Tuesday, September 20, 2011

சிங்கள மக்களுடன் ஐக்கியமாக வாழ்வது என்பது எமது உரிமைகளை விட்டுக்கொடுத்து வாழ்வது அல்ல!- மனோ கணேசன்

[ செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2011, 10:43.28 AM GMT ]
 நாங்கள் விரும்புவது கொழும்பிலே வாழும் சகோதர சிங்கள மக்களுடன் ஐக்கியமாகவும், சமத்துவமாகவும் வாழுகின்ற ஒரு எதிர்காலத்தை தலைநகர தமிழ் பேசும் மக்களுக்கு உறுதிப்படுத்துவதாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
கொழும்பு என்பது பல இனத்தவர் வாழுகின்ற மாநகரம் என்பது எங்களுக்குத் தெரியும். கொழும்பிலே நாம் எமது சகோதர இனத்தவர்களுடன் ஐக்கியமாக வாழ வேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரியும். அதேபோல் ஐக்கியமாக வாழ்வது என்பது எமது உரிமைகளை விட்டுக்கொடுத்து வாழ்வது அல்ல என்பதுவும் எங்களுக்குத் தெரியும்.
நாங்கள் விரும்புவது கொழும்பிலே வாழும் சகோதர சிங்கள மக்களுடன் ஐக்கியமாகவும், சமத்துவமாகவும் வாழுகின்ற ஒரு எதிர்காலத்தை தலைநகர தமிழ் பேசும் மக்களுக்கு உறுதிப்படுத்துவதாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் மட்டக்குளி, கதிரானவத்தையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தெரிவித்தார்.
அதன்போது கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
கொழும்பு மாநகரத்தின் வடமுனையான இந்த இடத்திலிருந்து நான் உரையாற்றுகின்றேன். எமது குரல் கொழும்பு மாநகரம் முழுக்க ஒலிக்கின்றது. அது வெள்ளவத்தை பாலத்தை தாண்டி கொழும்பிற்கு தெற்கே தெகிவளை-கல்கிசை மாநகரத்திலும் ஒலிக்கின்றது. அதேபோல் நாகலம் வீதி பாலத்தை தாண்டி கொலொன்னாவை நகரத்திலும் ஒலிக்கின்றது.
இந்த பிரதேசங்கள் முழுக்க வெற்றிச் சின்னம் ஏணி என்ற கோ~ம் தெளிவாக எதிரொலிக்கின்றது. எமது இந்த வெற்றி பேரிகையை பொறுத்துக்கொள்ள முடியாத பொறாமைக்காரர்கள் பலர் எமக்கு எதிராக வாயில் வந்ததையெல்லாம் பேசிக்கொண்டு திரிகிறார்கள்.
பெரும்பான்மை கட்சிகளுக்கு வாக்குகளை வாங்கிக்கொடுப்பதற்காக போட்டியிடுபவர்கள் தோல்வியை தாங்க முடியாமல் தடுமாறுகிறார்கள். ஏனென்றால் இவர்கள் செல்லும் இடங்களிலெல்லாம் தமிழ் மக்கள் எங்கள் வாக்கு தன்மானச் சின்னம் ஏணிக்கே என்று கூறிவருகிறார்கள்.
இவர்களில் சிலர் கொழும்பு என்பது பல இனங்கள் வாழுகின்ற மாநகரம் என்ற மாபெரும் உண்மையை புதிதாக கண்டுபிடித்து எங்களுக்கு பாடம் நடத்த நினைக்கின்றார்கள். சிங்கள சகோதர்களுடன் நாங்கள் வாழ்கின்றோம். ஐக்கிய இலங்கைக்குள்ளே அவர்களுடன் ஐக்கியமாக வாழவே நாம் விரும்புகின்றோம்.
அதேவேளையில் சிங்கள சகோதர்கள் அனுபவிக்கும் மொழியுரிமை, வாழ்வுரிமை, பாதுகாப்பு உரிமை, கல்வி உரிமை, தொழில் உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் எமது மக்களுக்கும் சமத்துவமாக கிடைத்திட வேண்டும் என்பதுவே எங்களது நோக்கமாகும்.
சிங்கள மக்களுடன் நல்லுறவை பேணுவதில் நான் எப்பொழுதும் அக்கறையாக இருக்கின்றேன். இதையே நான் எங்களது தேர்தல் பிரசாரத்தின் முதல் ஊடக செய்திக்குறிப்பில் தெளிவாக தெரிவித்திருந்தேன்.
 2004ம் வருடம் நான் இரண்டாவது முறையாக பாராளுமன்றத்திற்கு சென்றபொழுது எனக்கு சிங்களம் மேடையிலே பேசத் தெரியாது. ஆனால் ஒரே வருடத்தில் சிங்கள மொழியை முயற்சி செய்து கற்றுக்கொண்டேன்.
பாராளுமன்றத்திலும், மேடைகளிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் சிங்கள மொழியில் சிங்கள சகோதரர்களுக்கு எமது மக்களின் பிரச்சினைகளை தொடர்ச்சியாக எடுத்துச் சொல்லும் தமிழ் அரசியல்வாதி இன்று நான் மாத்திரமே.
எங்களது கொழும்பு, தெகிவளை-கல்கிசை, கொலொன்னாவை வேட்பாளர் பட்டியல்களிலேயே ஒட்டுமொத்தமாக சுமார் 20 சிங்கள வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். தெகிவளை-கல்கிசை மாநகரசபையின் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் நண்பர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன ஒரு பெருமைமிக்க கண்டிச் சிங்கள தலைவர் ஆவார்.
எனவே கொழும்பிலே சிங்கள சகோதரர்களுடன் ஐக்கியமாக வாழ்வதுபற்றி எங்களுக்கு எவரும் பாடம் நடத்த தேவையில்லை. இதனாலேயே ஆளுகின்ற கட்சிக்கும், பிரதான எதிர்கட்சிக்கும் இடைப்பட்ட முரண்பாட்டு சண்டையில் சிக்கித் தவிக்காமல் தனித்துவமாக எமது சின்னத்தில் நாம் போட்டியிடுகின்றோம்.
எமது சின்னத்திற்காக வழங்கப்படும் ஒவ்வொரு வாக்கும் எமது ஜனநாயக அரசியல் சக்தியை கொழும்பிலே உறுதிப்படுத்துகின்ற வாக்காகும். அந்த வாக்கு தொகையை அடிப்படையாக வைத்துக்கொண்டே ஆளுகின்ற அரசாங்கத்துடனும், ஏனை பெரும்பான்மை கட்சிகளுடனும் எம்மால் பேரம்பேச முடியும்.
வாக்குகள் இல்லாமல் எப்படி பேரம்பேச முடியும்? எந்தவித வாக்கு வங்கியும் இல்லாத தனிநபர்களை ஆளுகின்ற அரசாங்கமும், பிரதான பெரும்பான்மை எதிர்கட்சிகளும் மதிப்பதில்லை. இவர்களையெல்லாம் பெரும்பான்மை கட்சி தலைவர்கள் கருவப்பில்லையாகவே பயன்படுத்துகின்றார்கள்.
ஏனென்றால் பேரம்பேசுவதற்கு வாக்குவங்கி இருக்கவேண்டும். மக்களின் ஆதரவு இல்லாத இவர்களால் பேரம்பேச முடியாது. பெரும்பான்மை தலைவர்கள் கொடுப்பதை மாத்திரம் வாங்கிக்கொண்டு, அவர்கள் சொல்லிக்கொடுப்பதை மாத்திரம் கிளிப்பிள்ளைகள்போல் பேசுவதற்கு மாத்திரமே இவர்களுக்கு உரிமைகள் வழங்கப்படுகின்றன.
தமிழ் மக்களுக்கு சிந்திக்க தெரியும். எனவே இத்தகைய தனிநபர்களுக்கு எமது மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். எனவே இந்த பெரும்பான்மை கட்சி தமிழ் வேட்பாளர்கள் எமக்கு போட்டியில்லை.

No comments:

Post a Comment