Monday, March 12, 2012

தமிழ்தெரியாத புலம்பெயர் தமிழ் இளைஞர்களும் - ஆங்கிலம் தெரியாத முன்னாள் விடுதலைப் போராளிகளும் !


சிறிலங்காவைப் பூர்விகமாகக் கொண்டவர்களும் தற்போது புலம்பெயர் பிரதேசமான ஐரோப்பாவில் வசிக்கின்ற தமிழ் இளைஞர்கள் குழுவொன்று,
வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு நிலையம் ஒன்றில் புனர்வாழ்வுப் பயிற்சிகளைப் பெற்று வரும் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை சந்தித்தபோது, அவர்களுடன் தமிழில் உரையாடுவதில் சிக்கலை எதிர்நோக்கியிருந்தனர்.
ஐரோப்பாவிலிருந்த தம்மை சந்திக்க வந்திருந்த தமிழ் இளைஞர்கள் தம்முடன் ஆங்கிலத்தில் உரையாடியதாகவும், தாம் அவர்களுடன் தமிழில் உரையாடியதாகவும்,
இதனால் புனர்வாழ்வு முகாமில் கடமையாற்றும் இராணுவ அதிகாரிகள் இரு தரப்புக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்ற வேண்டியிருந்ததாகவும், புனர்வாழ்வுப் பயிற்சி பெற்று வரும் முன்னாள் போராளிகள் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் ஆரம்ப நாட்களில் நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்து வேறு நாடுகளுக்கு சென்ற தமிழ்ச் சிறார்கள் அவர்களது தாய்மொழியான தமிழைப் பேச முடியாதவர்களாக இருப்பது தம்மைப் பெரிதும் கவலைகொள்ள வைத்துள்ளதாகவும், புனர்வாழ்வு முகாமிலுள்ள முன்னாள் போராளிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் எமக்கு உதவுவதற்காக இங்கு வந்திருந்த போதிலும் கூட, அவர்களால் தமிழ் மக்களின் மிக முக்கிய அடையாளமான தமிழ் மொழியில் தொடர்பாட முடியாதிருந்ததானது எமக்கு பெரும் வேதனையையும், கவலையையும் அளிக்கின்றது" என புனர்வாழ்வு முகாமில் பயிற்சி பெற்றுவரும் செந்தூரன் என்பவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு எம்மை நேரில் சந்தித்து, எம்முடன் உரையாடுவதற்காக வந்திருந்த இத் தமிழ் இளைஞர்களில் யாழ்ப்பாணத்தில் பிறந்து, தற்போது ஐரோப்பாவில் வாழும் வைத்தியர்களும் உள்ளடங்கியிருந்தனர்.
 ஆனால் அவர்கள் யாழ்ப்பாணத்தை தமது பிறப்பிடமாகக் கொண்டிருந்த போதிலும் கூட தமிழ் மொழியில் உரையாடுவதில் பெரும் சிக்கலை எதிர்நோக்கியிருந்தனர்" எனவும் செந்தூரன் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பழமைவாதக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜேம்ஸ் ஸ்ரீபன் வாற்றொன் [James Stephen Wharton]
தலைமையில் சிறிலங்காவுக்கு வருகை தந்திருந்த இந்தக் குழுவானது கிளிநொச்சியை சென்று பார்வையிட்டதுடன், வவுனியா புனர்வாழ்வு முகாங்களில் பயிற்சி பெற்றுவருபவர்களின் நிலைப்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.
இந்தக் குழுவில் அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்கியிருந்தார். இக்குழுவினர் வவுனியாவிலுள்ள பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தைச் சென்று பார்வையிட்டனர்.
 இவர்களை வவுனியா புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அதிகாரியான லெப்.கேணல் மஞ்சுள குணசிங்க வரவேற்றார்.
மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றுவதற்கான பயிற்சிகளில் ஈடுபடுத்தப்படும் முன்னாள் போராளிகளுக்கான பயிற்சி வகுப்பொன்றையும் இக்குழுவினர் பார்வையிட்டனர்.
 இப்பயிற்சி வகுப்பின் நிறைவில், இக்குழுவினர் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் இளைஞர்களுடன் உரையாட ஆர்வம் கொண்டிருந்த போதிலும், மொழி இங்கு மிகப் பெரும் பிரச்சினையாக இருந்தது.
தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் உரையாடவல்ல இராணுவ அதிகாரிகள் சிலர் இவ்விரு சாராருக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளர்களாக செயற்பட வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கீழ் செயற்பட்ட போது தமது வாழ்க்கை எவ்வாறிருந்தது என்பதையும், தமது அவாக்களை என்ன என்பதையும் முன்னாள் போராளிகள் எடுத்துக் கூறினர்.
 புனர்வாழ்வுப் பயிற்சிகளை நிறைவுசெய்த பின்னர் பொருத்தமான தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தாம் விரும்புவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்திருந்தனர்.

புனர்வாழ்வு முகாமைப் பார்வையிடுவதற்காக வந்திருந்த ஐரோப்பியக் குழுவினர், புனர்வாழ்வுப் பயிற்சி பெறுபவர்களுடன் மிகவும் சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் கலந்துரையாடியதாகவும், புனர்வாழ்வுச் செயற்பாடுகள் தொடர்பில் அவர்கள் மிகவும் திருப்தி கொண்டதாகவும், லெப்.கேணல் குணசிங்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment