Saturday, June 22, 2013

மணிவண்ணன் மரணம்! பாரதிராஜா காரணம்?

[ நக்கீரன் ]
அரசியல்வாதி, இயக்குநர், நடிகர், எழுத் தாளர் என பன்முகத் தன்மை கொண்ட மணி வண்ணன் பல்வேறு உடல் உபாதைகளுடன் இருந்த நிலையில் கடந்த 15-ந்தேதி தனது 58-வது வயதில் மாரடைப்பால் காலமானார்.
விஷயமுள்ள மனிதராக இருந்தாலும் கூட அணுகுவதற்கும், பழகுவதற்கும் எளிமையானவரான மணிவண்ணனின் மரணம் அவரது அபிமானிகளை மட்டுமின்றி, பொதுமக்களையும் அவருடன் கருத்து வேறுபாடு கொண்டிருப்பவர்களையும் கூட கலங்க வைத்துவிட்டது.
மணிவண்ணனை அறிந்தவர்களிடம் பேசிய போது அவரின் வாழ்க்கைப் பயணம் குறித்து சுவாரஸ்யமான பல செய்திகள் கிடைத்தன.
மணிவண்ணனின் அப்பா சுப்பிரமணியம் கோவை மாவட்டம் சூலூர் பேரூராட்சி தி.மு.க. கிளை செயலாளர். இதனால் சிறுவயதிலேயே அரசியலால் கவரப்பட்ட மணிவண்ணன், உதயசூரியன் சின்னம் வரைந்த பதாகை ஏந்தி ஓட்டுகேட்டுப் போனதுண்டு. கம்யூனிஸ்ட் சிந்தனையாளரான ஸ்கூல் வாத்தியார் காளிமுத்து மாக்ஸிம் கார்க்கியின் "தாய்' நாவலை மணிவண்ணனுக்கு படிக்கக் கொடுத்தார்.
அதன்பிறகு தோழர் வள்ளுவதாசன் மூலம் "வால்காவிலிருந்து கங்கை வரை' உள்ளிட்ட நூல்களைப் படித்தவருக்கு கம்யூனிஸ சித்தாந்தங்கள் மீது ஈர்ப்பு ஏற்பட... பாடும் திறமை கொண்ட மணிவண்ணன் வலது கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.
மார்க்சிய லெனினிஸ்ட் நக்ஸல்பாரி அமைப்பில் மாநிலக் குழு உறுப்பினராகவும் 1976-ல் தன் 21 வயதில் தீவிரமாக செயல்பட்ட மணிவண்ணனின் இயக்கப் பெயர் "கருப்பையா'.இயக்கத்தில் கருத்து வேறுபாடுகள் காரணமாக அரசியலில் தீவிரம் காட்டாமல் சென்னை வந்தார். "கிழக்கே போகும் ரயில்' படம் பார்த்துவிட்டு மிக நீண்ட கடிதம் ஒன்றை பாரதிராஜாவுக்கு எழுதி அனுப்புகிறார். அழைப்பு வந்ததன் பேரில் பாரதிராஜாவை சென்று சந்தித்தார்.
புத்தக வாசிப்பில் தீவிரமான மணிவண்ணனின் பேச்சு பாரதிராஜாவைக் கவர்ந்து விடுகிறது. வேலை இல்லாத இளைஞர்கள் பற்றிய கதை ஒன்றைச் சொல்கிறார் மணிவண்ணன். "நீயே வசனமும் எழுதிக் கொண்டு வா' என்கிறார் பாரதிராஜா. அப்படி உருவானதுதான் "நிழல்கள்' படம்.
"எவனோ ஒருத்தன் ஜிப்பாவும் கண்ணாடியும் போட்டுக்கிட்டு கோயம்புத்தூர்ல இருந்து வந்து கதை சொன்னான்னு "நிழல்கள்' படம் எடுத்த! இப்ப என்னாச்சு? இதுவரை தோல்விப் படம் கொடுக்காத நீ தோத்திட்டியே' என பாரதிராஜாவை பலரும் கடிந்து கொள்ள... பாரதிராஜா அலட்டிக் கொள்ளவில்லை.
"என்ன செய்வியோ தெரியாது! உன்னோட கதை-வசனத்துல நான் சூப்பர் ஹிட் படம் தரணும். கதை ரெடி பண்ணு' என மணிவண்ணனிடம் சொல்ல... அப்படி உருவானதுதான் "அலைகள் ஓய்வதில்லை'. "சிறந்த கதாசிரியர், சிறந்த உரையாடல்' என இரண்டு மாநில அரசு விருதுகளை எம்.ஜி.ஆர். கையால் வாங்கினார் மணிவண்ணன்.
தொடர்ந்து பாரதிராஜாவிடம் உதவி டைரக்டராக, கதாசிரியராக பணிபுரிந்த மணிவண்ணன் "கோபுரங்கள் சாய்வதில்லை' படம் மூலம் இயக்குந ரானார். அதன்பிறகு 1988-ல் "கொடி பறக்குது' படத்தில் ரஜினிக்கு வில்லனாக மணிவண்ணனை திரையில் அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா.
"நூறாவது நாள்', "முதல் வசந்தம்', "அமைதிப்படை' என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியபடியே நடிப்பிலும் வளர்ந்து வந்த மணிவண் ணன் "காதல் கோட்டை' படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். படத்தின் அபார வெற்றிக்குப் பின் மணிவண்ணன் இல்லாமல் படமே இல்லை என்கிற அளவிற்கு வாய்ப்புகள் குவிந்தது.
வீட்டில் போய் ரெஸ்ட் எடுக்க முடியாத அளவுக்கு பிஸி! இதனால் சொந்தமாக, எல்லா வசதியும் கொண்ட கேரவன் வேனை வாங்கிக்கொண்டு அந்த வேனிலேயே வாழ்கிற அளவிற்கு பிஸியானார். ம.தி.மு.க. கட்சியில் இணைந்து வைகோவுடன் அரசியலில் ஈடுபட்டார்.
இருதய ஆபரேஷன் செய்து கொண்ட பிறகு நீண்ட ஓய்வில் இருந்த மணிவண்ணன் தனது இயக்கத்தில் 50-வது படமாக "நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ.' படத்தை கடந்த மாதம் வெளியிட்டார்.
சத்யராஜை வைத்து ஒரு படம், தன் மகன் ரகுவண்ணனை வைத்து ஒரு படம்... என அடுத்தடுத்த பட வேலைகளுக்கு ஆயத்தமான நிலையில்தான் மணிவண்ணன் காலமாகிவிட்டார்.
"மணிவண்ணனுக்கு பாரதிராஜாவால் ஏகப்பட்ட மனஉளைச்சல். மணிவண்ணனோட அகால மரணத்துக்கு அதுவும் ஒரு காரணம்...' என இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பலரும் பேசிக் கொண்டார்கள்.
குருவுக்கும்-சிஷ்யருக்கும் இடையே என்னதான் பிரச்சினை? ""காவேரிப் பிரச்சினைக்காக என் தலைமையில் நெய்வேலியில் திரையுலகினர் போராட்டம் நடந்தது.
பல நெருக்கடி சிரமங்கள் பட்டு அந்த போராட்டத்தை ஏற்பாடு செஞ்சேன். ஆனா அந்த கூட்டத்தை ஒரு ஆள் தன்னோட சுய அரசியல் லாபத்துக்காக பயன்படுத்திக்கிட்டாரு. (விஜயகாந்த்) இராமேஸ்வரத்தில் மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் தாக்கப்படுவதை கண்டிச்சு மிகப்பெரிய திரையுலக போராட்டத்தை ஏற்பாடு செஞ்சேன். அங்கே ஒருத்தன் அரசியல் சுயலாபத்துக்கு அந்த மேடையை பயன்படுத்திக்கிட்டான். (சீமான்) அதனால் இனி நான் எந்த போராட்டங்களையும் நடத்த மாட்டேன்!' என சொல்லி வரும் பாரதிராஜாவுக்கு சீமானின் அரசியல் அவதாரம் பிடிக்க வில்லை. ஆனால் தன் நேசத்திற்குரிய சிஷ்யன் மணிவண் ணன் சீமானின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது பாரதிராஜாவுக்குப் பிடிக்கவில்லை! அதனால் மணிவண்ண னுடன் பேசுவதையே தவிர்த்துவிட்டார் பாரதிராஜா.
பாரதிராஜாவை "அப்பா அப்பா' எனச் சொல்லும் மணிவண்ணனால் பாரதிராஜா தன்னைப் புறக்கணிப்பதை தாங்க முடியவில்லை. அதற்காக அவர் சீமானுடனான தனது அரசியல் நிலைப்பாட்டையும் கைவிடவில்லை.
ஓரிரு மாதங்களுக்கு முன் எஃப்.எம். ரேடியோ சிட்டி பேட்டியில் அழுதே விட்டார் மணிவண்ணன்.
"அரசியல் ரீதியாக பிரிவு இருந்தாலும் என் ரெண்டாவது தாய், ரெண்டாவது தந்தை பாரதிராஜாதான்' என்றவர் பாரதிராஜாவுக்கே ரேடியோ மூலம் உருக்கமான கோரிக்கை வைத்தார்.
"என் நேசத்திற்குரிய ஆசான்... அப்பா வணக்கம்! உங்க ஆசீர்வாதத்தால்... அரவணைப்பால் நான் நல்ல நிலையில் இருக்கேன். எனக்கு நீங்கதான் கல்யாணம் பண்ணி வச்சீங்க. நேத்து நடந்த மாதிரி இருக்கு. என் மகளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. என் மகனுக்கும் கல்யாணம் ஆகப் போகுது. நான் எவ்ளோ பெரிய டைரக்டராக இருந்தாலும், எத்தனையோ பேர் சிலாகிச்சாலும், அப்பா... சத்தியமா சொல்றேன். நான் எப்பவுமே பாரதிராஜா அஸிஸ்டெண்ட்... (கதறி அழுகிறார்) எப்பவுமே பாரதிராஜா அஸிஸ்டெண்ட் தான். என் மேல கோபமா இருந்தா ஒரு அறை விட்டிருங்க. என் கூட பேசாம இருக்காதீங்க!'
... இப்படி உருக்கமுடன் வேண்டியிருந்தார்.
"பாரதிராஜாவுக்கு தான் மட்டும்தான் டைரக்டர்னு நினைப்பு! மத்தவங்களை ஒரு பொருட்டா மதிக்க மாட்டார்' என்றும் "ரூம்ல உட்கார்ந்து வசனம் எழுதிக் கொடுக்கும் போது "நல்லா இருக்கு'னு பாராட்டுவார். அதே வசனத்தை ஷுட்டிங் ஸ்பாட்டில் சொல்லும்போது "என்னய்யா வசனம்?'னு ரைட்டிங் பேடை தூக்கி எறிவார்!' என பாரதிராஜா குறித்து தன் அனுபவங்களையும் சினிமா மேடைகளில் சொல்லி வந்தார்.
இந்நிலையில் ஒரு பத்திரிகை கேள்வி-பதிலில் மணிவண்ணன் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த பாரதிராஜா "அவன் அதிகமா பொய் சொல்வான், பிச்சைக்காரப் புத்தி' என்றெல்லாம் கடும் வார்த்தைகளில் சொல்லியிருந்தார். இந்தப் பதிலைப் படித்த எல்லோருமே அதிர்ச்சியடைந்தார்கள். இதற்கு பதில் கேட்டு இரண்டு நாட்களாக மீடியாக்கள் மணி வண்ணனின் செல்போனை முற்றுகையிட... மணி வண்ணனுக்கு மிகுந்த மன உளைச்சல் உண்டாகிவிட்டது. அவரின் மரணத்திற்கான காரணங் களில் இந்த மன உளைச்சலும் முக்கியமானது!'' என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.
