Wednesday, June 20, 2012

யாழ். இளம் பெண்களை விபச்சார வலையில் வீழ்த்தும் பெண் தரகர்கள்



கடந்த மாதத்தில் ஒரு செவ்வாய்க்கிழமை காலை 8 மணியிருக்கும். யாழ். மத்திய பேரூந்து நிலையம் பரபரப்பாக இருந்தது. குடாநாட்டின் நாற்றிசைகளிலிருந்தும் வந்த பயணிகள் பெருமளவிலானோர் அங்கு திரண்டிருந்தனர். காலை வேளை என்பதால் அது வழமையை விட பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. அரச ஊழியர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமை புரிபவர் என தத்தமது கடமைகளின் நிமித்தம் ஏனைய இடங்களுக்குக் குறிப்பாக தீவகப் பிரதேசத்திற்கு புறப்படும் பேரூந்துகளுக்காக தவங்கிடந்தனர்.

அக்கண நேரத்தில் எங்கிருந்தோ திடீரென வந்த இரு பெண்களின் கதறல் ஓலங்கள் எங்கள் செவிகளைத் துளைத்தன. அங்கு கூடியிருந்தவர்களின் முகங்கள் எல்லாம் சத்தம் வந்த திசை நோக்கித் திரும்பின. அங்கே இரண்டு பெண்கள் கட்டிப்புரண்டு சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களது சண்டையை வேடிக்கை பார்க்கவென அவ்விடத்தை சுற்றி ஈக்கள் மொய்த்திருப்பதைப் போல சனக்கூட்டம் திரண்டது.

ஒரு பெண்ணிற்கு 40 வயதிருக்கும் (சாறி கட்டியிருந்தார்). அடுத்த பெண்ணிற்கும் 20 வயதிருக்கும். பரஸ்பரம் இருவரும் ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் கோபத்தை அவ்விடத்தில் வெளிப்படுத்தினர். அவர்கள் சண்டையிட்ட வேகம், வார்த்தைகளை வெளிப்படுத்திய விதம் என்பவற்றைப் பார்க்கையில் இருவருக்கும் ஏதோ தனிப்பட்ட ரீதியில் பிரச்சினையிருப்பதாகவே தெரிந்தது. இருவரது மோதல்கள் தணிந்தபாடில்லை.

இருவர் வாயினின்றும் வெளிவந்த வார்த்தைகள் பெண்களையே இழிவுபடுத்துபனவாக இருந்தன. எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில் ஒருவர் தடியுடன் வந்தார். கூட்டத்தை விலக்கியவாறு சண்டையிட்ட இருவருக்கும் அந்த மாதிரி கவனித்து கலைத்துவிட்டார். அவர் பேரூந்து நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர் என பின்னர் தெரியவந்தது.

அப்பெண்கள் தமக்கிடையே இவ்வாறு பலர் பார்த்திருக்க வெட்கமின்றி அம்பலத்தில் அரங்கேற்றிய தெரு நாடகத்திற்கு என்ன முகாந்திரம் என அறிய அங்கு கூடியிருந்தவர்கள் பலரும் முயன்றனர். பலரிடமும் விசாரித்தனர். அங்கு நின்ற பஸ் நடத்துநர் ஒருவர் இவர்கள் இருவருக்கும் உள்ள சமாச்சாரங்கள் பற்றி எங்களுக்கு விரிவுரை நடத்தினார்.

வயதில் மூத்த பெண்தான் ‘அந்த’ தொழிலுக்குத் தரகர் வேலை செய்பவள். (தற்போதைய வழக்காறில் ‘மாமா’ வேலை என்று கூறுவார்கள்.) பல பெண்களை தன் வலையில் வளைத்துப் போட்டு அந்தத் தொழிலுக்கு அனுப்புவாள். பஸ்ராண்டுக்கு வாற பொம்புளங்களோட கதைத்து ஆக்களுக்கு செற் பண்ணி அனுப்புறது தான் இவளுடைய வேலை. இப்படிப் பல பெண்களை பல ஆண்களுக்கு அனுப்பி வைச்சிருக்கிறாள்.

அதில வாற வருமானத்தில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு மிகுதியை அப்பெண்களிடம் கொடுத்து விடுவாள். இப்படி ஏதோ பணக் கொடுக்கல் வாங்களில் பிரச்சினை போல … அதுதான். 20 வயதான பெண் தனக்குக் கிடைக்கவேண்டிய பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டபோதுதான் இருவருக்குமிடையில் சண்டை பூதாகரமாக வெடித்தது என பஸ் நடத்துனர் சண்டை இடம்பெற்ற பின்னணியைக் கூறினார்.

பஸ் நடத்துநர்கள் சாரதிகளுக்குத்தான் இப்படியான பிரச்சினைகள் பற்றி நன்கு தெரியவரும். ஒரு பெண்ணைப் பார்த்த உடனேயே இந்த பெண்ணை இலகுவில் ஏமாற்றி விடலாம் என கண்டு பிடித்து விடும் திறமை படைத்தவர்கள் இவர்கள். அந்தளவிற்கு இந்த விடயத்தில் நல்ல அனுபவமும் தேர்ச்சியும் பெற்று இருக்கிறார்கள்.

