Thursday, June 14, 2012

இலங்கைத் தமிழ் சிறுவன் மருத்துவ கவனிப்பின்றி அவுஸ்திரேலியாவில் பரிதாப மரணம் !




கடந்த 11ம் நாள் திங்கட்கிழமை அவுஸ்திரேலியாவில் மருத்துவர்களின் அசமந்தப் போக்கினால் முறையான மருத்துவக் கவனிப்பின்றி இலங்கை தமிழ் சிறுவன்  ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இரு பிள்ளைகளுக்குத் தாயான சந்திரகலா ஆறு மாதங்களுக்கு முன்பு அவுஸ்திரேலியாவுக்குச் சென்று தஞ்சம் கோரினார். அவர் கணவனை இழந்த பெண். இரு பிள்ளைகளில் மூத்தவளான மகள் வயது 15 தாயாரோடு அவுஸ்திரேலியாவில் இருக்கிறார்.

மகன் நிலவன் வயது 2. வருடம் 3மாதம். 2012 யூன் 11ம் நாள் அவுஸ்திரேலியாவில் மரணமடைந்தார் மருத்துவர்களின் அசமந்தப் போக்கினால் முறையான மருத்துவக் கவனிப்பின்றி இந்தச் சிறுவனின் மரணம் ஏற்பட்டிருக்கிறது.

ஏறத்தாழ இரு வாரங்களுக்கு முன்பு தாயும் பிள்ளைகளும் அடிலெயிட் அகதிகள் தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டு சமூகத் தடுப்பு வீசா அடிப்படையில் சிட்னியில் குடியிருத்தப்பட்டனர்.

சிறுவனுக்கு கடந்த சில காலமாக சிறு நீரக நோயப் பீடிப்பு இருந்ததனால் முகாம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். நோயின் தன்மையைச் சரிவர அடையாளம் காணமால் ஏனோ தானோ என்று மாத்திரைகளையும் திரவ மருந்துகளையும் வழங்கிவிட்டு பயப்பிட ஒன்றமில்லை என்று கூறித் தட்டிக் கழித்தனர்.

சமுகத் தடுப்பு வீசா சிட்னி முகாமுக்கு வந்த பிறகு சிறுவனுக்கு நோய் கடுமையாகியது. பிரதான மருத்துவ மனைக்குச் சிறுவனைக் கொண்டு செல்வதற்கு அனுமதி கோரியபோது அது தேவையில்லை என்று மறுக்கப்பட்டது.

சிறுவன் நோயைத் தாங்க முடியாமல் அவஸ்தைப் பட்டதைத் தாய் மருத்துவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். பிரதான மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல அனுமதி வழங்கியவர்கள் நோயாளர் வண்டியை (Ambulance) வழங்காமல் டாக்சியில் கொண்டு செல்லும் படி சொன்னார்கள்.

சிறுவனை வாடகை வண்டியில் (Taxi) பிரதான மருத்துவ மனைக்குத் தாய் எடுத்துச் சென்ற பிறகு சிறுவனுக்கு மூன்று தடவை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அது பலனளிக்காமல் சிறுவன் உயிரிழந்தான்.

மரணத்திற்கான காரணம் மூளை, தண்டுவடம் ஆகியவற்றை பாதிக்கும் கொடிய மெனின்ஜைற்றிஸ் (Meningitis) என்றும் சிறுநீரகச் செயலிழப்பு (Kidney Failure) என்றும் சொல்லப்படுகிறது.

உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் இந்த மரணம் ஏற்பட வாய்ப்பில்லை. அகதிச் சிறுவன் தானே என்று மருத்துவர்கள் கவலையீனமாக இருந்து விட்டனர். தனது ஒரே மகனை இழந்த தாய் சோகத்தில் மூழ்கி உள்ளார். தனக்கு நடந்த துயரம் பிறிதொரு பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது என்று சொல்கிறார்.

சிறுவனின் நல்லடக்கம் நாளை வியாழன் 14ம் நாள் அவுஸ்திரேலிய நேரம் 01 மணிக்கு நடக்கவிருக்கிறது.

அகதிகளுக்கு வழங்கப்படும் மருத்துவக் கவனிப்பில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் காட்டும் அலட்சிய போக்கில் மாற்றங்கள் ஏற்படுமா..?

இந்த மரணத்தை முன்னுதாரணமாக்கும் போது அவுஸ்திரேலிய மருத்துவ சேவையில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது.

http://news.lankasri.com/show-RUmqyGSYOWer3.html

No comments:

Post a Comment