Friday, July 13, 2012

என்ன வேண்டும் தருகிறேன்: லஞ்சம் வாங்காதீர்கள்: எஸ்.பி., உருக்கம்!!


என்ன வேண்டும் தருகிறேன்: லஞ்சம் வாங்காதீர்கள்: எஸ்.பி., உருக்கம்


லஞ்சம் மட்டும் வாங்காதீர்கள். அது மிகவும் அவமானமான ஒரு செயல்,'' என, திருப்பூர் எஸ்.பி., ஆஸ்ரா கர்க் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

விதிகளுக்கு புறம்பாக கூடுதல் மணல் ஏற்றி வரும் லாரிகளுக்கு, போலீசார் அபராதம் விதிக்கின்றனர். போலீசாரின் சட்டப்பூர்வமான அபராத நடவடிக்கைக்கு எதிராக, மணல் உரிமையாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், துணிச்சலாக "மாமூல்' பெற்றுக்கொண்டு, மணல் லாரியை அனுமதித்த, மடத்துக்குளம் எஸ்.ஐ., மணிமாறனை "சஸ்பெண்ட்' செய்து, திருப்பூர் எஸ்.பி., ஆஸ்ரா கர்க், நேற்று உத்தரவிட்டார்.கடந்த 9ம் தேதி, பகல் 12.30 மணியளவில், தாராபுரம் - உடுமலை ரோட்டில், காரத்தொழுவு அருகே, மாரிமுத்து என்பவரது லாரி, அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றிச் சென்றுள்ளது. மடத்துக்குளம் எஸ்.ஐ., மணிமாறன், காரத்தொழுவில் மணல் லாரியை பிடித்துள்ளார். ஒன்பது ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என, மிரட்டியுள்ளார்.

லாரி உரிமையாளர் பேரம் பேசி, நான்கு ஆயிரம் ரூபாயை, எஸ்.ஐ.,க்கு லஞ்சம் கொடுத்துவிட்டு, லாரியை எடுத்துச் சென்றுள்ளார். இத்தகவல், எஸ்.பி.,க்கு கிடைத்தது. ரகசியமாக விசாரிக்க, தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார்.அதன்படி, சம்மந்தப்பட்ட லாரி உரிமையாளர், டிரைவர் ஆகியோரை போலீசார் தேடி, கண்டுபிடித்தனர். அவர்களிடம் எஸ்.பி., நேரடியாக விசாரணை நடத்தினார். இதில், எஸ்.ஐ., லஞ்சம் பெற்றுக்கொண்டு, லாரியை அனுமதித்தது உறுதியானது. அதையடுத்து, எஸ்.ஐ., மணிமாறன், நேற்று "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

"லஞ்சம் வாங்காதீர்!':எஸ்.ஐ., மணிமாறன் "சஸ்பெண்ட்' செய்யப்பட்டது தொடர்பாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாரும் தெரிந்து கொள்ளும் வகையில், எஸ்.பி., ஆஸ்ரா கர்க், மைக்கில் பேசினார்.

அப்போது, ""போலீசார், தங்கள் பொறுப்பை உணர்ந்து, கடமையை சரியாக செய்தால் போதும். உங்களுக்கு, பணப்பயன் ஏதும் வரவில்லையா; பணியில் சிரமம் உள்ளதா; விடுப்பு வேண்டுமா அல்லது சொந்த ஊரில் குடும்பத்துடன் வசிக்க, "டிரான்ஸ்பர்' வேண்டுமா, தருகிறேன். ஆனால், லஞ்சம் மட்டும் வாங்காதீர்கள். அது மிகவும் அவமானமான ஒரு செயல்,'' என, உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

No comments:

Post a Comment