இந்த செயற்பாடுகள் பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். இதனாலேயே அங்கு நின்றவர்களுக்கு இப்படி விளக்கவுரை நிகழ்த்த முடிந்தது. இவரது விளக்கவுரையை கேட்டுக் கொண்டிருந்த ருசியில் சிலர் பேரூந்தை தவறவிட்டது வேறுகதை.

யாழ். குடாநாட்டில் கலாசார சீர்கேடுகள் இடம்பெறுகின்றமை பற்றி பல்வேறு தரப்பினர்களிடமிருந்தும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருகின்றன. குறிப்பாகச் சொல்லப்போனால் யாழ். மத்திய பேரூந்து நிலையத்தைச் சுற்றிய பகுதிகளில் நடமாடும் விபச்சார தொழில் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

எல்லா இடங்களிலிருந்தும் வருகின்ற மக்கள் யாழ். மத்திய பேரூந்து நிலையத்தில் ஒன்றாகச் சங்கமிக்கின்றனர். மக்களோடு மக்களாக பல இளம் பெண்கள் இத்தொழிலை மேற்கொள்வதற்காக வந்து கூடுகின்றனர்.

தனியார் கல்வி நிலையங்களில் கல்வி நடவடிக்கையை மேற்கொள்வதற்காக ஏராளமானோர் பல பிரதேசங்களிலிருந்தும் படையெடுத்து வருகின்றனர். இவ்வாறு வருகின்ற சில யுவதிகள் கூடாத கூட்டத்துடனும் சேரக்கூடாத சேர்க்கையுடனும் சேர்வதனால் இப்படியான விபரீதங்களுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது.

அது மாத்திரமன்றி சில வயதான பெண்கள் இத் தொழிலுக்கு தரகர்களாகவும் செயற்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது. இத் தரகர்களின் வலையில் பல அப்பாவிப் பெண்களும் விழுகின்றனர். குறிப்பாக கல்வி நடவடிக்கைக்காக வருகின்ற பதின்ம வயதுப் பெண்களிடம் தேனொழுகப் பேசி தமது வலையில் சிக்கவைத்து விடுகின்றனர். பின்னர் இவர்களை விலைபேசி பாலியல் தேவை நாடி வரும் ஆண்களுக்கு விற்றுப் பிழைப்பு நடத்துகின்றனர்.

இவ்விடத்தில் நண்பன் ஒருவன் கூறிய விடயத்தையும் இங்கு பதிவு செய்வது பொருத்தமுடையதாக அமையும். இந்த தொழிலுக்கு தரகர் வேலை பார்க்கும் பெண்ணொருவர் பாலியல் தேவை நாடி வரும் ஆண்களிடம் தனது வங்கிக் கணக்கை கொடுத்து பெண்களின் தரத்திற்கேற்ப பணத்தை நிர்ணயித்து வங்கிக் கணக்கில் பணத்தை வைப்பிலிட வைத்துத் தனது தொழிலை அரங்கேற்றி வருவது நடைபெறுவதாக அவன் கூறினான்.

இவ்வாறு யாழ். குடாநாட்டின் சந்து பொந்து எங்கும் தமிழர் பண்பாட்டு மரபை வேரறுக்கவல்ல பாலியல் துர்நடத்தைகள் அரங்கேறி வருகின்றமை பற்றிப்பலரும் தமது கவலையையும் மன ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். பொது இடங்களாகட்டும் கல்வி கூடங்களிலாகட்டும் வேலை ஸ்தலங்களிளாகட்டும் எங்கும் பாலியல் சீர்கேடுகள் கொடி கட்டிப் பறக்கின்றமை கண்கூடு.

ஆனால் சிலர் யாழ்ப்பாணத்தில் கலாசார சீரழிவுகள் எவையும் இடம்பெறவில்லை எனவும் யாழ்ப்பாண கலாசாரம் முன்னர் போலவே இப்போதும் இருப்பதாகவும் நாக்கு கூசாமற் சொல்லுகின்றனர்.

என்ன செய்வது தமிழினத்தை கருவறுக்கவென சில கோடரிக்காம்புகள் இருக்கையில் தமிழினத்தின் தலைவிதியை எவராலும் மாற்றமுடியாது என்பதே உண்மை. இவர்களுக்கு ஒன்றை மட்டும் கூறிக் கொள்ளலாம்.

பலரை பலமுறை ஏமாற்றலாம். சிலரை சிலமுறை ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லாக் காலத்திலும் ஏமாற்ற முடியாது. காலம் விரைவில் இத்தகைய புல்லுருவிகளை இனங்கண்டு நிச்சயம் தண்டிக்கும்.

எஸ். நதிபரன்

No comments:

Post a Comment