பாக்யராஜை சந்தித்துப் பேசினோம். ""மணிவண்ணன் நல்ல படைப்பாளி! வித்தியாசமான புத்தகங்களைப் படிக்கிற படிப்பாளி! எழுத்தாளர், பேச்சாளர், சமூக சிந்தனை உள்ள முற்போக்குவாதி. ஈழத்தமிழர்கள் மீது எல்லாருக்குமே ஒரு பரிவு இருக்கும். ஆனா அவங்களை ரத்த உறவா பார்த்துப் பழகியவர் மணிவண்ணன். எனக்குப் பிறகுதான் பாரதிராஜாவிடம் சேர்ந்தார். ஆனாலும் பாரதிராஜாவுக்கு பிடித்தமானவராக இருந்தார் மணிவண்ணன். ஈகோவே பார்க்கமாட்டார். டிஸ்கஷன்ல ஒரு நல்ல ஸீனைச் சொன்னாபோதும், சொன்னவங்க காலைத்தொட்டு வணங்குவார். என்னோட "ஆராரோ ஆரிரரோ' படத்தில வர்ற "அதிர்ச்சி பைத்தியம்' கேரக்டரை அவர்தான் சொன்னார்.
பாரதிராஜா கோபம்கிறது குழந்தைக் கோபம் மாதிரி. தன் படங்கள்ல ஸ்கிரிப்ட்ல ஒர்க் பண்ற திறமையானவங்க தன்னை விட்டு விலகும்போது கோபப்படுவார். எல்லார் மேலயும் பாரதிராஜா கோபப்பட மாட்டார். தனக்குப் பிடிச்சவங்க மேலதான் ரொம்ப கோபப்படுவார். ஓவர் அபெக்ஷனில் பேசுறது பாரதிராஜா வோட வழக்கம். பாரதிராஜா, மணி வண்ணனைப் பத்தி பதில் சொன்ன நேரத்துல மணி வண்ணனோட துயர மரணம் நிகழ்ந்திருச்சு. அது தான் வருத்தமா இருக்கு'' என்கிறார் துயரத்துடன்.
இயக்குநர் சீமானிடம் பேசியபோது, ""எதனால் மரணம் ஏற்பட்டது என்று மருத்துவர்களிடம் நான் விசாரித்தபோது, "எதிர்பாராத மனஉளைச்சல்களின் அழுத்தம் காரணமாக இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது' என்றனர். அதனால், விமர்சனங்கள் அவரது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். வாய்ப்பிருக்கிறது. இறப்பதற்கு முதல்நாள் இரவு 10 மணிக்கு, அப்பா பாரதிராஜா எழுதியவைகள் குறித்து அழுதபடியே என்னிடம் வருத்தப்பட்டார். அப்போ, "அப்பாதானே சொல்லியிருக்கிறார். வருத்தப்படாதீங்கப்பா'ன்னு அவரை தேற்றினேன். "ஆமாம்... ஆமாம்... அப்பாதானே... வருத்தப்படக்கூடாது' என்றே தன்னை தேற்றிக் கொண்டார் அப்பா மணிவண்ணன். ஆனாலும் மன அழுத்தம் அவரை பாடாய்படுத்தியது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. எல்லாம் முடிஞ்சிடுச்சி. இறந்தவருக்காக இருப்பவரை காயப்படுத்த விரும்பவில்லை'' என்கிறார் மிகுந்த சோகமாக.
இளையராஜா பற்றி பாரதிராஜா, பாரதிராஜா பற்றி இளையராஜா, மணிவண்ணன் பற்றி பாரதிராஜா... சமீப காலமாக மீடியாக்களில் தெரிவித்துவரும் கருத்துக்கள் விரும்பக் கூடியதாக இல்லை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

No comments:

Post a Comment