Sunday, January 29, 2012

பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்த நாட்கள் - ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் - கணேசன் (ஐயர்)

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் - கணேசன் (ஐயர்)

கணேசன்(ஐயர்). ``ஐயர்`` என்ற புனைபெயரில் அறியப்பட்ட கணேசன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பிரபாகரனோடு ஆரம்பித்தவர்களில் ஒருவராம். இவர் எழுதிய ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் என்னும் புத்தகத்தில் அவர் எழுதியதைப் பற்றி  ஜூனியர் விகடன் விபரித்துள்ளது.
தலைவர் பிரபாகரனைப்பற்றி பலருக்கும் தெரியும். பல புத்தகங்கள், பதிவுகள் உண்டு. ஆனால் 'தம்பி’யாக இருந்த பிரபாகரனைப் பற்றி முழுமையாய் அறிய வந்திருந்திருக்கும் புத்தகம் இது. 'தம்பி என்று அழைக்கப்பட்ட பிரபாகரனுடன் முதன் முதலில் உருவாக்கிக்கொண்ட அமைப்பின் மத்தியக் குழுவில் நானும் ஒருவன்’ என்ற தகுதியுடன் இதனை எழுதி இருக்கிறார் கணேசன். அவரை 'ஐயர்’ என்றால்தான் பலருக்கும் தெரியும்!
'எங்கோ தெருக்கோடியில் உள்ளூரிலேயே அறியப்படாத மூலையில் கால்படாத கிராமங்களில் எல்லாம் இருந்த இளைஞர்கள், பெண்கள் எல்லாம் உலக வல்லரசுகளின் செய்திகளில் ஈழப் போராளிகளாகவும் உலகின் மிகப் பெரிய கொரில்லா இயக்கமாகவும் பேசப்படுகின்ற சூழல் பிரபாகரனின் விட்டுக்கொடாத உறுதியில் இருந்தே கட்டி அமைக்கப்பட்டது எனலாம். பல தடவை தனித்து யாருமற்ற அனாதை ஆகியிருக்கிறார். நண்பர் களை இழந்து தனி மரமாகத் தவித்திருக்கிறார். உண்ண உணவும் உறங்க இடமுமின்றி தெருத்தெருவாக அலைந்திருக்கிறார். இவை எல்லாம் அவரைப் போராட்டத்திலிருந்து அன்னியப்படுத்தி விடவில்லை. இறுக்கமான உறுதியோடு மறுபடி மறுபடி போராட்டத்துக்காக உழைத்திருக்கிறார் என்பதை அறிந்தவர்களில் நானும் ஒருவன்’ என்று எழுதும் கணேசன், 17 வயது முதல் பிரபாகரனைக் கவனித்த சிலரில் ஒருவர்.
முதலாவது வங்கிக் கொள்ளையை நடத்திய பிரபாகரன், செல்வச் சன்னதி கோயிலில் ஒரு அன்னதானம் கொடுக்கச் சொல்லும் அளவுக்கு பக்திமானாக இருந்துள்ளார். 'கொலை செய்து பழக்கப்பட்டால்தான் மனத்தில் உரமேறும்’ என்று சொல்லும் கத்திமானாகவும் இருந்துள்ளார்.
தமிழ்ஈழம் கோரும் போராட்டத்தில் முதல் கொலை கருணாநிதி என்ற போலீஸ் அதிகாரியின் மரணம். வேவு பார்த்துத் தமிழ் இளைஞர்கள் பற்றிய தகவலை மேலிடத்துக்குச் சொல்பவராக அந்த அதிகாரி இருந்தார். தன் கையில் கிடைத்தவர்களைக் கொடூரமாகச் சித்ரவதையும் செய்வாராம். கலாபதி என்ற இளைஞரின் காதைச் சிதைத்து சித்ரவதை செய்துள்ளார் கருணாநிதி. அவரைச் சுட்டுக் கொன்றார் பிரபாகரன். கருணாநிதி இறந்துபோனபிறகும் அவரது காதைப் பார்த்து மறுபடி சுட்டாராம் பிரபாகரன். இப்படிப்பட்ட தகவல்கள் பக்கத்துக்குப் பக்கம் இறைந்து கிடக்கின்றன.
அதற்காக இது பிரபாகரனைத் துதி பாடும் புத்தகம் அல்ல! 'இயக்கத்தில் இருந்து விலகி வேறு அமைப்பில் இணைந்தாலோ அல்லது வேறு அமைப்புகளை ஆரம்பித்தாலோ அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும்’ என்று ஆரம்ப காலத்தில் உருவாக்கப்பட்ட விதிமுறை... சக தோழர்களைப் பழிவாங்கும் வழிமுறையாக மாறிப்போன கதைகளை கணேசன் விவரிப்பதைப் படிக்கும்போது நெஞ்சு படபடக்கிறது. அரசியல் வழிமுறைகளைத் திட்டப்படுத்தாமல் ராணுவ சாகச வாதத்தில் மூழ்கிய இளைஞர்களின் சேர்க்கையாக அனைத்து போராளிக் குழுக்களுமே திரண்டன. 'எங்கிருந்து தொடங்கி இருக்கலாம் என்ற ஞானோதயம் உருவானபோது எல்லாமே முடிந்து விட்டன’ என்று வருத்தப்படுகிறார் கணேசன்.
மக்கள் திரள் அமைப்புகளில் இருந்து ஆயுதப்போராட்டம் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக மக்களிடம் அன்னியப்பட்டு அமைப்பைத் தொடங்கி, அதன் பிறகு ஆயுதத்தைப் பார்த்து மக்கள் ஆதரித்தாக வேண்டிய நிலைமை ஏற்பட்டது என்றே புரிந்துகொள்ள முடிகிறது. உயிரைப்பற்றி கவலைப்படாத உறுதிகொண்ட மனிதர்களாக அணி திரண்டவர்கள் வழிமுறைக் கோளாறு காரணமாக தோல்வியைத் தழுவிய தொடக்க கால நிகழ்வுகள் விடுதலைப் புலிகளுக்கு மட்டும் அல்ல... அனைவருக்குமான பாடம்!

நன்றி
ஜூனியர் விகடன்

No comments:

Post a Comment