Saturday, September 17, 2011

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை தடுத்து விட்டோம் – ஜெனிவா சென்ற சிறிலங்கா அமைச்சர்கள் பெருமிதம்

[ சனிக்கிழமை, 17 செப்ரெம்பர் 2011, 05:09.07 AM GMT ]
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தி விட்டதாக சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஜெனிவா சென்ற சிறிலங்கா குழுவில் இடமபெற்றிருந்த நிமால் சிறிபால டி சில்வா நேற்று கொழும்பு திரும்பிய பின்னரே இவ்வாறு கூறியுள்ளார்.

ஐ.நா பொதுச்செயலர் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமித்த குழுவின் அறிக்கைய ஐ.நா வோ ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையோ விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று உறுப்புநாடுகளின் பிரநிதிநிதிகளிடம் எடுத்துக் கூறியிருந்தாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 40 நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து விளக்கமளித்ததன் மூலம், சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களை ஐ.நா.வில் ஆராயும் முயற்சி தடுக்கப்பட்டதாகவும் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நிபுணர்குழு அறிக்கையை விவாதத்துக்கு எடுத்துக் கொண்டால், சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியானதுமான நடவடிக்கையில் இறங்க நேரிடும் என்று எச்சரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவின் தற்போதைய நிலைமையை நேரில் வந்து அவதானிக்குமாறு பல நாட்டு தூதுவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், நிபுணர்குழு அறிக்கை குறித்து ஜெனிவாவில் ஆராயப்படாது என்றே முழுமையாக நம்புவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அதேவேளை, மனிதஉரிமைகள் பேரவையில் நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக ஆராய்வதற்கு எதிராக, பெரும்பாலான உறுப்பு நாடுகளின் ஆதரவைத் திரட்டியுள்ளதாக சிறிலங்கா குழுவின் தலைவர் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதனால்,ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இந்த விவகாரம் குறித்து ஆராயப்படாது என்ற பெரும் நம்பிக்கை உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த அறிக்கையை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் 18வது கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்காமல் பின்கதவால் புகுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகமான நாடுகள் சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்க தயாராக உள்ளதாகவும், நிபுணர்குழு அறிக்கையை மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க அவை எதிர்ப்பு தெரிவிக்கும் என்றும் சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பக்கசார்பான செயற்பாடுகளுக்கு மத்தியிலும் பெரும்பாலான நாடுகள் தமக்கு உதவ முன்வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நவநீதம்பிள்ளை எல்லா நாடுகளையும் சமமாக நடத்தாமல், குரோத மனப்பான்மையுடன் நடப்பதாக குற்றம்சாட்டியுள்ள மகிந்த சமரசிங்க, அவர் தொடர்ந்தும் ஒரு தலைப்பட்சமாக நடந்தால், அவருக்கு எதிராக பகிரங்கமாக விமர்சிக்கப் போவதாக எச்சரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment