Wednesday, September 7, 2011

யாழில் தினம் தினம் அரங்கேறும் சினிமாப் பாணியிலான திருமணங்கள்

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் திருமணங்கள் அதிகளவில் சினிமாப் பாணியில் நடைபெறுவதாகத் தெரிய வருகின்றது. சினிமாவில் காதலியைக் கடத்தும் காதலனின் கதாபாத்திரங்கள் யாழ்ப்பாணத்தில் நிஜமான திருமணங்களில் அரங்கேற்றப்படுகின்றது.

திருமண மண்டபத்தில் மணப்பெண்ணுக்குத் தாலி கட்டிய பின்னர் மணமகனையும் பெண்ணின் தந்தையையும் தாக்கி விட்டு மணப் பெண்ணைக் கடத்திச் செல்ல முற்பட்ட இளைஞர் மண்டபத்தில் கூடியிருந்த மக்களால் பிடிக்கப்பட்டார் சம்பவம் ஒன்று சாவகச்சேரிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சினிமாப் பாணியில் நடத்தப்பட்ட இந்தச் சம்பவம் கடந்த 31 ஆம் திகதி சாவகச்சேரி பகுதியில் உள்ள பிரபல திருமண மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது.

மண்டபத்தில் கூடியிருந்த மக்கள் இளைஞரை விசாரித்த போது மச்சாள் முறையான மணப்பெண்ணை சிறுவயது முதல் விரும்புவதாகவும் தான் விரும்புவது மணப்பெண்ணுக்குத் தெரியாது எனவும் திருமண நிகழ்வில் குழப்பத்தை ஏற்படுத்தி சினிமாப் பாணியில் அழைத்துச் செல்ல முயற்சித்த தாகவும் அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இளைஞரை மண்டபத்தில் உள்ளவர்கள் விசாரித்துக் கொண்டிருக்கையில் மணப்பெண் தாலிகட்டிய கணவருடன் காரில் ஏறிப்பறந்து விட்டார். திருமண ஏற்பாட்டின் பிரகாரம் கடந்த 31 ஆம் திகதி மாலை திருமணப் பதிவும் இடம்பெற்றது.

இளைஞர் திருமண மண்டபத்தில் குழப்பம் ஏற்படுத்தியமை தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை வெளிநாட்டில் உள்ள மாப்பிளைக்கு பெண்ணை அனுப்வுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் வேளையில் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் இரகசியமாகத் திருமணப்பதிவு இடம்பெற்றமை தெரியவந்ததையடுத்து மாப்பிள்ளை குடும்பத்தினர் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

ஊரில் உள்ள உறவுக்காரப் பெண்ணை வெளிநாட்டில் உள்ள தமது மகனுக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர் பெண்ணின் பெற்றோருடன் கலந்து பேசி ஜாதகம் பார்த்து இரு பகுதியினரும் விருந்துகள் வைத்துள்ளனர்.

மணமகனின் பெற்றோருக்கு கிடைத்த ரகசியத் தகவலையடுத்து திருமணப் பதிவுகாரரிடம் விசாரித்த போது திருமணப் பதிவு ஆறு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்தது.

அத்துடன் திருமணப் பதிவுகாரருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பெண்ணின் பெற்றோரும் நிற்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனவே அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தில் சினிமாப் பாணியிலான திருமணங்கள் தினம்தினம் அரங்கேறி வருகின்றமை யாழ்ப்பாணக் கலாசாரத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளது.
07 Sep 2011

No comments:

Post a Comment