Monday, November 7, 2011

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பலாம் என்ற நீதிமன்ற தீர்ப்பை சுவிஸ் அகதிகள் சபை விமர்சனம்

[ திங்கட்கிழமை, 07 நவம்பர் 2011, 12:57.18 AM GMT ]
அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட இலங்கை அகதிகள் நாட்டுக்கு திருப்பியனுப்பலாம் என்று சுவிட்ஸர்லாந்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அந்த நாட்டின் மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன
சுவிட்ஸர்லாந்தின் அகதிகள் சபை,  நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு முதிர்ச்சியற்றது என்று விமர்சித்துள்ளது.
இலங்கையில் இன்னும் இயல்பு நிலை ஏற்படவில்லை என்று அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் இன்னமும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் நிந்திக்கப்படுகின்றனர். தமிழர்களுக்கு எதிரான கைதுகள் தொடர்கின்றன. சித்திரவதைகளும் நடைபெறுகின்றன என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த ஒக்டோபர் 27 ஆம் திகதியன்று சுவிட்ஸர்லாந்தின் பிராந்திய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பொன்றில் இலங்கையின் வடக்கைச் சேர்ந்தவர்களை தவிர ஏனைய இடங்களில் மனித உரிமை மேம்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வடக்கில் இருந்து அகதி அந்தஸ்தை கோரியுள்ளவர்களை தவிர ஏனையவர்கள் திருப்பியனுப்பப்படலாம் என்று அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எனினும் அதனை மனித உரிமைகள் அமைப்புகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பொத்துவில் பிரதேசத்தில் இன்னமும் மனித உரிமை மேம்படவில்லை என்று அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கையில் பாதுகாப்பு முன்னேற்றம்! சுவிஸில் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிகளை திருப்பி அனுப்ப முடிவு
[ வெள்ளிக்கிழமை, 04 நவம்பர் 2011, 03:24.45 PM GMT ]
அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பும் முடிவுக்கு சுவிற்சர்லாந்தின் சமஸ்டி நிர்வாக நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக சுவிற்சர்லாந்து வானொலி தகவல் வெளியிட்டுள்ளது.
தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட  இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதற்கு குடியேற்றத்துக்கான சுவிஸ் சமஸ்டி பணியகம் முடிவு செய்திருந்தது.
ஆனால் திருப்பி அனுப்பப்படும் தமிழ் அகதிகள இலங்கையில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படும், சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் ஆபத்து இருப்பதாக சமஸ்டி நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2009ல் இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, இலங்கையில் பாதுகாப்பு நிலைமைகள் பொதுவாக முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், உறுதிநிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
இதனால் அகதிகளை திருப்பி அனுப்பலாம் என்றும் சுவிற்சர்லாந்து நீதிமன்றம் கூறியுள்ளது.
சுவிற்சர்லாந்து நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினால் ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment