Friday, December 16, 2011

லண்டன், ஹர்மொண்ட் சிறைச்சாலைக்கு வெளியே வேற்றின மக்கள் தமிழர்களுக்காகப் போராட்டம்! 120 பேரில் 70 பேர் நாடு கடத்தப்பட்டனர்!

[ வெள்ளிக்கிழமை, 16 டிசெம்பர் 2011, 01:34.52 AM GMT ]
லண்டனில் உள்ள ஹர்மொண்ட் சிறைச்சாலைக்கு வெளியே வேற்றின மக்கள் தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது எனப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இச் செய்தி தமிழ் ஊடகங்களில் பரவியதால் பல தமிழர்கள் அச் சிறைச்சாலை நோக்கிப் புறப்பட்டுச் சென்று தாமும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
முதலில் போராட்டத்தை ஆரம்பித்த வெள்ளையின மக்கள் தமது கைகளை பாரிய இருப்புக் கம்பிக்ளில் தாமே விலங்கிட்டுக் கொண்டனர். இதனால் பொலிசாரால் அவர்களை அங்கிருந்து இலகுவாக அகற்ற முடியவில்லை.
இதற்கும் ஒரு படி மேலே போய் சில வெள்ளையின மக்கள் கம்பிகளைக் கட்டி அதன்மேல் ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தை நிகழ்த்தினர். இதனால் அவர்களை கீழே இறக்க முடியாமல் பொலிசார் திண்டாடிப் போனார்கள்.
ஆர்ப்பாட்டக்காரர்களை கீழே இறக்க முற்பட்டு தற்செயலாக அவர்கள் அடிபட்டு காயத்துக்கு உள்ளானால் அப் பழி பொலிசார் மேல் விழும் என்பதால் பொலிசாரால் எதுவும் செய்யமுடியாத நிலை தோன்றியது.
அத்தோடு சுமார் 120 பேரை இன்று இலங்கைக்கு நாடு கடத்த ஏற்பாடாகியிருந்தது. அவர்களை ஏற்றிக்கொண்டு சிறைச்சாலையை விட்டு வெளியே வந்த பஸ்ஸை போராட்டக்காரர்கள் வழிமறித்தனர்.
இதனால் ஏற்பட்ட பதற்றத்தைப் போக்க மேலதிகப் பொலிசார் வரவழைக்கப்பட்டதோடு உலங்கு வானூர்தியின் உதவியும் நாடப்பட்டது. வானில் வட்டமிட்ட உலங்கு வானூர்தி பொலிசாருக்கு தகவல்களை வழங்கியவண்ணம் இருந்தது. இதனை அடுத்து பஸ்ஸை ஓட்டுனர் திரும்பவும் சிறைச்சாலைக்குள் எடுத்துச் சென்றார்.
இதனிடையே பிறிதொரு இரகசிய வாசல் வழியாக அந்த பஸ் புறப்படத் தயாரானது. இதனை அறிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்வழியையும் சென்று மறித்தார்கள். இதனால் 70 பேரை ஏற்றிக்கொண்டு சிறியரக பஸ் ஒன்று வேறு திசையால் விமானநிலையம் நோக்கிப் புறப்பட்டது.
இது லண்டன் ஸ்ரான்ஸ்ரெட்(Stansted Airport) விமானநிலையம் நோக்கிச் சென்றது. அதில் பயணித்த 70 பேரை இன்று பிரித்தானிய அரசு இலங்கைக்கு நாடுகடத்தியுள்ளது என அறியப்படுகிறது.
போதுமான ஆர்ப்பாட்டக்காரர்கள் இல்லாததால் இதனைத் தடுக்க முடியவில்லை என ஸ்டாப் டிப்போடேஷன்(STOP DEPORTATION) என்ற அமைப்பினர் தெரிவித்தனர்.
வேற்றின மக்கள் தமிழர்களுக்காகப் போராட்டம் நடத்தியவேளை இப் போராட்டத்தில் சில தமிழர்கள் உடனடியாகச் சென்று கலந்துகொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இனிவருங்காலங்களிலும் இவ்வாறான நாடு கடத்தல் நடைபெற்றால் அதனைத் தடுக்க பாரிய அளவில் தமிழர்கள் முன்வரவேண்டும் என ஸ்ராப் டிபோடேஷன் அமைப்பினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment