Monday, January 30, 2012

வேடன் கண்ட நரசிம்மம்


பண்டிகை என்றால் சுபகாரியத்தைக் குறிக்கிறது. போகிப்பண்டிகை, பொங்கல் பண்டிகை, தீபாவளிப்பண்டிகை என எல்லாமே சுபம். சுபத்தைக் கொடுக்கக்கூடிய பண்டிகைகளை நாம் விரும்பி மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். ஆனால் சுபத்தைக் கொடுக்கக்கூடிய

பண்டிகை அசுரன் ஒருவன் மூலம் நமக்குக் கிடைத்தது என்பதை எண்ணிப் பார்க்கும்போது சற்று மிகையாகத்தான் இருக்கிறது.
உதாரணமாக தீபாவளிப்பண்டிகை ! ஒரு அசுரனை பகவான் ஸ்ரீஹரி கொன்று, இருளை அழித்து, உலகிற்கு ஒளியைக் காட்டினார். அதன்பொருட்டு நாம் அதை நன்நாளாகக் கொண்டாடுகிறோம் என்பது ஒன்று. அதில் உள்ள இன்னொரு விடயம் அதை அப்படிக் கொண்டாட வேண்டும் என்பதையே பௌமன் என்கிற நரகாசுரன் இறைவனிடம் வேண்டிக் கேட்டான் என்பதும் ( பூமாதேவியே கேட்டார் என்று சொல்பவர்களும் உண்டு ) அதை அப்படியே இறைவனும் அருளினார் என்பதுமே. இது சற்று மிகையாகத் தோன்றினாலும் இதன் பொருள் யாதெனில் மிகவும் அக்கிரமங்கள் செய்தவர்களுக்கும் இறைவன் தம் அருளை வாரி வழங்கியிருக்கிறார் என்பதே ! ஆனால் அது எப்படி நீதியாகும் ?

நாம் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. நம் கஷ்டம் நம்மோடு இருக்கட்டும். உலகம் என்றும் மங்களமாக இருக்கவேண்டும். அதற்கு நம்மால் என்ன செய்ய முடியுமோ அதை உடனே செய்யவேண்டும் என்பதே பொதுவாக இறைவன் சங்கல்பமாக இருக்கும். ஆனால் வேறு ஓர் அபிப்பிராயமும் உண்டு. மிகவும் பக்தி செய்து, தவம் செய்து பகவானுடைய தரிசனத்தைப் பெறுவது போலவே, மிகவும் அக்கிரமங்கள் செய்து, துவேஷம் செய்பவர்களுக்கும், பகவான் அவனை அழிக்கும் சமயத்தில் அவனுக்குத் தரிசனத்தைத் தந்து, அவன் பாவங்களைக் கழுவி மோக்ஷத்தைத் தந்துவிடுகிறார் என்பதை இராவணன், கம்சன், நரகாசுரன் போன்றவர்களின் சரிதம் மூலமாக நாம் அறிகிறோம். அப்படியெனில் பக்தி செய்பவன் யார் என்பது முக்கியம் இல்லையா ? அவன் எதற்காக இறைவனை நினைக்கிறான் என்பது முக்கியம் இல்லையா ? தவம் செய்து சதாகாலமும் இறைவனை நினைப்பவனும் ஏதோ ஒரு காரணத்திற்காக சில காலம் இறைவனை நினைப்பவனும் ஒன்றா ? இராமாயணம், பாகவதம், சிவபுராணம் போன்றவற்றில் வரும் பல சம்பவங்கள் நமக்குத் தரும் விடை, ஆம், ஒன்றுதான் என்பதே !

மேற்கூறிய இதிகாசங்களில் இதுபோன்ற பல கதைகள் இருக்கிறது. ஆயினும், நாம் இங்கு ஸ்ரீ ஆதிசங்கராச்சாரியார் பற்றிய சரித்திரத்தில் வரும் சங்கர விஜயங்களில் உள்ள ஒரு கதையைப் பார்ப்போம். இது கதைக்குள் கதை. அதாவது ஒரு கதைக்குள் இன்னொரு கதை. ஒரு வேடனைப் பற்றியது. அந்த வேடனுக்கு பகவான் ஸ்ரீஹரி காட்சி கொடுத்தருளியது பற்றியது. ஒரு வேடன் எப்படி குருவானான் என்பதைப் பற்றியது.

ஒரு கபாலிகன், க்ரகசன் என்று பெயர். கபாலிகர்களுடைய ஆச்சாரமே ஒரு விதமாக இருக்கும். " ஈசுவரன் எப்படி எலும்பினால் மாலை போட்டுக்கொண்டிருக்கிறானோ அப்படி நாமும் எலும்பினால் மாலை போட்டுக்கொள்ளவேண்டும். அவன் எப்படி மயானச் சாம்பலை உடம்பெல்லாம் பூசிக்கொள்கிறானோ அப்படியே நாமும் பூசிக்கொள்ளவேண்டும். மண்டை ஓட்டில் தான் பிச்சை எடுக்கவேண்டும். அந்தப் பிச்சை கூட மாமிசப் பிச்சையாக இருக்கவேண்டும். அது கிடைக்காவிடில் மயானத்திற்குப் போய் அங்கு வெந்துகொண்டிருக்கும் பிணத்தின் நர மாமிசத்தை அங்கிருப்பவனிடம் யாசிக்கவேண்டும்." என்பவை அவர்களுடைய ஆச்சாரங்கள். பாசுபதர், லகுலீசர் போன்றவர்கள் அப்படிப்பட்டவர்கள் என்று கூறுவர்.

இந்த க்ரகசன் எனும் கபாலிகன் ஆச்சாரியாரை தம் குலத்தின் எதிரியாகப் பார்த்தான். அவன், எப்படியாவது ஆச்சாரியார் அவர்களைத் தீர்த்துக்கட்டினால்தான் நம் மதம் பிழைக்கும் என்று அபிப்பிராயப்பட்டான். ஆசாரியார் அவர்களோ எப்போது பார்த்தாலும் ஆறாயிரம் சீடர்களால் சூழப்பட்டவராகவே காணப்பட்டார். பெரும் அரசர்கள் கூட அடிக்கடி அவர் இருக்குமிடம் வந்து சென்றபடி இருந்தனர். " இவரை எப்படிக் கொல்வது ? " என்று கபாலிகன் யோசித்தான். ஒரு நாள் சமயம் பார்த்து ஆச்சாரியாரிடம் வந்தான்." சுவாமி, நான் வெகு நாட்களாக தாந்திரிகமான மார்க்கத்தில் உபாசனை பண்ணிக்கொண்டு வருகிறேன். பெரிய ஹோமம் ஒன்று பண்ணவேண்டும். அந்த ஹோமத்திற்கு நரபலி கொடுக்கவேண்டும். அந்தச் சிரம் ஒரு பெரிய சக்கரவர்த்தியினுடையதாகவோ அல்லது ஒரு பெரிய ஆச்சாரியாருடையதாகவோ இருக்கவேண்டும். அரசனிடம் கேட்டால் என் உயிர் பறிக்கப்படும் அதனால் தாங்கள்தான் எனக்கு உதவவேண்டும். நீங்கள் சன்னியாசி. உங்களுக்கு எந்த ஆசையும் கிடையாது " என்று வேண்டினான்.

ஆச்சாரியாருக்கு வெகு சந்தோஷம் உண்டானது. " அப்படியா ! என் உடம்பும், எலும்பும் ஒன்றுக்கும் உபயோகமில்லாமல் போகுமே என்று எண்ணினேன், ஆனால் அதற்கும்கூட உபயோகம் இருக்குமென்றால் அதைவிட எனக்கு மகிழ்ச்சி என்ன இருக்கிறது ? நாளைக்குச் சாயந்தரம் ஆற்றங்கரைக்கு வா. நான் தனியாக இருப்பேன். சமாதியில் இருக்கும்போது தலையை எடுத்துக்கொண்டு போ ", என்று சொல்லிவிட்டார். அவ்வாறே கபாலிகன் மறுநாள் ரகசியமாக ஆச்சாரியார் சமாதி நிலையில் இருக்கும் வேளையில் ஆற்றங்கரைக்குப் போனான். அங்கே யாருமே இல்லை. கபாலிகன் கத்தியை எடுத்து சுவாமியை வெட்ட எத்தனித்தான். திடீரென்று அங்கே " பத்மபாதர் " ( ஆச்சாரியாரின் பரம சீடர் ) வந்துவிட்டார். பத்மபாதருக்கு ஆச்சாரியார் கபாலிகனுக்கு அளித்த உறுதி தெரியாது. அதனால் அவர் ஆவேசம் மேலிட " ஹோ ஹோ " என்று கத்திக் கொண்டு ஒரே பாய்ச்சலில் கபாலிகன் மேலே பாய்ந்து அவன் மார்பைக் கிழித்துப் போட்டுவிட்டு சிம்மம் மாதிரி அட்டகாசம் செய்தார். சமாதி நிலையில் இருந்த ஆச்சாரியார் இந்த நரசிம்ம அட்டகாசத்தைக் கேட்டவுடன் தெய்வீக ஒலியினால் கண்ணை விழித்துப் பார்த்தார்.

கபாலிகன் இறந்துபோய்க் கிடந்தான். பத்மபாதர் கைகளில் ரத்தக் கறை. ஆச்சாரியார் விழித்ததும் சீடரின் உக்கிரம் தனிந்தது. அவர் குருவின் பாதகமலத்தில் போய் வீழ்ந்தார். " என்னப்பா இது ? " என்று குரு கேட்க, " எனக்கு ஒன்றுமே தெரியாது " என்று பதில் கூறினார் சீடர். உடனே ஆச்சாரியார் சீடனை நோக்கி, " உனக்கு ஏதாவது நரசிம்ம உபாசனை உண்டோ ? " என்று வினவினார். " சின்ன வயதில் ஒருவர் நரசிம்ம மந்திரத்தை உபதேசம் செய்தார். அது சித்தியாக வேண்டும் என்றால் புரச்சரணம் செய்யவேண்டும் என்றும் கூறினார். எனவே " அஹோபிலம் " சென்று அங்கே மலையில் அமர்ந்து ஜெபம் செய்தேன். அப்போது ஒருநாள், ஒரு வேடன் வந்து " ஏன் இங்கே உட்கார்ந்திருக்கிறாய் ? இங்கே உனக்கு உணவு கிடைக்காதே " என்றே கேட்டான். அதற்கு நான் " நரசிம்மத்தை பிரத்யக்ஷமாய்க் காணவேண்டி இங்கே தவம் செய்கிறேன் " என்று கூறினேன். மேலும் அவனிடம் தியான சுலோகத்தில் கூறப்பட்டபடி நரசிம்மத்தின் அங்க அவய ரூபத்தைப் பற்றிக் கூறினேன். அதற்கு அவன், " நீ பொய் சொல்ல மாட்டாய், நீ சொல்கிறமாதிரியான சிங்கம் இந்த மலையில் உள்ளது என்று நீ சொல்வதனால் நாளைக்குச் சூரியாஸ்தமனத்திற்குள் உன் முன்னாடி அதைச் சத்தியமாய் கொண்டுவந்து கட்டிவிடுகிறேன் " என்று சொல்லிப் போய்விட்டான்.

உடனே அந்தச் சிங்கத்தைத் தேடி மலை முழுக்க அலைய ஆரம்பித்தான். இரவு முழுவதும் தேடினான். பசி, தாகம் ஒன்றும் தெரியாமல், நரசிம்மம் நரசிம்மம் என்ற ஒரே நினைவாக, சுலோகத்தில் சொன்னபடியான ஒரு உருவத்தை மனதில் நிறுத்திக்கொண்டு அலைந்தான். மறுநாள் சூரியாஸ்தமன காலமும் வந்தது. கொடுத்த வாக்கைக் காக்க முடியாமையை நினைத்து துக்கம் கொண்டான். உடனே ஓணான் கொடியை ஒரு மரத்தில் கட்டி, " ஏ சிங்கமே ! நீ எப்படியோ என் கண்களில் அகப்படாமல் சுற்றுகிறாய். நீ இல்லை என்று நினைத்தால் அவர் நீ இருக்கின்றாய் என்று சொல்லியிருக்கின்றார். அந்தப் பிராம்மணர் பொய் சொல்லமாட்டார் என்பது அவருடைய வாக்கிலும் தோற்றத்திலும் தெரிகிறது. என் கண்களில் அது அகப்படாது என்று அவர் சொன்னது சரியாகப் போய்விட்டது. நான் செய்த சத்தியம் பொய்யாகப் போக நான் ஏன் உயிரோடு இருக்கவேண்டும் ? நீ தானே என் சத்தியத்தைப் பொய்யாகச் செய்தார் ! உனக்காக என் உயிரை விட்டுவிடுகிறேன் " என்று கூறி உயிரை தியாகம் செய்யச் சுருக்குப் போட்டுக்கொண்டான்.

