Wednesday, April 11, 2012


காந்தி எப்போது தேசத்தந்தை ஆனார் ? - காந்தியைப்பற்றிக் கூட தெரியாத பிரதமர் அலுவலகமும், உள்துறை அமைச்சகமும்...!










   


ஒரு குழந்தைக் கேட்டக் கேள்வியினால்
தேசத்திற்கே விடைகிடைத்தது...!

தகவல் அறியும் உரிமை சட்டம் நடைமுறைக்கு வந்து பல ஆண்டுகள் ஆனாலும் அதை பயன்படுத்துவதற்கே தயங்குகிற இந்த காலத்தில், உத்திரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த   ஐஸ்வர்யா என்ற பத்து வயது பள்ளி மாணவி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்ட கேள்வியினால் மத்திய அரசே ஆடிப்போயிருக்கிறது. அந்த அளவிற்கு அந்த மாணவி கேட்டக் கேள்வியினால் பிரதமர் அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சகம் உட்பட மத்திய அரசு அலுவலகங்கள் எல்லாம் பரபரப்பாகியிருக்கிறது. 
           அப்படி என்ன கேள்வியை அந்த மாணவி கேட்டாள்...?  இதுவரையில் யாரும் கேட்காத கேள்வியை அல்லவா கேட்டாள். பெரியவர்களுக்கே தோன்றாதக் கேள்வி அல்லவா அது.
           அவள் கேட்ட கேள்வி என்ன தெரியுமா...?  ''எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட்டது'' என்று கேட்டாளே ஒரு கேள்வி  அந்த சிறு பெண் ஐஸ்வர்யா. 
             அவ்வளவு தான். முதலில் பிரதமர் அலுவலகத்திற்கு இந்த கேள்வியை அவர் கேட்டிருக்கிறார். பிரதமர் அலுவலக அதிகாரிகள் எங்களை இண்டர்வியு - ல கூட இப்படி கேள்வி கேட்டதில்லை. இவ்வளவு கஷ்டமான கேள்வியை கெட்டுவிட்டதே இந்தப் பெண் என்று அவர்களெல்லாம் விழித்தார்கள்.
                     இந்த கேள்விக்கு பிரதமர் அலுவலகத்தால் தகுந்த பதில் தர முடியாததால்,   அந்த கேள்வியை சாமர்த்தியமாக உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துவிட்டது. அங்கேயும் இதே நிலைமை தான். நல்ல வேளை ''தேசத்தந்தையா.... காந்தியா... அவரு யாருன்னு'' கேட்காம போய்ட்டாங்க. 
         உள்துறை அமைச்சகமும் அல்லாடிப்போக அந்த கேள்வியைத் தூக்கி தேசிய ஆவணக் காப்பக அலுவலகத்திற்கு ( National Archives of India - NAI  ).அனுப்பிவைத்துவிட்டு நிம்மதியா ஆயிட்டாங்க.
              தேசிய ஆவணக் காப்பகமும் ஒன்றும் விதிவிலக்கல்ல. அவர்களுக்கும் அந்தக் கேள்விக்கான பதில் கிடைக்கவில்லை. மாணவியின் கேள்விக்கு பதில் கண்டு பிடிக்க இயலாததால்,  அந்த ஆவணக் காப்பகத்தின் துணை இயக்குனரும், தகவல் அதிகாரியுமான ஜெயபிரபா ரவீந்திரன் கேள்விக்கேட்ட அந்த மாணவியையே ஆவணக்காப்பகத்திற்கு வரும்படியும், காப்பகத்திலுள்ள ஆவணங்களைத் தேடி நீயாக அந்தக் கேள்விக்கான பதிலை கண்டுபிடித்துக்கொள்ளலாம் என்றும் அழைப்பு விடுத்திருக்கிறார்.
                இது என்ன கேவலம் பாருங்க. இந்த தேசத்தின் விடுதலைக்காக போராடியவர்களை இந்த அரசு மறந்திருக்கிறது என்று பார்க்கும் போது வேதனையாகத் தான் இருக்கிறது. காந்தியை தலையில் தூக்கிக்கொண்டு ஆடும் இந்த ஆட்சியாளர்களுக்கே தெரியவில்லை என்றால், தேசபக்தியும் இல்லாமல், இந்த தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களைப் பற்றியும் தெரியாமல்,  இந்த ஆட்சியாளர்கள் என்ன ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்கள். அப்படியென்றால் தேசத்தைப் பற்றிய சிந்தனைக்கூட இல்லாமல் யாருக்காக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆட்சியாளர்கள் பள்ளிப் பாடத்திட்டத்தில்  '' மகாத்மா காந்தி ''தேசத்தந்தை'' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுகிறார்''  என்று
மட்டும் எழுதிவிட்டால் போதுமா...? குழந்தைகள் கேட்கும் கேள்விக்கு ஆசிரியர்கள் மட்டுமல்ல, ஆட்சியாளர்களும் பதில் சொல்ல தெரிந்திருக்க வேண்டாமா...?
இன்றைய இளையத் தலைமுறையினருக்கு இந்த தேசத்தின் வரலாற்றைப் பற்றிச் சொல்லித்தரவேண்டிய ஆட்சியாளர்களே.. நீங்கள் ஒரு முறை தேச வரலாற்றை புரட்டிப்படியுங்கள்.  அப்போதாவது உங்களுக்கு தேசபக்தி வருகிறதா என்று பார்ப்போம். 

காந்தி எப்போது தேசத்தந்தையானார்...?

இந்திய தேசியப் படையை அமைத்து நமது தேச விடுதலைப் போராட்டத்தில் மிகப்பெரும்  பங்கு வகித்த மாவீரன் நேதாஜி 1944 - ஆம் ஆண்டு ஜூலை 6 - ஆம் தேதி அன்று சிங்கப்பூர் வானொலியில் உரையாற்றும் போது காந்தியை ''தேசத்தந்தை'' என்று குறிப்பிட்டு பேசினார். காந்தியை தேசத்தந்தை என்று முதன்முதலில் அழைத்தது மாவீரன் நேதாஜி தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேப்போல், 1947 - ஆம் ஆண்டு ஏப்ரல் 28 - ஆம் தேதியன்று நடைபெற்ற மாநாட்டில் பேசும் போது   இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சரோஜினி நாயுடு அம்மையார் அவர்களும் காந்தியை பற்றி குறிப்பிடும் போது இவ்வாறாக குறிப்பிட்டார் என்றும் வரலாறு சொல்கிறது.

இன்றைய ஆட்சியாளர்கள் வரலாற்றைப் படைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை.  குறைந்தது நம் வரலாற்றை படியுங்கள். அப்போதாவது தேசபக்தி வருகிறதா என்று பார்ப்போம்.

No comments:

Post a Comment