Sunday, May 13, 2012

ஐரோப்பாவில் கறிவேப்பிலை இறக்குமதிக்கு தடை !



ஐரோப்பிய உணவு சுகாதார கட்டுப்பாட்டு சபை கறிவேப்பிலை இறக்குமதி செய்வதை தடை செய்துள்ளது. இந்த வாரம் முதல் இந்த தடை நடைமுறைக்கு வந்துள்ளது.
சுவிஸ், பிரான்ஸ், லண்டன், ஜேர்மனி ஆகிய நாடுகளில் உள்ள இலங்கை இந்திய மரக்கறி வகைகளை விற்பனை செய்யும் கடைகளில் இனிமேல் கறிவேப்பிலையை வாங்க முடியாது என்ற அதிர்ச்சி தகவலை சுவிசர்லாந்தில் உள்ள இலங்கை இந்திய மரக்கறி இறக்குமதியாளர் ஒருவர் தெரிவித்தார்.

கறிவேப்பிலையில் கலோரிவகை அதிகம் இருப்பதாக காரணம் சொல்லப்பட்டாலும் தெளிவான விளக்கத்தை இறக்குமதியாளர்களுக்கு ஐரோப்பிய உணவு சுகாதார கட்டுப்பாட்டு சபை தெரிவிக்கவில்லை.

கறிவேப்பிலையில் கலோரிவகை அதிகம் இருப்பதால் உடல்நலத்திற்கு கேடாகலாம் ஐரோப்பிய உணவு கட்டுப்பாட்டு சபை கூறுகின்றது.

ஆனால் கீழைத்தேய மருத்துவர்களும், ஆயுள்வேத மருத்துவர்களும் மட்டுமல்ல மேலத்தேய மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் கறிவேப்பிலை பல நோய்களுக்கு நிவாரணியாக மருத்துவ மூலிகையாக விளங்குவதாக தெரிவித்துள்ளனர்.

கறிவேப்பிலை கறியில் இடப்படும் ஒரு சுவையூட்டியாகும். ஆதில் பலமருத்துவ குணங்கள் உள்ளதாக ஆயுள்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இது இலங்கை இந்திய உணவு வகைகளில் பெரும்பாலும் பயன்படுத்தப் படுகிறது. ‘கறிவேப்பிலை’ சமைக்கும் கறிகளில், குறிப்பாக தமிழரின் உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகின்றது. தமிழரின் பாரம்பரிய உணவு வகைகளான கறி, இரசம், வடை, முறுக்கு போன்ற திண்பண்டங்களிலும் தொன்றுதொட்டே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அநேகமானோர் இதனை சமைக்கும் உணவு பதார்த்தங்களில் போடப்படும் ஒரு கறிச்சுவையூட்டியாக அல்லது வாசனைப் பொருளாக மட்டுமே கருதி விடுகின்றனர். ஆனால் கறிவேப்பிலை வாசனைப் பொருளாக மட்டுமன்றி, சமைக்கும் உணவு வகைகளில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் பல மருத்துவ நலன்களையும் அடிப்படையாக கொண்டதாகும். கறிவேப்பிலை ஒரு சிறந்த நோய் எதிர்ப்புக் காரணியுமாகும் என கீழைத்தேய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கறிவேப்பிலையின் நன்மைகள்
நீண்ட நாள் தொடர்ந்து சாப்பிட நரை மாறுதல், கண்பார்வை தெளிவு. வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல். நீரிழிவு நோய் ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணி என கூறுகின்றனர்.

கறிவேப்பிலை பற்றிய ஆராய்ச்சி தகவல்கள்:
கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை ஒஸ்ரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஒஸ்ரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். கறிவேப்பிலை நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.
இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என அவர் கூறுகிறார்.

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்றும் அவர் கூறுகிறார்.

கறிவேப்பிலையை தினசரி உண்டு வந்தால் சிறுநீரில் சீனி சத்து வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

எந்த உணவானாலும், கடைசியாக அவற்றை தாளிக்கும் தருணத்தில், ஒன்றிரண்டு கறிவேப்பிலைகளை கிள்ளிப் போட்டு இறக்கி வைப்பார்கள்.

மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது.

பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும்.

கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது.

குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும்.

கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது.கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது என்றெல்லாம் கீழைத்தேய மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இத்தகைய அருமை பெருமைகளை சிறப்புக்களை கொண்ட அருமருந்தாக காணப்படும் கறிவேப்பிலையை ஐரோப்பாவில் ஏன் தடை செய்தார்கள்?

http://www.manithan.com/view-2012051217715.html

[ Saturday, 12 May 2012, 09:11.07 PM. ]

No comments:

Post a Comment