Tuesday, July 17, 2012

அகதிகள் நாடுகடத்தலுக்கு ஜேர்மன் நீதிமன்றம் தடை !



இத்தாலியிலிருந்து அகதிகளாக ஜேர்மன் வந்த பாலஸ்தீனக் குடும்பத்தினரை திருப்பி அனுப்ப கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இத்தாலியிலிருந்து வரும் அகதிகள் அங்கு அடிப்படைத் தேவைகளான உணவு, குடிநீர், மின்சாரம் மற்றும் தங்குமிடமின்றிப் பிறநாடுகளைத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களைத் திரும்பவும் அதே நாட்டுக்கு அனுப்புவது மனிதாபிமானமற்ற செயலாகும். அவர்களை அவமதிக்கும் நடவடிக்கையுமாகும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இத்தீர்ப்பு யூலை இரண்டாம் நாளன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி இந்த குடும்பத்தினர் ஜேர்மனியில் தொடர்ந்து வசிக்கலாம்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கான டப்ளின் சட்டம், முறையான அனுமதி பெற்று வராத அகதிகளை திரும்பவும் அவர்கள் எந்த ஐரோப்பிய நாட்டிலிருந்து வந்தார்களோ அங்கேயே திருப்பி அனுப்பி விடுமாறு கூறுகிறது.
எனவே இத்தாலியில் இருந்து வந்த இந்தப் பாலஸ்தீனியக் குடும்பத்தை திரும்பவும் இத்தாலிக்கே அனுப்ப அரசு முனைந்தது. இந்தச் சட்டம் புகலிடம் தேடுவேரின் இன்றைய நிலையை உணர்த்துவதாக இல்லை என்று சிலர் விமர்சிக்கின்றனர்.
கிரீஸ் நாட்டுக்கு ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தானம் மற்றும் சோமாலியாவிலிருந்து அதிக எண்ணிக்கையில் அகதிகள் வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் கிரீஸ் நாடு புகலிடம் அளிக்க இயலாத நிலையிலேயே, ஜேர்மன் போன்ற நாடுகளை நோக்கி நகர்கின்றனர் என்று அகதிநல அமைப்பைச் சேர்ந்த கார்ல் கோப் தெரிவித்தார்.
மேலும் ஜேர்மனி போன்ற ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகள் இந்தச் சட்டத்தை மாற்ற முன்வரவில்லை. இதனால் நிலைமை இப்போது மோசமாகிக் கொண்டே வருகிறது என்றார்.



No comments:

Post a Comment