Friday, May 24, 2013

கிளிநொச்சி மாணவன் தமிழகத்தில் சாதணை! வியப்புடன் கல்வியுலகம்!

இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் எவ்வித நம்பிக்கைகள், எதிர்கால நிச்சயங்கள் இன்றி ஏராளமான ஈழத் தமிழ் அகதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அந்த மக்களுக்கே நம்பிக்கை ஒளி ஊட்டும் விதத்தில் கல்வியில் சாதனை படைத்திருக்கிறார் அருண்ராஜ்.
ஈழத் தமிழ் மக்கள் இனி வரும் காலங்களில் கல்வி ஒன்றால் தான் எங்களது பழைய நிலையை அடைய முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றார் இந்த மாணவர்.
தமிழ்நாட்டில் உள்ள 114 ஈழ அகதி முகாம்களில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள தாழையூர் இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த நாகேந்திரன் அருண்ராஜ் என்ற மாணவரே பிளஸ் 2 தேர்வில் 1200 க்கு 1127 என்ற அதிக மதிப்பெண்கள் வாங்கி சாதித்திருக்கின்றார். (இலங்கையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் (A/L) பரீட்சையானது இந்தியாவில் பிளஸ் 2 (Plus 2) பரீட்சை என அழைக்கப்படுகின்றது.)
தாயகத்தில் கிளிநொச்சியை சொந்த இடமாகக் கொண்ட அருண்ராஜ் இன் பெற்றோர் இலங்கையில் நிலவிய கடும் யுத்தம் காரணமாக தமிழகத்துக்கு 1990 களில் குடிபெயர்ந்தவர்கள். கஷ்டமான சூழ்நிலையில் அருண்ராஜ் பிறந்து வளர்ந்தது எல்லாமே அகதி முகாமில் தான்.
எப்படி உங்களது அசாத்திய வெற்றி சாத்தியமானது?
என்னோட அப்பா, அம்மா முதல் காரணம்… என்னுடைய அப்பா நீ படிச்சு பெரிய ஆளாக வர வேணும் அதிக மார்க் வாங்க வேண்டும் என்று எப்பவும் சொல்லுவார். அடுத்து என்னோட ஆசிரியர்கள்.. குறிப்பாக கலா மிஸ், சுபா மிஸ், மீனா மிஸ் இந்த மூன்று ஆசிரியர்களும் எனது கல்வி வளர்ச்சியில் மிகப்பெரிய தூண்டுகோலாக இருந்தார்கள். என்னுடைய நண்பர்களும் புரியாத பாடக்குறிப்புக்களை சொல்லிக் கொடுத்து உதவினார்கள். எனது உறவினர்களும் நிறைய உதவிகள் புரிந்து இருக்கின்றார்கள்.
முகாம் சூழல் உங்களுக்கு படிக்கக் கூடியதாக இருந்ததா?
வீட்டில் பொருளாதாரச் சூழல் தான் கஷ்டமாக இருந்தது… முகாமில ஒரு ரூம், ஒரு கோல் தான் இருக்கும்…. நான் படிக்கிற நேரங்களில வீட்டில் எந்த இடையூறும் பண்ண மாட்டார்கள்…. தொலைக்காட்சி எதுவும் போட மாட்டார்கள். அதனால் என்னால் நன்றாகப் படிக்க முடிந்தது.
அடுத்து மேற்படிப்பு என்ன படிக்கிறதா இருக்கிறீங்கள்?
இஞ்சினியரிங் படிக்கிறதா இருக்கிறேன்.. என்னோட ஆசை ஆர்வம் எல்லாமே மருத்துவருக்கு படிக்கிறது தான்… பொருளாதார கஷ்டம் டாக்டருக்கு படிக்க இடம் கொடுக்கல.. வருடத்துக்கு இரண்டரை இலட்சம் ரூபாய்களுக்கு மேல் செலவாகும் என்கிறார்கள். அதனால டாக்டருக்கு படிக்கிறதை என்னால் நினைச்சுக் கூட பார்க்க முடியல. என்னோட அப்பா சாதாரண கொத்தனார் வேலை பார்த்து தான் எங்களை இவ்வளவுக்கு படிப்பித்து இருக்கின்றார். நான் இப்ப இஞ்சினியரிங் படிக்கிறதுக்கே மிகுந்த சிரமப்பட வேண்டி உள்ளது.
பாடசாலையில் உங்களை எப்படி நடாத்தினார்கள்?
எனக்கு படிப்பித்த ஆசிரியர்களும் சரி மாணவர்களும் சரி என்னை ஒரு சகோதரனாய் தான் நடாத்தினார்கள். ஈழ அகதிமுகாம் மாணவன் என்று என்னை எந்த வேறுபாடும் காட்டாமல் வழி நடாத்தினார்கள். அதனால் தான் என்னால் இப்படி புள்ளிகளைப் பெற முடிந்தது.
உங்களது எதிர்கால திட்டங்கள் என்ன?
என்னுடைய மேற்படிப்பை நல்ல படியாக முடித்து என்னைப் போல் இந்த முகாம்களில் கஷ்டப்படும் மாணவர்கள் கல்வியில் முன்னிலை பெற நிச்சயம் என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.
தேவகோட்டை தாளையடி அகதி முகாமில் அருண்ராஜ் உடன் சேர்த்து பிளஸ் 2 பரீட்சையில் திருச்செல்வம், மோகன், லாவண்யா, லூசியா, சிவநேசன், பேபிசாலினி, சசிகலா, அஜிந்தன் போன்ற மாணவர்களும் சிறப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
இப்படி நம்பிக்கையோடு இருக்கும் தன்னம்பிக்கையுள்ள மாணவர்களை ஊக்குவிப்பது உலகெங்கும் பரந்து வாழும் மக்களின் கடமையாகும்.
jvp-Arun1jvp-Arun2

No comments:

Post a Comment