Thursday, September 15, 2011

உள்ளே போங்கோ உள்ளே போங்கோ எண்டு மாரித்தவக்கை போல கத்தினன்.

 (படங்கள் இணைப்பு)
அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் நடத்துநர்களாகக் கடமையாற்றுவோரின் பாடு பெரும் திணட்டாட்டமாகவுள்ளது.


அதாவது பேருந்தில் ஏறும் பயணிகளிடத்தில் நடத்துநர்கள் 'தள்ளிப் போங்கோ" 'உள்ளே போங்கோ" என்ற வசனங்களை அதிகம் பயன்படுத்துவார்கள்.

இவ்வாறு கூறியும் அதனைச் செவிமடிக்காது நிற்பவர்களின் முதுகில் தட்டித் தம்பி உள்ளே போடாப்பா, தங்கச்சி உள்ளே போம்மா என்று தெரிவிக்கும் நேரங்களும் வருவதுண்டு.


ஆனால் தற்போது இவ்வாறான செயற்பாடுகளைச் செய்வது என்பது மிகுந்த கஸ்டமாக இருப்பதாக பஸ் நடத்துநர் ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறு தெரிவித்த அவர், தான் தற்போது யாருடைய முதுகிலையும் தட்டிச் சொல்லுவதில்லை என்றார். அதன் பின், தான் அனுபவித்த ஒரு சம்பவத்தை விளக்கினார்,

தம்பி ஒருக்காக நான் நடத்துநராக நிண்ட பஸ்ஸில சரியான சனம். தாங்க முடியல. அப்ப எல்லாரும் உள்ளே போங்கோ உள்ளே போங்கோ எண்டு மாரித்தவக்கை போல கத்தினன்.

ஆனால் அதுகள் காதுல விழுத்துற மாதிரி இல்லை. அப்ப பின்ன நான் என்ன செய்தன். பக்கத்தில நிண்ட ஒருத்தனிட்ட, தம்பி கொஞ்சம் உள்ளே போடாப்பா எண்டு முதுகில தட்டினன். அவன் திரும்பிப் பார்த்தான் ஒரு பார்வை. அப்பத்தான் தெரியும் அது தம்பி இல்லை தங்கச்சி எண்டு.

என்ன தங்கச்சி? தம்பியிண்ட காச்சட்டையும் ரீசேட்டையும் மாறிப் போட்டுட்டு வந்திட்டியே எண்டு கேட்டேன். ஒருக்கா முறைச்சுப் பார்த்திட்டு உள்ளே போட்டாள்.

அப்ப பாருங்களன் எங்கட பொம்பலைகள் காச்சட்டைகளோட அலையுதுகள்.

இப்படி ஒரு நாள்தான் ஒருக்கா சனம் நெருக்க நான் எல்லாரும் முன்னுக்குப் போங்க முன்னுக்குப் போங்க எண்டு கத்தினன்.

ஆனால் யாரும் கேட்கிறதாக இல்லை. அப்ப பக்கதில நிண்ட தங்கச்சியிட்ட, தங்கச்சி உள்ளே போம்மா என்று சாடையாச் சுரண்டிச் சொன்னன். ஏனெண்டால் பொம்புலப் பிள்ளையிட்ட முதுகில தட்டிக்கிட்டிச் சேட்டை விட்டால் நிக்கிற சனம் முழுக்க நம்மல மெய்ச்சுப்போடும்.

அதனால சுரண்டிச் சொல்ல, அது திரும்பிப் பார்த்துச் சிரிச்சுது. அட! தங்கச்சியில்லை அது தம்பி. காதில தோடும் குத்தி, தலையும் வளர்த்துக் கொண்டு முப்பத்திரண்டு பல்லையும் காட்டிக் கொண்டு நிக்குது.

அப்ப நான் சொன்னன் ஏண்ட தம்பி! ஒரு பாவாடை சட்டையும் போடாயன். நல்லா இருந்திருக்கும். என்றேன்.

என்ன செய்வது ஆண்பால், பெண்பால் எனப் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு நம்மட பிழைப்பு யாழ்ப்பாணத்தில இருக்குது என்றார்.

பெண்கள் ஆண்களின் ஆடைள் அணிவதும் ஆண்கள் பெண்ளைப் போன்று தோடு குத்தியும் தலைவளர்க்கும் கலாசாரம் தற்போது யாழ்ப்பாண இளைஞர், யுவதிகளிடத்தில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
15 Sep 2011

No comments:

Post a Comment