Saturday, May 26, 2012

சமூகச் சீரழிவுச் சகதிக்குள் சிக்கித் தவிக்கும் தமிழர் தாயகப் பிரதேசம்!!


[ வெள்ளிக்கிழமை, 25 மே 2012, 06:35.34 AM GMT ]
இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளில் வாழ்ந்து வரும் எமது மக்களுக்கே உரித்தான பல பண்பாட்டுக் கோலங்கள் நமது மண்ணை அலங்கரித்து நின்றன. தீய பழக்கங்களை புறந்தள்ளி ஒழுக்கம் நிறைந்தவர்களாக வாழ்வதில் எல்லா வயதினரும் மிகுந்த கவனமாக இருந்து வந்துள்ளனர்.
தமிழர்களின் தாயகப் பிரதேசம்  என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள வடக்கு கிழக்குப் பகுதிகளில், குறிப்பாக யாழ் குடாநாட்டில் உள்ள அனைத்து பட்டணங்கள் மற்றும் கிராமங்களில் வாழ்ந்த மக்கள் தம்மை அரசியல் ரீதியாக வழி நடத்திய மிதவாதத் தமிழ்த் தலைவர்களின் தலைமைத்துவத்திலும் சரி, அதன் பின்னர் தீவிரவாதத் தலைவர்களாக கைகளில் ஆயுதங்களை ஏந்தியபடி நின்ற விடுதலைப் புலிகளின் காலத்திலும சரி, தங்கள் பண்பாடு, கலாச்சாரம், நேர்த்தியான வாழ்வியல் முறைகள் ஆகியவற்றை மிகவும் கண்டிப்பாக கடைப்பிடித்து வந்துள்ளார்கள்.
நமது தாயகப் பிரதேசங்களில் விடுதலைப்புலிகளின் கைகள் ஓங்கியிருந்த காலத்தில் கூட அவர்களின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள் மட்டுமன்றி இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்த நமது மக்கள் கூட ஏதோ ஒருவகையான மரியாதை கலந்த பயத்தோடு தங்கள் வாழ்க்கையை மேற்கொண்டார்கள்.
அவ்வப்போது இராணுவக் கொடியவர்களின் அச்சுறுத்தல்களும் அடாவடித்தனங்களும் மிகுந்து காணப்பட்டாலும், என்றோ ஒரு நாள் எமது மண் விடுதலை பெறும் என்ற நம்பிக்கையோடும் பொறுமையோடும் எதிர்காலத்தை நோக்கிய பார்வையோடு பணிவோடு நடந்துகொண்டார்கள்.
ஆனால் துரதிஸ்டவசமாக எமது விடுதலைக்காக போராடிய விடுதலைப்புலிகள் என்ற பலம் எம்மை விட்டு சிறிது சிறிதாக நீ;ங்கிச் சென்றாலும், நம்பிக்கைகளை மனங்களில் தாங்கிய வண்ணம் நமது தமிழ் மக்கள் தமது வாழ்வைத் தொடர்ந்தனர்.
ஆனால் இலங்கை அரசாங்கமும் அதனை பாதுகாக்கும் படைச் சிப்பாய்களும் விடுதலைப்புலிகள் தொடர்பான பயம் நீங்கியவர்களாய் நமது மண்ணை துவம்சம் செய்ய புறப்பட்டார்கள்.
நமது மக்களின் விடுதலை உணர்வுகளை விரட்டி அடிக்கும் நோக்கோடு பல சமூக சீரழிவுச் சின்னங்களை நமது மண்ணில் பொறிக்கத் தொடங்கினார்கள்.படிப்படியாக நமது  தமிழர் மண் தரங்கெட்ட பூமியாக மாறத் தொடங்கியது.
நமது இளைஞர்களை போதை வஸ்து போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமைப்படுத்தும் நோக்கத்தோடு போதை வஸ்து பரிமாற்றம் தாராளமாக அங்கு நடைபெறுகின்றது.
முன்னர் விடுதலைப்  புலிகளின் வெற்றிகரமான காலத்தில் நமது மக்களுக்கு தேவையற்றவை என்று கருதப்பட்டு மூடப்பட்ட மதுபானச் சாலைகள் தற்போது மீண்டும் திறக்கப்படுகின்றன.
இலங்கையின் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு தமிழர் பகுதிகளில் மூடுவிழா நடத்தப்பட்ட மதுபானச் சாலைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. அவற்றை திறந்து வைக்கும்படி நமது மக்கள் கேட்காத பட்சத்தில், அந்த மண்ணையும் மக்களையும் சீரழிக்கும் நோக்கோடு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
இவற்றையெல்லாம் நாம் உற்று நோக்குகின்றபோது நமது தமிழர் தாயகப் பகுதிகள், திட்டமிடப்பட்டு சமூகச் சீரழிவை நோக்கிய பாதையில் போகும் வண்ணம் அரசாங்க மட்டத்திலிருந்து திட்டங்கள் தீட்டப்படுகின்றன.
இவ்வாறான ஒரு போக்கு நீடிக்குமானால் நமது பிரதேசங்களில் சீரழிவுச் சகதிக் கிடங்குகள் எல்லா இடங்களிலும் தோண்டப்பட்டு நமது பண்பாட்டையும் சீரான வாழ்வியல் முறைகளையும் புதைக்கும் வகையில் நமது எதிர்காலம் இருக்கும் என்றே எச்சரிக்கின்றோம்.
கதிரோட்டம்: கனடா உதயன்

No comments:

Post a Comment