Wednesday, October 26, 2011

பிள்ளைகளை நம்பி என்னால வாழ முடியாது! விவசாயத் தாயின் விருப்பம் இது!!

 (படங்கள் இணைப்பு)




அது யாழ்ப்பாணம் நெல்லியடி மூத்த விநாயகர் கோவிலடி. இறுவாட்டு மண்ணில் வெங்காய அறுவடை நடந்துகொண்டிருக்கிறது.

முதியவர் ஒருவரின் கண்காணிப்பின்கீழ் ஆறேழு பேர் வேலை செய்கிறார்கள். அந்தி மங்குவதற்குள் அறுவடையை முடித்துவிட வேண்டும் என்ற குறிக்கோள் கண்களில் தெரிந்தது.

வாகன இரைச்சலைக்கூடப் பொருட் படுத்தாது கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. சூரியன் அஸ்தமிக்கும் வேளை. கடுமை யான உழைப்பில் களைத்துப்போன பவளம் (64) தன் கைகளைப் பார்த்துப் பெருமூச்சு விடுகிறார்.

முகச்சுருக்கம் வயதின் முதுமையைக் காட்ட, காதோரம் வழிந்தோடிய வியர்வை அன்றைய நாளின் பாரமான பொழுதுகளை நினைவூட்டின. பவளம் சிறுவயதிலிருந்தே விவசாய கூலித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

நாளொன்றுக்கு ஏழு ரூபா சம்பளம் வாங்கிய காலம் முதல் எழுநூற்று ஐம்பது ரூபா சம்பளம் வாங்கும் காலம் வரை மண்ணோடு போராடிக்கொண்டிருக்கிறார்.

வறிய குடும்பமொன்றில் பிறந்ததாகவும் ஆரம்பகாலம் தொட்டே கூலித்தொழில் செய்துவருவதாகவும் எம்மோடு பேசத்தொடங்கினார். "மண்ணோடு மண்ணாகிப்போகும் வரை இந்த மண்ணை நம்பித்தான் வாழ்ந்து வருகிறேன்.

விடிஞ்சதும் தோட்ட வேலை, இருட்ட வீட்டு வேலை என எனது காலம் போகுது. எனக்குப் பிள்ளைகள் இருக்கினம். அவையளை நம்பி என்னால இருக்க முடியாது.

பிள்ளையளும் கூலித்தொழில் தான் செய்யினம். எனக்கெண்டு எனது தேவைகளைச் செய்ய வருமானம் தேவை. அத்துடன் இவ்வளவு நாளும் உழைச்சுப்போட்டு சில மணி நேரம் ஓய்வெடுப்பதற்குக் கூட மனம் இடங் கொடாது.

இப்ப நாளொண்டுக்கு 600 ரூபா கிடைக்கிது. வேலை குறைவான நேரங்களில் இதை விடக் கூலியும் குறைவு. தோட்ட வேலைகள் எதுவுமில்லாமல் வாழ்ந்த காலமும் உள்ளது.

அப்பிடி இருந்த காலத்தில இந்த மண்ணப் பாத்து கண்ணீர் விட்டுக் கதறியிருக்கிறன். என்னைக் காக்கும் இந்தக் கடவுள் கூட எதிரியாய்த் தெரிந்த காலம் அது. இப்போதும் வறுமை தான்.

என்ர பிள்ளைகளுடன் தான் நானும் ஒண்டாய் இருக்கிறன். வீட்டுத் தேவைக் கான செலவுகள் அதிகம். இப்போ எனக்குக் கிடைக்கும் வருமானம் ஓரளவுக்குப் போதுமானது.

ஏண்டாலும் வேறு ஏதும் தேவைகள் ஏற்படும்போது சமாளிக்க ஏலாமல் போகும். அவ்வாறான நாட்களில எங்களுக்கு வேலை தருவோரிடம் பணம் பெற்றுக்கொள்வேன்.

அந்தப் பணத்துக்காக அவர்களின் தோட்டத்தில வேலையைச் செய்து காசைக்கழிச்சுப் போடுவன். இந்த மண் வளமானது. ஒவ்வொரு அறு வடையின்போதும் அறுவடை காய்கறிகளை தங்கத்தைப் பாதுகாப்பது போலத்தான் பாதுகாப்பம்.

என்னதான் நாங்கள் வறுமையில் பட்டினியோட இருந்தாலும் மற்றோருக்கு உணவு கொடுக்கிறோமே என்ற சந்தோஷமும் திருப்தியும் தான் எங்களை ஆறுதலாய் வாழ வைக்கிறது'எனக் கூறி முடித்தார்.

கவலை தோய்ந்த அவரது முகம் இறுதி வார்த்தைகளைக் கூறும் போது மலர்ச்சி கண்டிருந்தது. எங்கோ ஒரு பகுதியில் உற்பத்தியான விவசாயப் பொருட்களை மற்றுமொரு பகுதி மக்கள் உண்டு மகிழ்கிறார்கள்.

ஆனால் அந்த உழைப்பாளியின் உழைப்பின் உன்னதத்தை வார்த்தைகளில் கூறி விட முடியாது. பவளம் போன்று அங்கு கூலித்தொழில் ஈடுபட்டிருந்த சின்னம்மா (வயது 70), சித்திரம் (வயது 62), சின்னத்தங்காயி (வயது 50) ஆகியோரும் தமது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.

ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவங்களும் தனித்தனியான சோகம் ததும்பிய நெஞ்சை நெருடும் கண்ணீர்க் கதைகள். மண்ணைப்பற்றியும் காலநிலையைப் பற்றியும் அனைத்தையுமே தெரிந்துவைத் திருக்கிறார்கள்.

இறுவாட்டு மண்ணில் விளையும் விவசாய உற்பத்திகள், கால எல்லை, நீர்ப்பசையைக் கண்டு பிடித்தல், விளைச்சலை முன் கூட்டியே அறிதல் என எல்லாவற்றிலும் அனுபவத்தின் முதுமை யால் சிறப்புத் தேர்ச்சியடைந் திருக்கிறார்கள்.

"இதெல்லாம் பள்ளிக்கூடம்“ போய் படிச்சது இல்ல. பரம்பரை பரம்பரையா எங்கட ஆட்கள் சொல்லிக்கொடுத்தது' என்கிறார் சின்னம்மா. "பஞ்சபூதங்களை நம்பி வாழ்கிறோம். கடவுள் கைவிட மாட்டார்' என்ற நம்பிக்கையோடு பேசுகிறார் சித்திரம்.

மிளகாய், வெங்காயம்,புகையிலை, மரவள்ளி என காலத்துக்குக் காலம் பயிரிட்டு உழைத்து வாழும் இவர்களுடைய வாழ்க்கை வித்தியாசமானது.

நாளைய நாளின் எதிர்பார்ப்புகளை விட இன்றைய நாளின் சந்தோஷத்தையே அதிகம் எதிர்பார்க்கிறார்கள். தமிழர் பாரம்பரியத்தில் விவசாயிகளுக்குத் தனி மதிப்புண்டு.

ஆனால் இக்காலத்தில் விவசாயம் செய்வோரை தரக்குறைவாகப் பார்க்கும் நிலை காணப்படுவதாக இவர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

அதனை வெளிப்படையாகச் சொல்லா விடினும் மறைமுகமான கருத்துக் களிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது.

வளரும் சமுதாயத்தினர் இவ்வாறான உழைப்பாளிகளை அப்படி நினைப்பார்களாயின் அது மிகப்பெரிய தவறு என்பதை யாரும் சொல்லித் தெளிய வேண்டியதில்லை.

இவர்கள் பேசிய பல்வேறு விடயங்கள் வாழ்க்கையின் முதிர்ச்சியில் பெற்ற அனுபவத்தின் சிதறல்கள். அவை சிறந்த உதாரணங்களாய் அமைந்தன எனலாம்.

உழைத்து உழைத்து பண்பட்ட அந்த உழைப்பாளிகளுடன் சிலமணிநேரம் செலவிட்டு கனத்த மனதுடன் அங்கிருந்து நாம் திரும்பினோம்.
26 Oct 2011

No comments:

Post a Comment