Tuesday, December 18, 2012

கொழும்பு புறநகர் பகுதியில் கைதுசெய்யப்பட்ட பிச்சைக்காரர் ஒரு இலட்சாதிபதி: பொலிஸார் அதிர்ச்சி !!!


கொழும்பின் புறநகர்ப்பகுதியான ராகம பிரதேசத்தில் பிச்சைக்காரர் ஒருவரைக் கைது செய்த பொலிஸார், அவர் ஒரு இலட்சாதிபதி என்ற விபரத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் பாதுகாப்பு அதிகாரிகள் ராகம புகையிரத நிலையத்தில் புகையிரத பெட்டிகளில் ஏறி பிச்சை எடுத்து திரிந்த 18 பிச்சைக்காரர்களைக் கைது செய்துள்ளனர்.
இவர்கள் புகையிரதத்தில் பயணம் செய்யும் பயணிகளைத் தொந்தரவு செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பிச்சைக்காரர்களில் ஒருவர் இலட்சாதிபதி என விசாரணைகளின் மூலம் தெரியவந்ததையடுத்து பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளதாக அப்பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. குருநாகல் நாரம்மல பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு இலட்சாதிபதி என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பிச்சைக்காரர் ஒரு வான் மற்றும் இரண்டு முச்சக்கரவண்டிகளுக்கு உரிமையாளர் எனவும் அவரது வங்கிக் கணக்கில் 20 இலட்சம் ரூபா வைப்பில் இடப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பிச்சைக்காரர் ஒரு மாற்றுத்திறனாளி எனவும் கைது செய்யப்பட்டவேளை அவரிடம் 4ஆயிரம் ரூபாய் பணம் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அப்பணம் ராகம புகையிரத நிலையத்தில் இரண்டு மணித்தியாலயத்திற்குள் பிச்சை எடுத்த பணம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிச்சை எடுப்பதற்கு தினமும் தனது வானில் வருவதாகவும் அச்சமயத்தில் அழுக்குத் துணிகளை மாற்றிக் கொண்டு தொழிலை ஆரம்பிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தனது முச்சக்கர வண்டிகள் இரண்டையும் இவர் வெளியில் நாளாந்த வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்து வந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, 2000 ரூபாவை அபராதமாக செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment