Friday, January 25, 2013

முறிவு ஏற்பட்ட கொழும்பு சட்டபீட மாணவியின் கையை வெட்டி அகற்றிய வைத்தியர்கள்: பெற்றோர் கவலை !!


கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட இறுதி ஆண்டில் கல்வி பயிலும்  மாணவி தனது வீட்டு படிக்கட்டில் தடுக்கி விழுந்து கை முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சிகிச்சைக்காக சென்ற மாணவியின் கை அகற்றப்பட்டுள்ளதாக அவரது தந்தையும் சகோதரனும் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து அம்மாணவியின் சகோதரன் மேலும் தெரிவிக்கையில்,
எங்கள் வீட்டுப் படிக்கட்டில் தடுக்கி விழுந்து கை முறிவு ஏற்பட்ட தங்கையை கடந்த 17ம் திகதி மாத்தறை வைத்தியசாலையில் அனுமதித்தோம். 17ம் திகதியும் 18ம் திகதி பகல் வரையும் வைத்தியசாலையில் தங்கைக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்கப்படவில்லை.
18ம் திகதி மாலை தங்கையின் கைக்கு பெண்டேஜ் போடப்பட்டு 19ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கையின் கை வெட்டி அகற்றப்பட்டவரை தமக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என சகோதரர் கவலை வெளியிட்டுள்ளார்.
கையில் முறிவு ஏற்பட்ட இடம் பழுதாகிவிட்டதாக கூறியே கை வெட்டி அகற்றப்பட்டுள்ளதாகவும் அதனால் தனது தங்கை தற்போது எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மணிக்கட்டு - முழங்கைக்கு இடைப்பட்ட பகுதியில் முறிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் முழங்கைக்கு மேல் கை வெட்டி அகற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடாத்தப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவியின் நண்பி வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment