Tuesday, March 20, 2012

அம்பலம்! தமிழர்களை தமிழர்கள் காட்டிக்கொடுப்பு - நோர்வேயில் சம்பவம்!!


அப்பாவித் தமிழர்களை ஏமாற்றி அவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் கடந்த ஒருசில மாதமாக நோர்வேயில் நடைபெற்று வருகின்றமை அம்பலமாகியுள்ளது.
நோர்வேயில் தங்கி இருக்கும் அந்நாட்டு குடியுரிமை அற்ற தமிழர்களை குடியுரிமை பெற்ற தமிழர்கள் நோர்வே பொலிஸாருக்கு காட்டிக்கொடுத்து அவர்களின் வாழ்க்கையில் விளையாடுவதாக பாதிக்கப்பட்ட சில தமிழ்க்குரல்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மேலும் தெரிய வருவதாவது என்னவெனில்,
நோர்வே நாட்டில் கிளீனிங் வேலை, அதாவது சுத்திகரிப்பு வேலைகள் தான் அதிகமாக செய்யலாமாம், ஏனெனில் உலகளாவிய ரீதியில் வேலையில்லாப் பிரச்சினை மேலோங்கி இருக்கும் நிலையில், இவ் வேலை தான் மிகவும் இலகுவாக கிடைக்கக்கூடியது.
குறைந்த வருமானம் எனினும், அன்றாட வாழ்க்கைச் செலவைக் கருத்திற்கொண்டு வேலை செய்யவேண்டும் என்பதற்காக குடியுரிமை அற்ற தமிழர்கள் இவ்வாறான வேலையில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறானவர்களுக்கு வேலை கொடுப்பவர்கள், அதாவது சுத்திகரிப்பு நிலையங்களை நடாத்தி வருபவர்களும் தமிழர்கள் தான், இவர்கள் குடியுரிமை அற்றவர்களிடம் அதிகமாக வேலை பெற்றுக்கொள்வதோடு அவர்களுக்குரிய ஊதியத்தை வழங்காமல் குறைந்த ஊதியத்தையே வழங்கி வந்துள்ளனர். அதாவது 175 குரோனர்களை வழங்குமிடத்தில் இவர்களுக்கு 75 குரோனர்களையே வழங்குவதோடு அவர்களிடம் இருந்து மிகையான வேலைகளையும் வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில் நோர்வேயில் குடியுரிமை அற்ற, அதாவது வீசா காலாவதியானவர்களைக் காட்டிக்கொடுத்தால், அவர்களுக்கு 30000 குரோனர்களை அரசு வழங்கும் என்ற அறிவிப்பினை தொடர்ந்து, மேற்படி சுத்திகரிப்பு நிலையங்களில் வேலை செய்யும் அப்பாவி தமிழர்களை குடியுரிமை உள்ளவர்கள் காட்டிக்கொடுத்து 30000குரோனர்களைப் பெற்று சொகுசு வாழ்க்கை நடாத்தி வருகின்றனர்.
இவ்வாறு காட்டிக்கொடுத்து அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட தமிழர்கள் தங்கியிருக்கும் வீட்டின் கதவினை தட்டி உரிய நபரை பொலிஸார் பிடித்து 24 மணி நேரத்தினுள் அவர்களை சொந்த நாட்டுக்கு மீள் அனுப்பபட்டு வருகின்றது.
ஒரு மாதத்திற்கு முன்னர், இவ்வாறு காட்டிக்கொடுத்து திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்தில், கணவனை பொலிஸார் திருப்பி நாட்டுக்கு அனுப்பப்பட்டதை காலையில் வேலைக்கு சென்று மாலையில் வீடு வந்த மனைவிக்கு தெரியாது இருந்துள்ளது. மறுநாள் குறித்த நபர் ஊரில் இருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டவேளை தான் தன் கணவன் இவ்வாறு மீளனுப்பப்பட்டமை தெரியவந்துள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் நோர்வேயில் அதிகரித்து வருவதாக பாதிக்கப்பட்ட சிலர் தமிழ்வின்னுக்கு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment