Saturday, February 25, 2012

வங்கிக் கொள்ளை என்கவுன்ட்டர் : விளக்கம் கேட்கிறது மனித உரிமை ஆணையம்!


பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் போலீசாரின் தற்காப்புக்காகவே என்கவுன்ட்டர் நடத்தப்பட்டதாக போலீஸ் கமிஷனர் திரிபாதி விளக்கம் அளித்து வரும் வேளையில், என்கவுன்ட்டர் குறித்து விளக்கம் அளிக்குமாறு தேசிய மனித உரிமை ஆணையம் காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன் கீழ்க்கட்டளையிலுள்ள ஐஒபி வங்கியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் என்கவுன்ட்டர் நடத்தி சுட்டுக் கொன்றனர்.
இதனையடுத்து, என்கவுன்ட்டரில் நடத்தப்பட்ட பின்னணி என்ன, கொள்ளையர்களின் உடலில் எத்தனை குண்டுகள் பாய்ந்தன மற்றும் எந்த காரணங்களால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று அனைத்து விவரங்களையும் உடனடியாக கூற வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், என்கவுன்ட்டர் நடந்த வீட்டில் எழும்பூர்  நீதிமன்ற நீதிபதி கீதாராணி நேற்று 3 மணி நேரம் விசாரணை நடத்தினார். அதுமட்டுமின்றி என்கவுன்ட்டர் நடந்த வீடு, ரத்தம் தோய்ந்த தரை, துப்பாக்கிகளை நீதிபதி கீதாராணி நேற்று, நேரில் பார்வையிட்டார். மேலும் என்கவுன்ட்டருக்கு தலைமை ஏற்ற அடையாறு துணை ஆணையர் சுதாகரிடம், நீதிபதி விசாரணை நடத்தினார்.
விசாரணையின் இறுதியாக, என்கவுன்ட்டரில் பலியான கொள்ளையர்களின் சடலங்களை நீதிபதி கீதாராணி இன்று நேரில் பார்வையிட்டார். இதனையடுத்து பரோடா மற்றும் ஐஒபி வங்கி மேலாளர்களை அழைத்து சடலத்தை காண்பித்து, இவர்கள் தான் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார். இறுதியில் நீதிபதி கீதாராணி, அறிக்கை ஒன்றை தயார் செய்து, தலைமை பெருநகர நீதிமன்ற நீதிபதியிடம் தாக்கல் செய்கிறார்.
என்கவுன்ட்டர் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டுள்ள நிலையில், நீதிபதி கீதாராணியின் அறிக்கை முக்கியத்துவமாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment