Sunday, September 18, 2011

சாவகச்சேரி சம்பவம்! இராணுவத்தினரின் கிறீஸ் பூதக் கதையை மறுக்கிறார் இளைஞனின் சகோதரி

[ ஞாயிற்றுக்கிழமை, 18 செப்ரெம்பர் 2011, 06:13.19 AM GMT ]
எங்கள் முகாம் பகுதியை அண்டி அடர்ந்த பற்றைக்காடு. அங்கே மறைந்து ஒளிந்திருந் தான் நிர்வாணக் கோலத்தில் இளைஞன் ஒருவன். அவ்வழியே வந்த படையினரைக் கண்டு பதுங்கியிருந்த இளைஞன் தலைதெறிக்க ஓடினான். இராணுவமுகாம் பகுதியை நோக்கியே அவன் ஓடினான்.
இவ்வாறு கிறீஸ் பூதம் பாணியில் நேற்றைய தினம் காலை சாவகச்சேரி, கல்வயல் பகுதியிலுள்ள 11 ஆவது இராணுவத் தளத்துக்கு அருகில் நடந்த சம்பவத்தை விவரித்தார் அதன் பொறுப்பதிகாரி கேணல் ஹேமரத்ன.
இந்த இளைஞனை மடக்கிப் பிடித்தனர் எமது படையினர். இளைஞனின் பெயர் இராமையா காண்டீபன் (வயது 26). சாவகச்சேரி, சங்கத்தானைப் பகுதியைச் சேர்ந்தவர். இவரை நாம் சாவகச்சேரிப் பொலிஸாரிடம் ஒப்படைத்து விட்டோம் என்றும் கேணல் குறிப்பிட்டார்.
சம்பவம் குறித்து அவர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் இருந்தவாறு விவரித்தார்.
அவர் கூறியதாவது:
11 ஆவது இராணுவ படைத் தளத்துக்குப் பின்புறமாகவுள்ள அடர்ந்த பற்றைக்குள் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக சந்தேகத்துக்கிடமான முறையில் ஒளித்திருந்தார்.
கல்வயல் வீதி வழியாக இராணுவத்தினர் சென்று கொண்டிருந்த போது இன்று காலை 7.30 மணியளவில் (நேற்று) அந்த இளைஞர் பற்றைப் பகுதியில் இருந்து இராணுவ முகாமை நோக்கி நிர்வாணமாக ஓடினார் அதனை அவதானித்த இராணுவத்தினர் அவரை மடக்கிப் பிடித்தனர்.
பிரஸ்தாப இளைஞர் சாவகச்சேரி சங்கத்தானையைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்தது. அந்தப் பற்றைக்குள் அந்த இளைஞரின் சைக்கிள், ரீசேட், அரைக் காற்சட்டை ஆகியன மீட்கப்பட்டுள்ளன. உடனடியாக இளைஞர் சாவகச்சேரிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சாவகச்சேரிப் பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டபோது
இராணுவ பொறுப்பதிகாரியினால், முகாமை அண்டிய பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியதாக இளைஞர் ஒருவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அந்த இளைஞர் மீதான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம்.
அவர் உளரீதியான பாதிப்புக்கு உட்பட்டவராக இருக்கலாம் எனக் கருதுகிறோம். அவரை சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. அந்த அறிக்கையின் பிரகாரம் அவர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்றார்.
பொலிஸ் நிலையத்துக்கு வந்திருந்த பிரஸ்தாப இளைஞரின் சகோதரரிடம் என்ன நடந்தது என்று கேட்டபோது அவர் சொன்னார்:
சங்கத்தானை அரசடியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக காண்டீபன் சைக்கிள் திருத்தும் கடையை நடத்தி வருகிறார். இவரை கல்வயல், சாவகச்சேரி, சங்கத்தானை போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
இன்று காலை 8.30 மணியளவில் (நேற்று) சாவகச்சேரியிலுள்ள வி.எம்.கே என்ற கிறேசருக்கு கற்தூண் எடுப்பதற்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச் சைக்கிளில் சென்றார்.
அவரை இராணுவம் வழி மறித்து தாக்கியுள்ளது. அதனை நேரில் பார்த்த ஒருவர் எனக்கு தொலைபேசி மூலம் தகவல் தந்தார்.
உடனேயே சம்பவ இடத்துக்குச் சென்றேன். காண்டீபன் துவாய்த் துண்டு மட்டும் அணிந்த நிலையில் இருந்தார். இராணுவமே காண்டீபன் அணிந்திருந்த ஆடைகளைக் களைந்து விட்டுத் தாக்கியதைப் பலரும் அவதானித்துள்ளனர் என்றார்.
பலாலி படைத் தலைமையகத்தின் ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் யாழ். நகரிலுள்ள இராணுவ சிவில் அலுவலகத்துக்கு நேற்று செய்தியாளர்கள் அழைக்கப்பட்டு அங்கிருந்து இராணுவத்தினர் தமது வாகனத்தில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கும் ஏற்றிச் சென்றதுடன் சம்பவ இடத்துக்கும் கூட்டிச் சென்றனர்.
இதேவேளை, பிடிபட்ட இளைஞரை நேரில் காண்பிக்குமாறு செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு 11 ஆவது இராணுவ படைப்பிரிவு பொறுப்பதிகாரியும் சாவகச்சேரி பொலிஸ் பொறுப்பதிகாரியும் மறுத்து விட்டனர்.
இது இவ்வாறிருக்க, பிரஸ்தாப இளைஞன் நேற்றுப் பிற்பகல் யாழ். போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார்.
இது தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரியிடம் கேட்டபோது:
இராமையா காண்டீபன் என்ற இளைஞன் எந்த விதமான மன நோய்க்கும் உட்பட்டிருக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment