Wednesday, September 28, 2011

நலந்தரும் நவராத்திரி

   


உலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல ஆதிபரா சக்திக்குரிய நவராத்திரி விரதம் இன்று முதல் ஆரம்பமாகிறது. நல்வாழ்வும் நல்வளமும் தந்து எம்மை வாழ வைக்கும் அம்பிகையின் அருள் சுரக்கும் அற்புத விரதம் இந்த நவராத்திரியே.

சிவபெருமானுக்கு ஒரு நாள் விரதம் சிவராத்திரி. ஆனால் இந்த அம்பிகைக்கு ஒன்பது நாள் விரதம் நவராத்திரியாகும். இந்த நவராத்திரி ஒன்பது நாளும் அம்பிகையை வேண்டி விரதம் நோற்கப்படுகிறது. முதல் மூன்று நாட்களும் வீரம் வேண்டி துர்க்கை அம்மனையும் நடு மூன்று நாட்களும் செல்வம் வேண்டி மகாலஷ்மி அம்மனையும் இறுதி மூன்று நாட்களும் கல்வியை வேண்டி சரஸ்வதித் தாயையும் வணங்கப்படுகின்றது.

பத்தாம் நாள் விஜயதசமி எனப்படுகின்ற வெற்றித்திருநாள். அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாமே என்ற நோக்கில் இந்த நவராத்திரி நாட்கள் புனிதமும் புண்ணியமும் நிறைந்த மகோன்னத நாளெனக் கருதப்படுகிறது. இந்த நவராத்திரி ஆலயங்களில் மட்டுமன்றி பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் வங்கிகள், வியாபார ஸ்தலங்கள், உற்பத்தி நிறுவனங்கள் என்று இன்னோரன்ன பல இடங்களிலும் கொண்டாடப்படுகின்றது. இந்த மூன்று சக்திகளுமே, உலகை ஆட்டிப் படைக்கின்றனர். நவராத்திரி விரதம் அனுஷ்டித்தால் மனித வாழ்க்கையிலே நல்ல தைரிய வீரமும் செல்வமும் கல்வியும் கைவரப் பெற்றுச் சீரோடுஞ் சிறப்போடும் வாழலாம். ஆகவே இன்று தொடங்குகின்ற நவராத்திரி மஹோற்சவம் எமக்குக் கிடைத்திருக்கும் ஓர் அரிய வாய்ப்பாகும். இந்த ஒன்பது நாளும் ஒரு நேர உணவு உபவாசமிருந்து ஆதிபராசக்தியான உமையவளை துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி என்ற ஓரொழுங்கில் சக்தி மூர்த்தமாக வழிபட்டு வாழ்வின் சகல சௌபாக்கியங்களையும் பெற்றுக் கொள்வதே உத்தம மார்க்கமாகும்.

சில வீடுகளில் கொலு வைத்து வழிபடும் மரபுமிருந்து வருகின்றது. அழகழகான பொம்மைகளையெல்லாம் மிக்க அழகாக அடுக்கி வைத்து பூஜை வழிபாடுகளியற்றி தோத்திரங்கள் நாமாவளிகளைப் பாராயணஞ் செய்து கும்பிடுவது உத்தமம்.

சில இடங்களில் கன்னிப் பெண்களை அம்பிகை போன்று அலங்காரஞ் செய்தும் மாலைகள் சூட்டி வழிபாடி இயற்றுவதும் சிறந்த நிகழ்வாகும்.

இத்தகைய சிறப்பு மிக்க நவராத்திரி விழாவில் குமாரி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா, சரஸ்வதி என்ற வடிவில் மூர்த்தமென நினைந்து வணங்கி மகிழ்வர். இந்தப் புனிதம் மிக்க புண்ணிய நவராத்திரி நாட்களில் அம்பிகையை போற்றித் துதிக்கின்ற சகல கலாவள்ளி மாலை, அபிராமியந்தாதி, மீனாட்சி பிள்ளைத் தமிழ் முதலானவற்றை ஓதி மகிழ்வர்.

இந்த நவராத்திரிக்கு மகிஷாசுரமர்த்தனி எனப்படுகின்ற தேவி வழிபாடும் உண்டு. கொடுமைகள் இயற்றிய மகிஷாசுரனைச் சங்கரித்தமையில் அம்பாளுக்கு இந்தப் பெயர் வந்தது. புரட்டாதி மாத வளர் பிறைப் பிரதமை முதல் நவமி ஈறாக ஒன்பது நாள் அனுஷ்டிக்கப்படும் இந்த நவராத்திரி பத்தாம் நாள் விஜயதசமியாகும். இந்த நாள் வெற்றித் திருநாள் எனப்படும்.

குழந்தைகளுக்கு ஏடு துவக்குகின்ற வித்தியாரம்பமும் இன்று விஜயதசமி நாளிலேதான் செய்யப்படுகின்றது. இதைத் "தசரா' என்றும் மானம் பூ எனவும் அழைப்பர். மகாநோன்பு என்பதே மானம் பூ என்று மருவியதாகவும் கருதப்படுகிறது. இந்த விஜயதசமி நன்னாளிலே தொழில் செய்கின்ற ஆயுதங்களை வைத்து ஆயுத பூஜையும் நடைபெறுவது வழக்கம். இந்த நாளிலேதான் வாழைவெட்டு நிகழ்வும் இடம்பெறுகின்றது.

ஆகவே நவராத்திரி விரதம் அனுட்டித்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைப்பது உறுதி. இன்று தொடங்குகின்ற இவ்விரதத்தினை முறையாக அனுட்டித்து புனிதப் பிறவியாகிய மனிதப் பிறவி எடுத்ததன் பலனைப் பெற்றுய்வோமாக!
. 28 Sep 2011

No comments:

Post a Comment