Sunday, February 3, 2013

அலஸ்டர் பேர்டுக்கு சொக்கையில் அறைந்த தமிழ் மக்கள் !




பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சிலரும், மற்றும் பிரித்தானியாவின் வெளியுறவுச் செயலாளருமான அலஸ்டர் பேர்ட் அவர்களின் குழுவும் இணைந்து இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இரண்டு நாள் பயணத்தின் முதல் கட்டமாக அவர், முல்லைத்தீவுக்குச் சென்றுள்ளார். பின்னர் அவர் கோப்பாபிலவு மக்களைச் சந்தித்தாகவும், அவர்கள் தமது குறைகளைச் சொல்லும்போது இராணுவம் அச்சுறுத்தியதாகவும், அதன் நேரடி வீடியோக்கள் என்று சொல்லி ஒரு காணொளியை சில ஊடகங்கள் வெளியிட்டது. ஆனால் கோப்பாபிலவு பிரதேச மக்களிடம் இருந்து நேரடியாக அதிர்வு இணையத்துக்கு கிடைக்கப்பெற்ற செய்திகள் முற்றிலும் வேறுபட்டவையாகவே இருக்கிறது. சரி அப்படி என்ன விடையம் என்று குழம்பவேண்டாம்.... 

குறிப்பிட்ட பிரதேசத்துக்கு அலஸ்டர் பேர்ட் அவர்கள் விஜயம்செய்ய முன்னரே அங்கே இராணுவத்தினர் பலர் குவிக்கப்பட்டுள்ளார்கள். அதுமட்டுமல்லாது, பொதுமக்கள் எவ்வாறு அலஸ்டர் பேர்ட்டோடு கதைக்கவேண்டும் என்று கூட இராணுவத்தினர் பாடம் நடத்தியுள்ளர்கள். இதனால் எமக்கு ஏன் வம்பு என்று எண்ணிச் சிலர், வீட்டுக் கதவை பூட்டி உள்ளே இருந்துவிட்டனர். மிருக் காட்சிசாலையைப் பார்க்க , சுற்றுலாப் பயணிகள் வருவது போல வெளிநாட்டுத் தூதுவர்கள் வந்து எம்மை பார்த்துச் செல்கிறார்களே தவிர, எமக்கு எவ்வித உதவிகளும் இதுவரை கிடைக்கவில்லை என்று எண்ணி மேலும் பல மக்கள் தமது வீடுகளுக்குள் அடைந்து கிடந்துவிட்டனர். இதனால் அலஸ்டர் பேர்ட் குழுவினரை கோப்பாபிலவு மக்கள் புறக்கணித்துள்ளார்கள். இதுவே உண்மை நிலையாகும்.

இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் புடைசூழ வந்த அலஸ்டர் பேர்ட் அவர்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. அங்குள்ள மக்கள் அவருக்கு சொக்கையில் அறைந்ததுபோல அதிர்ச்சி வைத்தியம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள். ஒருவாறாக, அங்குள்ள வீடு ஒன்றின் கதவு திறக்கப்படுவதை அவதானித்த அக் குழு, விரைந்துசென்று அங்கே தற்செயலாக வெளியேவந்த பெண்ணிடம் சில கேள்விகளைக் கேட்டுள்ளார்கள். அவர் பதில் கூற ஆரம்பிக்க முன்னரே, இராணுவப் புலனாய்வுப் பிரிவினர், தமது மோபைல் போனில் உள்ள வீடியோக் கமராவை ஆன் செய்துள்ளார்கள். இதற்கு மேலும் ஏதாவது கூறினால், அன்று இரவு என்ன நடக்கும் என்று, தெரியாதா அப்பெண்ணுக்கு ? எனவே அவர் சில வார்த்தைகள் பேசிவிட்டுச் சென்றுள்ளார். அவ்வளவு தான். இதனை இராணுவத்தினர் வீடியோவாக எடுத்து சிங்கள இணையங்களுக்கு கொடுக்க, வழமைபோல சில தமிழ் ஊடகங்கள் அதனை அதிரடிச் செய்தியாக மொழிபெயர்த்து, காணொளியோடு வெளியிட்டுவிட்டனர். 

இராணுவம் நேரடியாக அச்சுறுத்தியது என்ற செய்தியோடு வெளியாகிய காணொளியில், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை ! திரும்பத் திரும்ப பிளே பண்ணிப் பார்த்த மக்கள், இது என்ன வீடியோ என்று சலித்துக்கொண்டார்கள். செய்திக்கும் வீடியோவுக்கும் சம்பந்தமே இல்லைசாமி என்று நினைத்தார்கள்.... ஆனால் இப்போது உண்மை விளங்குமே ....




No comments:

Post a Comment