Sunday, May 26, 2013

டி.எம்.சௌந்தரராஜன் பூதவுடல் தீயுடன் சங்கமம்- ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி !!


மறைந்த பழம்பெரும் பின்னணிப் பாடகர் டி.எம்.செளந்தரராஜன் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடந்தது. ஆயிரக்கணக்கானோர் அதில் கலந்து கொண்டனர்.
சாகாவரம் படைத்த பல ஆயிரம் பாடல்களைப் பாடிய டிஎம்எஸ் கண் மூடி விட்டார். அவரது மறைவால் உலகத் தமிழர்கள் பெரும் சோகமடைந்துள்ளனர்.
எங்கு பார்த்தாலும் டிஎம்எஸ் பேச்சாகவே உள்ளது. காய்கறிக் கடை, டீக் கடை, கறிக் கடை என்று எந்த இடமாக இருந்தாலும் மக்கள் டிஎம்எஸ்ஸின் குரலையும், அவரது பாடல்களையும் பற்றியே பேசியபடி உள்ளனர்.
சென்னையில் உள்ள டிஎம்எஸ்ஸின் வீட்டில் திரைப்படத் துறையினர், அரசியல் துறையினர், பல்துறைப் பிரபலங்கள், ரசிகர்கள் குவி்ந்து அஞ்சலி செலுத்தி வந்தனர்.
முதல்வர் ஜெயலலிதா, திமுக த லைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் டிஎம்எஸ்ஸின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இன்று மாலை நாலரை மணியளவில் டிஎம்எஸ்ஸின் வீ்ட்டிலிருந்து இறுதி ஊர்வலம் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தொடங்கியது.
திரையுலகினர், ரசிகர்கள் பெருமளவில் திரண்டு வந்து கலந்து கொண்டனர். உடல் தகனம் டிஜிபி அலுவலகம் பின்புறம் உள்ள இடுகாட்டில் நடைபெற்றது.

பிரபல பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் காலமானார்!
[ சனிக்கிழமை, 25 மே 2013, 11:20.17 AM GMT ]
பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் இன்று சனிக்கிழமை மாலை சென்னையில் காலமானார்.
இருதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பின்னர் வீடு திரும்பியிருந்தார் ஆயினும் இன்று சனிக்கிழமை சற்று நேரம் முன்னதாக அவர் தனது வீட்டில் காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 91.
தென்னிந்திய திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக பின்னணி பாடி வந்த இவர், பட்டினத்தார் உட்பட சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.
1923 ஆம் ஆண்டு மதுரையில் சௌராஸ்டிர குடும்பத்தில் பிறந்த இவரது தகப்பனார் பெயர் மீனாட்சி ஐயங்கார்.
1950 ஆம் ஆண்டும் கிருஷ்ண விஜயம் என்னும் படத்தில் 'ராதே என்னை விட்டுப் போகாதடி'' என்னும் பாடலுடன் இவர் அறிமுகமானார்.
2ம் இணைப்பு
புலிகளின் தலைவரால் அனுமதிக்கப்பட்ட பாடகர் டி.எம் செளந்தரராஜனின் பாடல் "அதோ அந்த பறவை போல...." 
இந்தியாவின் மிகச் சிறந்த பின்னணிப் பாடகரும் இசைக் கலைஞருமான டி.எம் சௌந்தரராஜன் இன்று பிற்பகல் சென்னையில் மரணமடைந்தார்.
பல்லாயிரக் கணக்கான சினிமாப் பாடல்கள் இருந்தாலும் விடுதலைப் புலிகளின் பாசறைகளில் ஒலித்த பாடல்கள் 2 தான்.
அவற்றுள் ஒன்று "அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்" என்ற பாடல் தான். இப் பாடலின் சொந்தக்காரர் டி.எம்.ஸ் தான்.
மற்றும் P.B.ஸ்ரீனிவாஸ் பாடிய  ``தோல்வி நிலையென நினைத்தால்..." என்ற பாடல்.  இதிலும் தலைவருக்கு பிடித்த வரிகளாக....
யுத்தங்கள் தோன்றட்டும் இரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா.
இப் பாடலையே புலிகளின் தலைவர்  வேலுப்பிள்ளை பிரபாகரன்  புலிகள் உறுப்பினர் பாட அவ்வேளையில் அனுமதித்திருந்தார்.
இப் பெருமைக்குரிய பின்னணிப் பாடகரான டி.எம். சௌந்தரராஜன் அவர்கள் இழப்பானது ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும்.

இப்ப மௌனம்தான் எனக்கு முக்கியம்! -டி.எம்.எஸ்.





சுஜாதா கூறுகிறார்…..

மெரீனாவில் மாலை நடந்து செல்லும்போது, சென்னையின் பல பெரிய மனிதர்கள் எதிரில் செல்வார்கள்.

பீட்டர் அல்ஃபோன்ஸ், ஏவி.எம்.குமரன், ஆர்.எம். வீரப்பன்… இப்படிப் பலர் கடக்கும்போது, ஒரு புன்னகையோ அல்லது ஐ.சி.ஐ.சி.ஐ. விளம்பரம் போல ஒரு ‘ஹம் ஹை நா’ கையசைப்போ பரிமாறிக் கொள்வோம்.

போன வாரம் டி.எம்.எஸ்., சந்தன கலர் சபாரி சூட்டுடன், சென்ட் வாசனையுடன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தபோது, பேச வேண்டும் என்று தோன்றியதன் காரணம் – இளம் வயதில் அவருடைய பல பாடல்கள் என்னைக் கவர்ந்திருக்கின்றன.

இப்போதுகூட ‘அவளுக்கென்ன‘வோ, ‘வந்த நாள் முத‘லோ, ‘அதோ அந்தப் பறவை போல‘வோ, ‘அந்த நாள் ஞாபக’மோ, ‘நான் ஆணையிட்டா’லோ டி.வி-யில் வரும்போது, விரல் சேனல் தாவத் தயங்குகிறது.


“எத்தனை பாட்டு பாடியிருப்பீங்க? எல்லாப் பாட்டும் நினைவிருக்கா?”

“கிருஷ்ண விஜயம் படத்தில் நரசிம்ம பாரதிக்குப் பாடினதுதான் முதல் பாட்டு. அதிலிருந்து நான் பாடின பாட்டெல்லாம் நோட்புக்கில் வரிசையா பாடின தேதி, அதற்குப் பெற்ற தொகை எல்லாத்தையும் எழுதி வெச்சிருக்கேன். ஆயிரக் கணக்கில் இருக்கும்!’’

‘‘டி.எம்.எஸ்.-ங் கிறதுக்கு விளக்கம் என்ன?’’

‘‘மூணு விளக்கம் இருக்கு. ‘டி’ங்கறது எங்க சௌராஷ்டிர கர்ப்பிணிப் பெண்களுக்குக் கொடுக்கும் பத்திய உணவு சார்ந்த ஊர்ப் பெயர் – தொகுளுவா (Thoguluva), ‘எம்’ங்கறது மீனாட்சி ஐயங்கார்(!), ‘எஸ்’ – சௌந்தர்ராஜன்.

இன்னொரு விளக்கம் – தியாகையர், முத்துசுவாமி தீட்சிதர், சாமா சாஸ்திரிகள் இந்த மும்மூர்த்திகளுடைய இனிஷியலும் எனக்குக் கிடைச்சது ஒரு பாக்கியம்.

மூணாவது – ட்ரான்ஸென்ட்டல் மெடிட்டேஷன் சர்வீஸ், என் பாட்டுகள் மூலம் கொடுக்கறது!

‘பாடும் குயிலின் இசைப் பயணம்‘னு என் வாழ்க்கையை நானூறு பக்கம் புத்தகமா போட்டிருக்காங்க, மணிவாசகர் பதிப்பகத்துல! படிச்சுப் பாருங்க!”

‘‘உடல்நிலை எப்படி இருக்கு?’’

“டயபடீஸ் தொல்லை கொடுக்குது. கால் வீங்கிக்குது. இப்பக் கொஞ்சம் காது கேட்கலை. அதனால, மத்த பேரோடு பேசும் போது இரைச்சலா பேச வேண்டியிருக்குனு ஹியரிங் எய்டு வெச்சிருக்கேன். நிறையப் பாடிட்டேன். இப்ப மௌனம்தான் எனக்கு முக்கியமா இருக்குது!” என்றவர், சின்ன மூன்றறைப் பெட்டியைக் காட்டி, “பாருங்க… தனித்தனியா காலை, மத்தியானம், இரவுனு ஒரு நாளைக்குப் பன்னிரண்டு மாத்திரை சாப்பிடறேன்!” என்றார்.

“நானும்தான்!” என்றேன்.

“பெரிய பெரிய நடிகர்களெல்லாம் என் குரலைப் பயன்படுத்தி, சினிமாவிலேயும் அரசியல்லேயும் உச்சத்துக்கு உயர்ந்தாங்க!’’

‘‘அவங்க உங்களுக்கு நன்றி சொன்னாங்களா?”

உதட்டைப் பிதுக்கி, “ம்ஹூம்..! ஆனா, அவங்க எல்லாம் இறந்து போயிட்டாங்க. குரலில் மட்டும் உசுரோட இருக்கேன். உங்களை மாதிரி படிச்சவங்க பாராட்டு போதும்! இப்பக்கூட சிங்கப்பூர்ல ஒரு பாராட்டு விழாவுக்கு அழைச்சிருக்காங்க. ஏப்ரல்ல போறேன்!”

“டயபடீஸைப் பார்த்துக்குங்க. இருநூறுக்கு மேல போஸ்ட்பிரண்டியலைத் தாவ விடாதீங்க. தினம் நடங்க. பாட்டை விட்டுராதீங்க!” என்றேன்.

“வரேங்க…” என்று கற்பகவல்லியின் ஆனந்த பைரவியைக் கோடி காட்டிவிட்டு, எழுந்து சென்றார் டி.எம்.எஸ்.


‘‘எல்லாரும் விருப்பு வெறுப்பு இல்லாம கேக்கக்கூடிய குரலை எனக்குக் கொடுத்து, பாடக்கூடிய பக்குவத்தைத் தந்ததே முருகப் பெருமான்தான்.

சில வருஷத்துக்கு முன், மலேசியாவுல கச்சேரி… அங்கே ரசிகர் ஒருத்தர், இந்த கல் பதித்த வேலையும் கந்தனையும் கொடுத்தார். எங்க ஆயுசு நீடிச்சிருக்கறதுக்கு, இவைதான் காரணம்! தினமும் காலைல முருகனை வழிபட்டுட்டுதான் அடுத்த வேலை பார்ப்பேன்! எனக்குள்ளே ஆன்மிக சிந்தனை வந்ததுக்கு பழநி முருகனே காரணம்!



ஒருமுறை, பழநி கோயிலுக்குப் போனவன், சந்நிதிக்குள் நுழைஞ்சதும், தண்டாயுதபாணிய பாத்தேன்.

அவ்ளோதான்… பஞ்சாமிர்த வாசனையும் விபூதியோட நறுமணமும் ஏதோ பண்ணுச்சு. ‘கடைசில நாமளும் சாம்பலாத்தானே போகப் போறோம்’னு சட்டுன்னு ஒரு எண்ணம். அந்த நிமிஷத்துல இருந்து முருகனோட பாடல்களைப் பாடுறதுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சேன்; முருக பக்தனாவே மாறிப் போனேன்.



ஒருமுறை… காஞ்சி மகா பெரியவாளைப் பத்தின பாடல்களை நான் பாடி, அதை பெரியவாள் கேட்டு ரசிச்சதோட, அந்த கேசட் மேல தேங்காயை சுத்தி திருஷ்டி கழிச்சாராம். இதை என் ரசிகர்கள் சொல்லவும் அடுத்ததா… அவரை தரிசிக்கிற வாய்ப்பும் கிடைச்சது.

சைகையில பக்கத்துல வரச்சொன்ன சுவாமிகள், ‘கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்’ பாட்டை பாடச் சொன்னார். நானும் பாடினேன். உடனே, உதவியாளரைக் கூப்பிட்டு, தன் மேல போட்டிருந்த சால்வையைக் கொடுத்து, என் கழுத்துல போடச் சொன்னார்.

இதைவிட பாக்கியம் என்ன வேணும் எனக்கு?’’

- இப்படி நெக்குருகிச் சொல்பவர்… பாடகர் டி.எம்.சௌந்தரராஜன்.


No comments:

Post a Comment