள் எமக்கு அனுமதி கொடுத்ததாக அறிவித்து விடுங்கள். அல்லது, நீங்களே உங்களது விமானப்படையை வைத்து தாக்கியதாக சொல்லுங்கள்” என்று ஆலோசனை கூறியுள்ளார். தாக்குதல் நடத்த அமெரிக்காவுக்கு அனுமதி கொடுத்ததாக ஒப்புக்கொள்வதற்கு ஏமன் ஜனாதிபதி தயாராக இல்லை. அமெரிக்காவின் இரண்டாவது யோசனையை நடைமுறைப்படுத்தினார் அவர். அதையடுத்து, ஏமன் நாட்டு துணை பிரதமர் ரஷாத் அல்-அலிமி, “அல்-காய்தா தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது ஏமன் விமானப்படைதான்” என்றார்.

இந்த தாக்குதல்களில் வெடிக்காத இரு குண்டுகளும் தரையில் விழுந்திருந்தன. அவற்றின் போட்டோக்களும் வெளியாகவே, அவை அமெரிக்க குண்டுகள் என்பது வெளியுலகத்துக்கு தெரிய வந்தது. அதற்கு ரஷாத் அல்-அலிமி கூறிய பதில், “ஆமாம். அவை அமெரிக்க குண்டுகள்தான். அவற்றை அமெரிக்காவிடம் இருந்து விலைக்கு வாங்கி, எமது விமானப்படையில் உபயோகிக்கிறோம்” இதில் மற்றொரு சிக்கல் ஏற்பட்டது. ஏமன் விமானப்படையிடம் குண்டு வீச்சு நடத்தக்கூடிய உளவு விமானங்கள் ஏதுமில்லை. எனவே ஏமன் ஜனாதிபதி அமெரிக்க தூதரிடம், “உளவு விமானங்களை பயன்படுத்த வேண்டாம். சாதாரண குண்டுவீச்சு விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்துங்கள். அப்போதுதான் யாருக்கும் சந்தேகம் ஏற்படாது” என்று கூறியிருக்கிறார். அந்த விபரமும், அமெரிக்க துதரகம் அனுப்பிய கேபிளில் உள்ளது.

இதற்கிடையே, ஆரம்பத்தில் இந்த தாக்குதல் நடத்துவது யார் என்று சந்தேகம் எழுப்பிய சவுதி அரேபியா, மறைமுகமாக தாக்குதல் நடத்துவது அமெரிக்காதான் என்பதை புரிந்து கொண்டது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஜெனரல் ஜேம்ஸ் ஜான்ஸ் சவுதிக்கு சென்றபோது, அவரை சந்தித்த சவுதி உள்துறை இணை அமைச்சர் இளவரசர் மொஹமெட் பின் நயிஃப், “ஏமனில் நடப்பவற்றில் சவுதி உளவுத்துறை ஒரு கண் வைத்திருந்தது. முன்பெல்லாம் அங்கிருந்த அல்-காய்தா ஆட்கள் செல்போனில் மணிக்கணக்காக பேசுவார்கள். அவற்றை ஒட்டுக் கேட்பதில் இருந்து எமக்கு பல தகவல்கள் கிடைக்கும். ஆனால், நீங்கள் விமானத் தாக்குதல் நடத்த தொடங்கியபின், அல்-காய்தாவினர் செல்போனில் பேசுவதேயில்லை. தமது உயிர்களை காப்பாற்றிக் கொள்வதற்கே அவர்களுக்கு நேரம் சரியாக போய்விடுகிறது” என்றார்.

“விமான தாக்குதல் நடத்துவது நீங்கள்தான்” என்று மறைமுகமாக சவுதி இளவரசர் சொன்னதற்கு, மறுப்பு தெரிவிக்கவில்லை ஜெனரல் ஜேம்ஸ் ஜான்ஸ். இந்த விபரங்கள் விக்கிலீக்ஸ் வெளியிட்ட கேபிள்கள் மூலம் வெளியானதில், ஏமன் நாட்டுக்குள் நடந்த பல விளையாட்டுகளில் சூத்ரதாரி யார் என்பது தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment