Thursday, February 28, 2013

நேற்று விநோதினி இன்று வித்தியா !


சென்னை:"ஆசிட்' வீச்சுக்கு ஆளாகி, 27 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் வித்யா, சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது விருப்பப்படி, அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன. உடலை வாங்க பெற்றோர் மறுத்ததால், மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.சென்னையை அடுத்த ஆதம்பாக்கம், பரமேஸ்வரன் நகரை சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது மகள் வித்யா, 21. பிளஸ் 2 படித்துவிட்டு மேல்படிப்பை தொடர முடியாமல், ஆதம்பாக்கம் திருவள்ளுவர் நகரில், பிரவுசிங் சென்டரில் வேலை செய்து வந்தார்.கடந்த ஜன.,30ம் தேதியன்று மதியம், ஒரு வாலிபர், "பிரவுசிங் சென்டர்' உள்ளே நுழைந்து, வித்யாவின் உடலில், ஆசிட் வீசினார். அவரது அலறல் சத்தம் கேட்டு, பொதுமக்கள் ஓடி வந்தனர்.

தப்பி ஓட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஆதம்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கிண்டி நரசிங்கபுரத்தை சேர்ந்த, விஜயபாஸ்கர், 32, தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர் என, தெரிந்தது.

"ஆசிட்' வீசியது ஏன் ?

விஜயபாஸ்கர், வித்யாவை ஓராண்டுக்கும் மேலாக காதலித்து வந்தார். தங்கை திருமணம் முடிந்த பின்புதான், திருமணம் செய்து வைக்க முடியும் என, விஜய பாஸ்கரின் பெற்றோர் கூறிவிட்டனர்."என் தங்கைக்கு பல ஆண்டுகளாக மாப்பிளை பார்க்கிறோம். மாப்பிள்ளை அமையவே இல்லை. இப்போதைக்கு அவளுக்கு திருமணம் நடக்காது. நாம் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ளலாம்' என, விஜய பாஸ்கர், வித்யாவை நச்சரித்து வந்தார்.வித்யா, இதற்கு சம்மதிக்கவில்லை. விஜய பாஸ்கருக்கு, குடிப்பழக்கம் உள்ள விஷயமும் வித்யாவுக்கு தெரிந்ததால், அவரை மணப்பது குறித்து வித்யா யோசித்ததாக தெரிகிறது.
இதனால், மனமுடைந்த விஜய பாஸ்கர், தனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்று எண்ணி, ஆசிட் வீசினார்.

கண்தானம்: ஆசிட் வீச்சில் படுகாயம் அடைந்த வித்யா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 27 நாட்கள் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று, சிகிச்சை பலனின்றி இறந்தார்.இறப்புக்கு ஒரு வாரத்திற்கு முன், தாய் மற்றும் அண்ணனிடம், "நான் ஒருவேளை இறந்து விட்டால், என் கண்களை தானம் செய்து விடுங்கள். என், கண்கள், மற்றவர்களுக்கு பார்வை தரட்டும்' என, கூறியிருந்தார். இதையடுத்து, அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன.தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் கண்களை பெற்றனர். அவை, இரண்டு பேருக்கு பொருத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், அவரது உடலை வாங்க அவரது தாய் சரஸ்வதி, அண்ணன் விஜயும் மறுத்தனர். ஆசிட் வீச்சில் இறந்த இளம்பெண்ணுக்கு, அரசு தரப்பில் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்' என, வித்யாவின் உறவினர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.போலீஸ் அதிகாரிகளும், தொடர்ந்து, ஆர்.டி.ஓ., எட்டியப்பனும் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசிடம் தெரிவித்து, உரிய தீர்வு காண்பதாக உறுதியளித்ததால், போராட்டத்தை கைவிட்டு, வித்யாவின் உடலை பெற்று சென்றனர்.வித்யா மீது ஆசிட் வீசிய விஜய பாஸ்கர் மீது, போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.வித்யாவின் உடல், ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. காஞ்சிபுரம் கலெக்டர் சித்திரசேனன் நேற்று மாலை, வித்யாவின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி, தாய் சரஸ்வதி, அண்ணன் விஜய் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

"வித்யாவின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் பெற்று தர வேண்டும்' என, உறவினர்களால் கோரிக்கை வைக்கப்பட்டது. அரசிடம் தெரிவித்து, விரைவில் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்வதாக கலெக்டர் உறுதியளித்தார். பொதுமக்கள் அஞ்சலிக்கு பின், வித்யாவின் உடல், ஆதம்பாக்கம் நியூ காலனியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment