Tuesday, December 13, 2011

தனது மரணச் சான்றிதழை அரச அதிபரிடம் கேட்ட புலம்பெயர்ந்து வாழும் பெண்!- யாழில் இடம்பெற்ற விசித்திர சம்பவம்-தமிழன்டா!!

புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் பெண்ணொருவர் யாழ். அரசாங்க அதிபரைச் சந்தித்து தனது மரணச்சான்றிதழை கேட்டு பெற்றுக்கொண்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த பெண்ணின் பெயரைப் பயன்படுத்தி அவர் இறந்துவிட்டதாக அவரது சகோதரியின் கணவர் பொய்யான மரணச் சான்றிதழ் உட்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்து வங்கி மூலம் கடன் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண்ணிற்கு உரித்தான சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்து பெண்ணினது ஏற்கனவே இறந்த தகப்பனை தகவலாளரின் பெயர் எனக் குறிப்பிட்டு குறித்த பெண்ணின் சகோதரியின் கணவன் சட்டத்தரணி ஒருவரையும் பயன்படுத்தி யாழ் செயலக காணிப் பதிவாளருடைய போலியான றபர் முத்திரை மற்றும் கையெழுத்துக்களையும் பெற்று வங்கிக்கடனைப் பெற்றுள்ளார்.

இச்ம்பவம் தொடர்பில் குறித்த பெண் யாழ். அரசாங்க அதிபரை சந்தித்து தனக்கு நேர்ந்த அவலத்தைத் தெரிவித்ததுடன் தனது மரணச் சான்றிதழை பெற்று மீளவும் சுவிஸ் நாட்டிற்குச் சென்றுள்ளதுடன் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரச அதிபரிடம் கேட்டுக்கொண்டார்.

இரண்டாம் இணைப்பு

இந்த விநோதக் கோரிக்கை தொடர்பில் அவர் மேலும் தெரியவருவதாவது:

கொக்குவிலைச் சேர்ந்த பெண்ணொருவர் நீண்ட காலத்துக்கு முன்னர் சுவிஸ் சென்றுள்ளார்.

தற்போது அவர் தனது 6 பிள்ளைகளுடன் இங்குள்ள தனது வீட்டுக்கு வந்தபோது, வீட்டிலிருந்த உறவினர்கள் அந்தக் காணி குறித்த பெண்மணியின் பெயரில் இல்லை என்று சொல்லி அவரை விரட்டியுள்ளனர்.

இது தொடர்பில் அந்தப் பெண்மணி தீர விசாரித்த போது, பெண்ணின் வீட்டுக்குரிய காணியை வைத்து வங்கியில் கடன் எடுக்கப்பட்ட விடயம் தெரிய வந்தது.

அத்துடன் அந்தப் பெண்மணியின் பெயரில் உள்ள காணி அவர் மரணமானதாகத் தெரிவிக்கப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டமையும் கண்டு பிடிக்கப்பட்டது.

குறித்த பெண் 1991 ஆம் ஆண்டு துப்பாக்கிச் சூட்டில் இறந்ததாகவும் அவரது உடல் கொக்குவில் மயானத்தில் தகனம் செய்யப்பட்டதாகவும் அவரது தந்தையார் தகவல் வழங்கியதாகத் தெரிவித்துப் போலி மரணச் சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்தப் போலி மரணச் சான்றிதழின் பிரகாரமே காணி உறுதி மாற்றப்பட்டு வங்கியில் கடன்பெறுவதற்காக, ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சுவிஸிலிருந்து திரும்பிய குறித்த பெண் வங்கியில் உள்ள தனது மரணச் சான்றிதழைப் பெற்றுத் தருமாறு தன்னிடம் கோரியதாக அரச அதிபர் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த மரணச் சான்றிதழை மாவட்ட செயலகம் வழங்கவில்லை எனவும் போலிக் கச்சேரி நடத்துவோரே அதைத் தயாரித்து வழங்கியுள்ளதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அரச அதிபர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment