Thursday, October 20, 2011

லிபிய அதிபர் கடாபி சுட்டுக் கொலை

(படங்கள் இணைப்பு)
நீண்ட நாள் போருக்கு பின் லிபியாவில் உள்ள சிர்டேவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கடாபி சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடாபி 1969ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 42 ஆண்டுகளாக லிபியாவில் சர்வாதிகார ஆட்சி புரிந்துள்ளார். சமீபத்தில் இவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. அமெரிக்கா, சில ஐரோப்பிய நாடுகளின் மறைமுக ஆதரவோடு நடந்த இந்தப் புரட்சிப் படையினர் பல நகர்களைப் பிடித்தனர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி கடாபி பதவியில் இருந்து கவிழ்க்கப்பட்டார். புரட்சிக்காரர்கள் கடாபியின் ஆட்களை சிறைபிடிக்கத் துவங்கினர். இதையடுத்து கடாபி குடும்பத்தார் நாட்டை விட்டே ஓடிவிட்டனர்.

ஆனால் கடாபி லிபியாவிலேயே தலைமறைவாக இருந்தார். அவர் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் புரட்சிப் படை கடாபியின் சொந்த ஊரான சிர்டேவை இன்று கைப்பற்றியுள்ளது.

அங்கிருந்த கடாபியும் கால்களில் குண்டு பாய்ந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் சிர்டேவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கடாபி சுட்டுக் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அவரது உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
20 Oct 2011

No comments:

Post a Comment