" உடனே நரசிம்மமூர்த்தி ஹூங்காரம் செய்துகொண்டு சிம்ம ரூபமாக அவன் முன் வரவே, கயிறு அறுந்து போயிற்று. ' ஏ சிங்கமே, இப்போதாவது வந்தாயா ! வா, உன்னைக்கொண்டுபோய் அவரிடம் நிறுத்துகிறேன் ' என்று அந்தக் கொடியால் அதைக் கட்டி இழுத்துக்கொண்டு வந்தான். " சிம்ம கர்ஜனை கேட்டது. அவன் இழுத்து வருவது தெரிந்தது. கட்டியிருக்கும் கொடியும் தெரிந்தது. ஆனால் சிம்மம் தெரியவில்லை. ' எனக்கு பகவான் தெரியவில்லையே ! உனக்குத் தெரிகிறாரே. நீதான் அப்பா என் குரு ' என்று காலில் வீழ்ந்து பிரார்த்தித்தேன். " ஒலி வடிவில் இறைவன் எனக்கு அருள்வாக்களித்தார். ' உலகத்திற்கே பெரிய உபகாரம் செய்யும்படியான சந்தர்ப்பம் உனக்கு வரும். அப்போது உன் ரூபமாக நான் வெளிப்படுவேன் ' என்று சொன்னார். அதுதான் தெரியும். வேறு ஒன்றும் எனக்குத் தெரியவில்லையே ! " என்று பத்மபாதர் சங்கரரிடம் கூறினார். ஆச்சாரியாருக்கு எல்லாம் புரிந்தது. இறைவன் ஸ்ரீஹரி ஒரு வேடனுக்கும், பின் தம் சீடனுக்கும் அருள்புரிந்ததும் அதன் வழியாகத் தமக்கு அருள்புரிந்ததையும் உணர்ந்து கொண்டார்.

இந்த இரு கதைகளையும் அதாவது சங்கரரைப் பத்மபாதர் வழியாக் இறைவன் காத்தருளியது ஒரு கதை, பத்மபாதருக்கு ஒரு வேடன் மூலம் இறைவன் அருள்புரிந்தது இனொரு கதை, ஆக இந்த இரு கதைகளையும் நாம் இங்கு பார்த்தோம். இவை நமக்கு உணர்த்தும் பொருள் என்ன ? வேடன் பக்தியும் செய்யவில்லை அதேசமயம் துவேஷமும் செய்யவில்லை. ஆனால் சத்தியத்திற்காக உயிரையே தியாகம் பண்ணத் துணிந்தான். அப்போது பகவான் அவனுக்குத் தரிசனம் கொடுத்தார். பக்தியைக் காட்டிலும் லட்சியம் பெரியது, அதைக்காட்டிலும் பெரியது சத்தியம். சத்தியம் ஒன்றையே உயிரைவிட மேலானதான கொள்கையாகக் கொண்டு, அதையும் ஈசுவரனுக்கே அர்ப்பணம் செய்துவிட்டால் ஈசுவரனுடைய அருள் நமக்கு சடுதியில் கிடைக்கும்.

நம்முடைய சுக துக்கங்கள் எல்லாம் என்றைக்கும் இருப்பவை. இவற்றையே பெரிதாக எண்ணிக் கொண்டிருக்காமல் நம்மால் இந்த உலகிற்குச் சிறிதாவது மகிழ்ச்சி உண்டாகும் என்றால் அதையே பிரார்த்தித்துக் கொள்ளும் மனோபாவமுள்ள கொள்கைதான் மிகச் சிறந்தது. சுப நாட்களான பண்டிகைகள் கூட நமக்கு உணர்த்தும் பொருள் இதுவே தான். எனவே தான் இறைவன் உலகிற்கு துவேஷம் செய்துகொண்டிருப்பவர்களுக்கும் அவர்களின் அக்கிரமங்களை வேரறுத்துப் பின் அவர்கள் வழியாகவே நல்ல நாட்களை நமக்கு அருளியுள்ளார். " நமக்குக் கஷ்டம், நமக்குத் துக்கம் " என்பதைப் பாராட்டாமல் உலகம் முழுதும் மகிழ்ச்சியாக இருக்க இறைவனைப் பிரார்த்திப்போமாக.

நன்றி,
ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதிகளின் தீபாவளி அருளுரை ( 1980 ),
ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாத வேதஸ்பா, சென்னை - 05.
Image - temple.dinamalar.com.

No comments:

Post a Comment