Tuesday, March 26, 2013

பழம்பெரும் நடிகை சுகுமாரி மரணம் !

உடலில் தீக்காயம் பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகை சுகுமாரி மாரடைப்பால் காலமானார்.
74 வயதான சுகுமாரி சமீபத்தில் தன் தி.நகர் வீட்டில் விளக்கு ஏற்றும்போது புடவையில் தீ பிடித்து, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர், பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
முதல்வர் ஜெயலலிதா, கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுகுமாரியை நேரில் சென்று நலம் விசாரித்தார். முதல்வர் ஜெயலலிதாவுடன் பல படங்களில் நடித்துள்ளார்.
இருவரும், நெருக்கமான நட்பு கொண்டவர்கள். இந்நிலையில் சுகுமாரி இன்று மாரடைப்பால் காலமானார். சுகுமாரியின் இறுதிச்சடங்குகள் நாளை(27.03.13) நடைபெறுகிறது.
1938ம் ஆண்டு அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட நாகர்கோவிலில் பிறந்தவர் நடிகை சுகுமாரி.
பிரபல நடிகைகளான லலிதா, பத்மினி மற்றும் ராகினியின் உறவினரான சுகுமாரி ஆரம்பகாலத்தில் நடன கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கினார்.
தொடர்ந்து இந்தியா முழுக்க பல்வேறு சபாக்களில் நடனமாடியுள்ள சுகுமாரி தமிழில் ஓர் இரவு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி உள்ளிட்ட தமிழ் ஜாம்பவான்களுடன் பல்வேறு படங்களில் நடித்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 2500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
விபத்துக்கு முன்னர் கூட சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்த சுகுமாரி, கடந்த 2011ம் ஆண்டு, நம்ம கிராமம் என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.
இது தவிர 2003ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது, கேரள மாநில அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். நடிகை சுகுமாரி பிரபல இயக்குனர் பீம்சிங்கை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சுரேஷ் பீம்சிங் என்ற மகன் உள்ளார்.

No comments:

Post a Comment